இந்தியாவில் சேவை சார்ந்த தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள்
இந்தியாவைப் பொருத்தவரையில் சேவை நிறுவனங்களின் பங்கு மற்றும் வளர்ச்சி மூலமாகவே இந்தியா பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவ்வாறு இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்தாலும் இத்தகைய சேவை நிறுவனங்கள் பற்றிய கலந்துரையாடலும் புரிதலும் பெரும்பாலான மக்களிடம், தொழிலாளர்களிடம், தொழில்முனைவோர்கள் இடமும் இருப்பதில்லை. போக்குவரத்து, மருத்துவம், அழகு மற்றும் ஆரோக்கியம், ரியல் எஸ்டேட், கடை வியாபாரம், நிதித்துறை சார்ந்த சேவை வணிகம், கலை மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த தொழில்கள், அனைத்து வகையான இயந்திரங்கள் சரிபார்ப்பது, பொருட்கள் இடப்பெயர்வு சேவை, தகவல் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போன்ற பலதரப்பட்ட தொழில்கள் சிறு மற்றும் குறு (எஸ் எம் இ / எம் எஸ் எம் இ) தொழில் நிறுவனங்களின் கீழ் வருகின்றன. நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மேலே குறிப்பிட்ட அனைத்து வகையான சேவை சார்ந்த தொழில் வணிகர்களும் தங்களது தங்களது வளர்ச்சியை எளிதாக மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் இருக்கின்றன.
இந்தியாவைப் பொருத்தவரையில் அதிகப்படியான வெளிநாட்டு நிறுவனங்களை முதலீட்டை அடக்கிய துறையாக இந்திய சேவை சார்ந்த தொழில் நிறுவனங்கள் அமைகின்றன. ஏறத்தாழ 40 சதவீத இந்திய மக்கள் இத்தகைய சேவை சார்ந்த தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்களை நம்பி மட்டுமே தங்களது வாழ்வாதாரத்தை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். ஜி வி ஏ என்றழைக்கப்படும் இந்தியாவின் மொத்த மதிப்பு கூட்டப்பட்ட நிர்ணயத்தின் படி சேவை சார்ந்த தொழில் துறை மூலமாக 55% பங்குகள் உள்ளன. இந்த ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக ஏற்பட்ட தடை விளைவாக மிகப்பெரிய வீழ்ச்சியை இந்த சேவை சார்ந்த தொழில் நிறுவனங்கள் சந்தித்தது உள்ளன. இத்தகைய ஆபத்து மற்றும் பேரிடர் காலங்களில் இந்திய அரசும் இத்தகைய சேவை சார்ந்த தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் 20 லட்சம் கோடிக்கு பல்வேறு வகையான புது திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்து உள்ளது. இருந்தபோதிலும், ஒன்றிணைப்பு மற்றும் வருவாயை அடிப்படையாகக் கொண்ட வணிகங்களை மறு ஒதுக்கீடு செய்வது, சேவைத் துறை நிறுவனங்களுக்கு பொருளாதார வளர்ச்சிக்கான சலுகைகளை பயன்படுத்துவது கடுமையாக உள்ளது.
சேவை சார்ந்த தொழில் நிறுவனங்களில் ஏற்படும் சில சவால்கள் மற்றும் அதனால் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் பற்றி கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
பேரிடர் மற்றும் தடை காலங்களில் ஏற்படும் பிரச்சினைகள்
கொரோனா போன்ற தொற்றின் காரணமாக ஏற்பட்ட தடையினால் வாடிக்கையாளர்களை நீங்கள் நேரில் சந்தித்து வணிகம் செய்யும் வாய்ப்பை இழந்து இணையவழி வணிகத்திற்கு மாற்றப்படுகிறார்கள். இத்தகைய இணைய வழி வணிகத்தால் வாடிக்கையாளரை நன்மதிப்பை கொண்டு செயல்பட்டு வரும் பல நிறுவனங்கள் வளர்ச்சி குறைந்து வருகிறது. தயாரிப்பு சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கும் இத்தகைய நோய்த்தொற்று காரணங்கள் இழப்பை ஏற்படுத்தினாலும் சேவை சார்ந்த தொழில்களுக்கு மிக விரைவான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் இருக்கிறது. அன்றாட வாழ்வின் தேவைக்கு ஏற்ற வகையில் உள்ள வியாபாரங்கள் இந்த சேவை சார்ந்த தொழில்கள் இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் போது அனைத்துவிதமான சேவை சார்ந்த தொழில்களையும் நேரடியாக பாதிக்கிறது. இதே பாதிப்பின் மூலமாகவே நிலையானதொரு சேவை நிறுவனங்கள் இந்தியா போன்றதொரு வளர்ந்து வரும் நாடுகளில் மிகப்பெரிய வெற்றியை அடைய முடிவதில்லை.
சேவை சார் தொழில் கடன் கிடைப்பது சிரமம்
இந்தியா போன்ற நாடுகளில் தயாரிப்பு தொழிலுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் மற்றும் அதன் தொழில் வளர்ச்சிக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் கடன் சலுகைகள் சேவை சார்ந்த தொழில்களுக்கு கிடைப்பதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. உற்பத்தி சார்ந்த தொழில்கள் ஆரம்பிக்கும் போது தங்களது தொழில் வடிவங்கள் சார்ந்த ஆவணங்களை சமர்ப்பித்து தொழில் ஆரம்பிக்கும் போதே கடன் பெறும் வாய்ப்பு உள்ளது. ஆனால் சேவை சார்ந்த தொழில்களுக்கு இத்தகைய சலுகைகள் வழங்கப்படுவதில்லை என்ற கொள்கையை மாற்றினால் மட்டுமே இத்தகைய சேவை சார்ந்த தொழில் வளர்ச்சிக்கு ஊக்குவிக்கும் வகையில் அமையும். இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் சேவை சார்ந்த தொழில்கள் பற்றிய முன்னோர்க்கு பார்வை சரியாக அமையாத காரணத்தினால் மட்டுமே இத்தகைய தொழில் கடன் சிக்கல்கள் ஏற்படுகின்றன. சேவை சார்ந்த தொழில்களுக்கு குறிப்பிட்ட லாபத்தை நிர்ணயிக்கும் வாய்ப்பு இல்லாமல் இருப்பதே இத்தகைய சிக்கல்களுக்கு காரணமாகவும் இருக்கிறது. இந்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட வருவாய் மற்றும் செலவுக்கான கணக்கீடுகளிலும் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
வரி விதிமுறைகளில் உள்ள குளறுபடிகள்
இன்றைய அளவில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சிக்கு சேவைத் துறையில் விதிக்கப்படும் பல்வேறு வகையான நேரடி மற்றும் மறைமுக வரிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. சேவைத் துறை சார்ந்த நிறுவனங்களில் ஆடம்பர வரி இறக்குமதி வரி சேவை வரி என மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு வரி கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. எஸ்.எம்.இ / எம்.எஸ்.எம்.எஸ்.இ வணிகங்களை மறுசீரமைத்தல், தொழில்நுட்ப ரீதியாக சேவைத் துறையை அரசாங்க மேம்படுத்துவதற்கு உதவும் வகையில் ஒரு பகுதியாக ஆகிவிட்டதே தவிர, அவர்களுக்கு வரி சலுகைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. சேவை மற்றும் விற்பனை சார்ந்த தொழில் நிறுவனங்கள் 18 சதவீதத்திற்கும் அதிகமான வரிவிதிப்பு பெற்று வரும் நிலையில் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு மிகப்பெரிய சலுகைகளை வழங்கி ஒரு சதவீதம் முதல் 10 சதவீதம் மட்டுமே விதிக்கப்படுகிறது. அந்நிய முதலீட்டின் முக்கிய ஆதாரமாகவும் இந்திய மக்களின் வேலை வாய்ப்பிற்கான சிறந்த வாய்ப்பாகும் அமையக் கூடிய இத்தகைய சேவை நிறுவனங்களுக்கு இந்திய அரசின் மிகப்பெரிய வரிச்சலுகைகள் காட்டாதது ஆச்சரியமாகவே உள்ளது. தற்சார்பு பொருளாதார கொள்கையை நோக்கி இந்தியா சென்று கொண்டிருந்தாலும் இன்றைய காலகட்டத்தில் அதிகமாக நடைமுறையிலுள்ள சேவை சார்ந்த தொழில் நிறுவனங்களை கைவிடுவதே இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்தியா போன்ற பல பல தொழில்கள் செய்யும் நாடுகளில் சீரான வரி விதிப்பு முறையை பின்பற்றாமல் இருந்ததே இத்தகைய வளர்ச்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை கொண்டு வந்த பிறகும் பல்வேறு மாற்றங்களை ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து வருவதால் தொழில்களின் வளர்ச்சி வீதம் சமமாக இருப்பதில்லை.
உள்கட்டமைப்புக்கான அணுகுமுறையில் உள்ள சவால்கள்
வளர்ச்சியடைந்த எந்த ஒரு நாட்டை நீங்கள் எடுத்துக்காட்டாக எடுத்தாலும் அதனுடைய உள் கட்டமைப்பு மிக அருமையாக இருந்திருக்கும். அத்தகைய உள்கட்டமைப்புகாண சரியான பாதையை நோக்கி இந்தியா செல்லவில்லை என்பதே இந்தியா பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கி வருவதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது. உலகத் தரம்வாய்ந்த உள்கட்டமைப்பு சபையை நோக்கி இந்தியா செல்லும் போது மட்டுமே இத்தகைய சேவை சார்ந்த தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவிகரமான செயல்களை செய்ய முடியும். தங்கு தடையின்றி போக்குவரத்து மற்றும் நீர் ஆதாரங்கள் இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் சரியான முறையில் அமையாதது இந்திய சேவை சார் தொழில் நிறுவன வளர்ச்சிக்கு இடையூறாக உள்ளது. உள்கட்டமைப்பு திட்டங்கள் பலவற்றை இந்திய அரசாங்கத்தால் முன்னிலைப்படுத்தி நடத்தி வந்தாலும் இதன் அணுகுமுறை மிகவும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையிலும் சிறப்பானதாகவும் அமையவில்லை என்பதே உண்மை. உள்கட்டமைப்பில் முதலீடு குறைவாக உள்ளது மற்றும் நகரத்தை காட்டிலும் அதிகப்படியான கிராமங்களை இந்தியா கொண்டுள்ளதால் இத்தகைய உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன.
கருத்து மற்றும் விமர்சனம் சார்ந்த வளர்ச்சி
தயாரிப்பு மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு அதனுடைய பொருட்களின் தரத்தை அடிப்படையில் கொண்டு அமைந்திருக்கும். ஆனால் இத்தகைய சேவை துறை சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு உங்களால் கொடுக்கப்படும் சேவைகளை அடிப்படையாகக்கொண்டு வாடிக்கையாளர்கள் கூறும் கருத்து மற்றும் விமர்சனங்கள் அடிப்படையில் மட்டுமே உங்களது சேவை மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் கருத்தின் அடிப்படையில் உங்களது வளர்ச்சி விகிதம் இருக்குமாதலால் வாடிக்கையாளர்களை கையாளும் திறன் இருப்பது மிக அவசியமாகும். தொழில் போட்டி காரணமாக பல்வேறு வகையான எதிர்மறை கருத்துக்களும் பரப்பப்படுவது சேவை நிறுவனங்களின் வளர்ச்சி ஆங்காங்கே இடர்பாடுகளை சந்திக்க வேண்டியதாக உள்ளது.
புது தொழில் நுட்பங்களை அமல்படுத்துவதில் உள்ள பின்னடைவு
உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் கணினி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அதிவேகமாக வளர்ந்து கொண்டு வருகிறது. இந்தியா போன்ற நாடுகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் இணையதள வளர்ச்சி மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து சரியான புரிதல் இல்லாமல் இருக்கின்றனர். சேவை சார்ந்த தொழில் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பின்பற்றாமல் பாரம்பரிய தொழில்நுட்பங்களை மட்டுமே பயன்படுத்தி வருவதால் இவர்களின் வளர்ச்சி விகிதம் மிகவும் மெதுவாக நடைபெறுகிறது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியர்கள் மிகப்பெரிய பங்காற்றிய பின்பும் இந்தியாவில் உள்ள பல்வேறு பட்ட மக்களுக்கு இத்தகைய புதிய தொழில் நுட்பங்களை அமல்படுத்துவதில் ஆர்வம் குறைந்தவர்களாகவே காணப்படுகிறார்கள். இந்திய அரசாங்கம் சேவை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு இத்தகைய புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்திய அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகள் வழங்கினால் இத்தகைய பிரச்சனைகளை தவிர்த்து நல்ல முன்னேற்றம் அடைய முடியும். ஆன்லைன் வர்த்தகத்தில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகளை பற்றிய புரிதலை சேவை சார்ந்த தொழில் நடத்தி வருபவர்களுக்கு புரியவைப்பது மூலம் அவர்கள் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும்.
வேலைவாய்ப்பின்மை காரணமாக ஏற்படும் தொழில் போட்டிகள்
இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை நாட்டில் 30 சதவீதத்திற்கும் அதிகமான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்மை காரணமாக இருந்தாலும் தொழில் துறை மற்றும் அதன் வளர்ச்சி பற்றிய புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள். உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்களிடம் தொழில் போட்டி நிலவினாலும் சேவை சார்ந்த நிறுவனங்களை அதிகப்படியான மக்கள் சார்ந்து இருப்பதால் அதனுடைய லாப விகிதாச்சாரம் மிகவும் குறைவான வழியில் அமைக்க வேண்டியதாக இருக்கிறது. உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்களை தொடங்கி நடத்தி வரும் போது நீங்கள் அந்த பொருட்களுக்கு தேவையான உரிமத்தை பெற்றுக்கொள்ளமுடியும். ஆனால் சேவை சார்ந்த தொழில் நிறுவனங்களில் இத்தகைய உரிமங்களை பெற இயலாது. சேவை சார்ந்த தொழில் தொடங்குவதற்கு எந்தவித முதலீடும் இல்லாமல் அனுபவ அறிவு இருந்தால் மட்டும் போதும் ஆதலால் பெரும்பாலான இளைஞர்கள் இத்தகைய சேவை சார்ந்த தொழில் இறங்குவதால் வெற்றியடைய பல்வேறுபட்ட நபர்களிடமிருந்து போட்டி போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இந்திய அரசாங்கம் இத்தகைய இளைஞர்களுக்கு அனைத்து பிரிவுகளிலும் உள்ள வளர்ச்சியைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தி ஒரு குறிப்பிட்ட தொழிலை அனைவரும் செய்யாமல் பல்வேறுபட்ட தொழில்களுக்கு செல்லும் வகையில் அமைக்க வேண்டும்.