சிறு வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களை ஆரம்பிக்கும் போது தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்
இன்று மிகப்பெரிய அளவில்ஆலமரம் போல் வளர்ந்து நிற்கும் பெரிய நிறுவனங்களின் ஆரம்ப கட்டம் விதை போல் தோன்றிய ஒரு சிறிய யோசனையில் உருவானதாகும். அந்த யோசனையின் அடிப்படையில் அவர்கள் தொகுத்த வணிக திட்டமும், நிதிப் பற்றாக்குறையை போக்க எடுத்த முயற்சிகளும், அற்புதமான சந்தைபடுத்துதல் முடிவுகளும் பெரிய நிறுவனங்களாக வெற்றியடைய வழிவகுத்துள்ளது. அதேபோல் உங்களுக்கும் ஏதேனும் சிறிய வணிகம் சார்ந்த தொழில் தொடங்க வேண்டும் என்றால் அத்தைய திட்டமிடுதலை எவ்வாறு, எங்கு செய்ய வேண்டும் என்ற புரிதலுடன் கடின உழைப்பை செலுத்தினால் வெற்றி அடைவது நிச்சயம். எந்த ஒரு சிறிய தொழில் தொடங்குவதற்கு முன்பும் சில அடிப்படை ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சில முக்கிய முடிவுகளை மேற்கொள்வது அவசியமாகிறது. இந்தக் கட்டுரை அத்தகைய அடிப்படை ஆராய்ச்சியின் முக்கியத்துவம் மற்றும் வழிமுறைகளை உங்களுக்கு உணர்த்துவதால், அதில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் மற்றும் சந்தேகங்களை தீர்த்து தகுந்த நடவடிக்கைகளை எடுக்க உதவும்.
1: சந்தை நிலவரங்களை தெரிந்து கொள்வது
நீங்கள் இருக்கும் நாட்டின் சூழ்நிலையை பொருத்து, நீங்கள் தொழில் தொடங்கும் ஊரின் நிலவரத்தை அறிந்து அதற்கு ஏற்ற வகையில் உள்ள தொழிலை பற்றி சிந்திப்பதே உங்கள் வணிக திட்டத்தின் முதல் படியாகும். ஏனென்றால் உங்களை சுற்றியுள்ள இடம் மிகுந்த குளிர் பிரதேசமாக இருக்குமேயானால் அங்கு சென்று குளிர் சாதனங்களை விற்பது என்பது மிகவும் முட்டாள்தனமான யோசனையாகும். ஆகவே எந்த வகையான பொருட்களை விற்பனை செய்தால் உங்களது வணிக வளர்ச்சியை மேம்படுத்த முடியும் என்ற யோசனையுடன் செயல்படுவது முக்கியம். உங்களுடைய வாடிக்கையாளர்கள் யார், அவர்களுக்கு என்னென்ன பொருட்கள் அன்றாட வாழ்வில் தேவையுள்ளது என்பதை பற்றி சிந்தித்து அதற்கு ஏற்ற வகையில் வணிக திட்டங்களை உருவாக்குவது நல்லதாகும். சந்தை நிலவரத்தை தெரிந்து கொள்வதில் உள்ள மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், உங்களது எதிர்கால போட்டியாளர்களை பற்றி தெரிந்து கொண்டு உங்களுக்கு பின்னாளில் ஏற்படும் பெரும் கஷ்டங்களை தவிர்க்க உதவுவதாகும். எனவே நீங்கள் தொழில் தொடங்குவதற்கு முன்பு, அந்தத் தொழிலுக்கு எந்த மாதிரியான வரவேற்பு இருக்கிறது எத்தகைய போட்டியாளர்களை நீங்கள் எதிர்காலத்தில் சந்திக்க வேண்டும், அவர்களை எவ்வாறு சமாளிக்க வேண்டும் போன்ற ஆராய்ச்சிகளுக்கு சிறிது பணம் செலவழித்தாலும் நல்ல பயனளிக்கும் கூடியவகையில் முடிவுகளை எடுக்க உதவும்.
2: வணிகத் திட்டத்தை உருவாக்குதல்
உங்களது சந்தை நிலவர ஆராய்ச்சிக்குப் பின்னர் எடுக்க வேண்டிய முக்கிய செயல்பாடு என்னவென்றால் உங்களது முழு திட்டத்தையும் எழுத்துப்பூர்வமாக வடிவமைப்பது ஆகும். பெரும்பாலான மக்கள் தங்களது யோசனைகளை எழுத்துப்பூர்வமாக வைக்காமல் தங்களது மனதுக்குள்ளே வைத்து செயல்படுவதால் ஏதேனும் ஒரு சில முக்கிய நடவடிக்கைகளை தவற விடும் வாய்ப்பு உள்ளது. உங்களது வணிக திட்டத்தை இரண்டு வகையான வழிகளில் அமைக்க வேண்டும். குறுகிய கால திட்டம் மற்றும் நெடுங்கால திட்டம் என இரண்டு வகையான வணிக திட்டத்தை உருவாக்கி அத்தகைய திட்டங்களை வெற்றி அடைவதற்கான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். நீங்கள் அமைக்கும் ஒவ்வொரு குறுகிய கால திட்டத்தின் குறிக்கோளும் நெடுங்கால திட்டத்தை மிக விரைவில் அடைவதற்கான நடவடிக்கையாக இருத்தல் அவசியம்.
3: வணிக இலக்குகளை அமைத்தல்
வாழ்க்கை மட்டுமல்லாது நீங்கள் செய்யும் தொழிலும் இலக்கை நோக்கிய பயணம் இருந்தால் மட்டுமே உங்களது வணிக வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துக்கொண்டு போக முடியும். எந்த ஒரு போட்டியிலும் நீங்கள் இலக்கை அடையும் போது மட்டுமே உற்சாகம் ஏற்படும் அதேபோல் நீங்கள் செய்யும் தொழில் உங்கள் இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அதற்கேற்ற வகையில் உள்ள செயல்பாடுகளை செய்து வெற்றி அடையும் போது மிக அளவற்ற மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களது இலக்கை நீங்கள் நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவிலான வெற்றியை அடையக் கூடியதாக இருப்பது அவசியம். பெரும்பாலனவர்கள் செய்யக்கூடிய தவறு என்றால் என்னவென்றால் தங்களது சூழ்நிலையை சரியாக புரிந்து கொள்ளாமல் சந்தை நிலவரத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்து கொண்டு அதை எட்ட முடியாமல் தோல்வியை சந்தித்து வருத்தப்படுகிறார்கள். இத்தகைய பெரும் இலக்கை நிர்ணயித்தல் உங்களது மன அளவிலும் உடல் அளவிலும் சோர்வு ஏற்பட்டு அடுத்த கட்டத்திற்கு உங்களது வணிக திட்டத்தை செயல்படுத்த முடியாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆகையால் நீங்கள் நினைக்கக்கூடிய இலக்கு என்பது உங்களது சக்திக்கு உட்பட்ட அளவில் உள்ளதாகவும் நிதி நிலைமைக்கு உட்பட்டதாகவும் இருத்தல் வேண்டும்.
4: வணிக செலவுகளை புரிந்துகொள்வது
இப்போது உங்கள் சந்தை நிலவரத்தை புரிந்து கொண்டு திட்டங்களை ஏற்படுத்தி இலக்குகளை நிர்ணயித்த பின்பு அதற்கு எந்த வகையான வகையில் செலவுகளை செய்ய வேண்டும் என்ற புரிதல் வேண்டும். நீங்கள் செய்யும் தொழிலில் மூலப் பொருட்கள் வாங்குவதன் செலவு அலுவலகம் அல்லது கடை அமைப்பதற்கான செலவு பணியாளர்களுக்கு கொடுக்கக்கூடிய ஊதிய செலவு போக்குவரத்து செலவு போன்றவற்றை கணக்கில் கொள்ள வேண்டும். நீங்கள் ஆரம்பிக்கும் நேரத்திலேயே உங்களது முழு நிதியையும் முழுவதுமாக செலவிடாமல், தகுந்த திட்டமிடுதல் மூலம் சிறு சிறு பகுதிகளாக பிரித்து அதற்கேற்ற வகையில் செலவு செய்தால் பல்வேறு வகையான நிதி சிக்கலில் இருந்து தப்பிக்க முடியும். பணம் என்பது காய்கனிகளை போல மரத்தில் காயத்தால் நன்றாக இருக்கும் என்ற ஆசை நம் அனைவருக்கும் இருந்தாலும் எதார்த்தமான சூழ்நிலையை புரிந்துகொண்டு வணிகத்திற்கான செலவு செய்தால் மட்டுமே இலக்குகளை சரியான நேரத்தில் அடைய முடியும்.
5: வணிக கட்டமைப்பைத் தேர்ந்தெடுப்பது
நீங்கள் தேர்ந்தெடுக்கும் தொழில் பொருத்து உங்களது செலவு மாறுபடுவதை போலவே உங்களது தொழிலுக்கு ஏற்றவாறு கட்டமைப்பு முறையும் மாறுபடும். அனைத்து தொழில்களுக்கும் ஒரே மாதிரியான திட்டமிடுதல் மற்றும் வளர்ச்சியை பெற முடியாது என்பதை தெரிந்து கொண்டு உங்களது தொழிலுக்கு ஏற்றவாறு உள்ள கட்டமைப்பு சூழ்நிலையை உருவாக்குவது அவசியம். உங்கள் தொழிலுக்கு எந்த இடத்தில் ஒரு அலுவலகமோ அல்லது கடையை நிறுவினால் வளர்ச்சி அடையும் என்பதை புரிந்துகொண்டு அதற்கேற்ற வகையில் உங்களது நிறுவனத்தின் உள்கட்டமைப்பு செய்தல் அவசியம். வாடிக்கையாளருடன் நேரடி தொடர்பு இல்லாத தொழில்களை நீங்கள் செய்வீர்களானால் உங்களது கடை அல்லது அலுவலகத்திற்கான உள் கட்டமைப்பு செலவுகளை குறைத்துக் கொள்வது முக்கியமாகும். அதேபோல் உங்களது வருங்கால வளர்ச்சிக்கு ஏற்றவாறு வகையில் உங்களது உள்கட்டமைப்பு அமைத்தால் பிற்காலத்தில் அடிக்கடி மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
6: சிறு வணிக கடன்களைப் பெறுதல்
உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளைப் போன்று இந்தியாவிலும் தொழில் மற்றும் வணிக வளர்ச்சிக்காக நாட்டுப் பிரஜைகளுக்கு பல்வேறு விதமான தொழில் கடன் உதவிகளை மற்றும் சலுகைகளை அரசாங்கம் செய்து வருகிறது. அதுவே நீங்கள் தொடங்கும் தொழிலுக்கு எந்தமாதிரியான சலுகைகள் கிடைக்கப் பெறுகிறது என்பதை ஆராய்ந்து அதைப் பெறுவதன் மூலம் உங்களது நிதிப் பற்றாக்குறையை சமாளித்து வணிக வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். உங்களது வணிக திட்டத்தை முழுவதுமாக சமர்ப்பித்து வங்கியிலும் அரசாங்க அலுவலகங்களிலும் பல்வேறு விதமான கடன் உதவிகளை பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அரசாங்கம் மட்டுமல்லாது சில தனியார் நிறுவனங்களும் தொழில் வளர்ச்சிக்கான கடன்களை வழங்குகின்றது. அவ்வாறு நீங்கள் தொழில் கடன் பெறும் பொழுது அதற்கு ஏற்ற வட்டி விகிதத்தை முழுவதுமாக ஆராய்ந்து உங்களால் அதன் அழுத்தத்தை உங்களது வணிக வளர்ச்சி மூலமாக அடக்க முடியும் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு செயல்படுவது நல்லது. நீங்கள் ஒருவராக தொழிலை தொடங்காமல் கூட்டு தொழிலாக செய்ய விரும்பினால் முடிவெடுக்கும் ஆதாரங்களை பற்றிய ஆவணங்களை தகுந்தமுறையில் வழக்கறிஞர்கள் முன்னிலையில் தயார் செய்து இறங்கினால் பிற்காலத்தில் ஏற்படும் மன கஷ்டங்களை தவிர்க்க முடியும்.
7: வணிக உரிமங்களைப் பெறுதல்
இந்தியாவைப் பொறுத்தவரையில் நீங்கள் எந்த ஒரு வணிகம் செய்தாலும் அதற்கான உரிமத்தை பெற்ற பிறகே ஆரம்பிப்பது அவசியம். உரிமம் இல்லாமல் செய்யக் கூடிய எந்த ஒரு வணிகமும் அரசாங்கத்தின் உதவிகள் மற்றும் சலுகைகளை பெற முடியாது என்பதோடு மட்டுமல்லாமல் பல்வேறு விதமான அபராதங்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதால் உங்களது நிறுவன திட்டங்களை சமர்ப்பித்து அதற்கேற்ற உரிமத்தை பெறுவது அவசியம். என்ன மாதிரியான வியாபாரம் செய்கிறீர்கள் உங்களது திட்டம் மற்றும் குறிக்கோள் என்ன என்பதைப் போன்ற தெளிவான விளக்கங்களை அரசாங்கத்திற்கு தெரிவிப்பது அவசியம். உங்களது தொழில் மூலம் கிடைக்கக்கூடிய லாபம் மற்றும் செலவுக் கணக்குகளை ஆண்டறிக்கை மூலமாக அரசாங்கத்திற்கு கொடுப்பதன் மூலம் வருவாய் துறை சலுகைகளை பெற முடியும். இத்தகைய உரிமம் மட்டும் கணக்குகளை சமர்ப்பிப்பது உங்களது வளர்ச்சிக்கு மட்டுமல்லாது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் நிறுவனத்திற்கான சரியான வணிக உரிமங்களைப் பெற்ற கணக்குகளை சமர்ப்பித்தல் மூலம் உங்களது இலக்குகளை எந்த விதத்தில் நெருங்கி கொண்டிருக்கிறீர்கள் என்பதும் புலப்படும்.
8: விலை நிர்ணய உத்திகளை கையாளுவது
உங்களது பணிகள் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிப்பது என்னவென்றால் உங்களது விற்பனை பொருள்களுக்கு நீங்கள் விதிக்கக் கூடிய விலையை பொருத்ததாகும். எடுத்துக்காட்டாக சாதாரணமாக ஒரு இடத்தில் விற்கக்கூடிய மதிய சாப்பாட்டின் விலை 50 ரூபாயாக இருக்கிறது மற்றும் விலை உயர்ந்த உணவகங்களில் விற்கக்கூடிய மதிய சாப்பாட்டின் விலை 200 ரூபாயாக இருக்கிறது. இவ்விரண்டு ஸ்தாபனங்களும் தங்களுக்கான லாபத்தை பெற்றுக்கொண்டு தான் தங்களது விற்பனையை காலம் காலமாக தொடர்ந்து வருகிறார்கள் என்பதை நாம் அறிவோம். ஆனாலும் இவை இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன ஏன் என்பதை புரிந்து கொள்ளக்கூடிய அனுபவ மற்றும் வியாபார நுணுக்கங்கள் உங்களுக்கு இருப்பது அவசியம். இதே போல் நீங்களும் உங்களது விற்பனை பொருளுக்கான விலை நிர்ணயத்தை அமைத்தால் மட்டுமே சரியானதொரு லாபத்தை அடைந்து உங்களது தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். பெரும்பாலான மக்கள் செய்யக்கூடிய தவறு என்னவென்றால் ஆரம்ப காலகட்டத்தில் மக்களுக்கு குறைந்த விலையில் வியாபாரம் செய்துவிட்டு நாளடைவில் பல்வேறு காரணங்களால் அதிக விலைக்கு விற்க கருதப்படும் போது வாடிக்கையாளர்களின் மதிப்பை மற்றும் எதிர்பார்ப்பை இழந்து விடுகின்றனர். ஆகவே நீங்கள் எந்த ஒரு தொழிலை செய்தாலும் அதன் விற்பனைக்கு தகுந்த விலை நிர்ணயத்தை ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே செய்வதால் பிற்காலத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை சமாளிக்கக் கூடும்.
9: உங்கள் வணிகத்திற்கான பிராண்டை பிரபலப்படுத்துவது
ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று நினைத்தாலே ஒரு சில நிறுவனங்களின் பிராண்ட் நமக்கு கண் முன்னே வந்து செல்லும் அளவிற்கு தங்களது பிராண்டை மக்கள் மனதில் ஆழமாக பதித்து உள்ளனர். அத்தகைய பெரிய அளவிலான வளர்ச்சியை நீங்கள் முன்னெடுத்து உங்களுடைய வணிகத்தின் பிராண்டை மக்களிடத்தில் பிரபலப்படுத்தும் போது நீங்களும் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். இதற்கான மார்க்கெட்டிங் உத்திகள் பலவற்றை நீங்கள் செய்வதற்கு மிகப் பெரிய தொகையை செலவிட நேரிடும் என்பதால் உங்களது வியாபாரத்திற்கு அத்தகைய பிராண்ட் முன்னிலைப்படுத்த அவசியம் என்பதையும் ஒரு கணம் யோசித்து செயலாற்ற வேண்டும். பெரும்பாலான மக்கள் தங்களது ஆரம்ப காலத்தில் எடுக்கக் கூடிய தொழில் முயற்சியில் பெரிய தோல்விகளை சந்திப்பதற்கு சரியான அணுகுமுறையில் வியாபாரத்தை நடத்தி செல்ல முடியாமல் இருப்பதே காரணமாகும். எந்த ஒரு தொழில் தொடங்குவரும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தொழில் தொடங்கினாலும் சில நேரங்களில் தங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாமல் போவதற்கு பலதடைகள் இருக்கக்கூடும். ஆகவே அத்தகைய தடைகளை வெற்றி படிக்கட்டுகளாக மாற்றி, உங்களது வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று இறுதிக் குறிக்கோள் அடைய பல வணிக திட்டங்களை வகுத்து செயலாற்றும் போது வெற்றி அடைவது உறுதி என்பதை மனதில் வைத்துக் கொள்ளவும்.