உதிரி பாகங்கள் விற்பனை நிறுவனம் தொடங்கி நடத்துவதற்கான வழிமுறைகள்
தற்போதைய நவீன உலகத்தில் சொந்தமாக தொழில் அல்லது நிறுவனம் தொடங்கி அதை நல்ல முறையில் நடத்தி வரவேண்டும் என்றார் ஆவல் இன்றைய இளைய தலைமுறையினருக்கு இருந்து வருகிறது. உற்பத்தி துறை அல்லது விற்பனை துறை ஆகிய இரண்டு பெரும் பிரிவுகளில் ஏராளமான தொழில் வாய்ப்புகள் தற்போது அமைந்திருக்கின்றன. இதில் விற்பனை துறை சார்ந்த தொழிலான அக்சஸரீஸ் கம்பெனி என்ற உதிரி பாகங்கள் விற்பனை நிறுவனம் என்பது ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது என்று குறிப்பிடலாம். அதாவது, குறிப்பிட்ட ஒரு பொருளை தயாரித்து சந்தைப்படுத்தி அதை வாடிக்கையாளர்களுக்கு விற்கும் நிறுவனங்கள், அந்த குறிப்பிட்ட தயாரிப்புக்கான உதிரி பாகங்களை அவர்களே தயாரித்தாலும் அவர்களே விற்பனை செய்வது என்பது தொழில் ரீதியாக சிரமமான ஒரு விஷயமாகும். அதனால்தான், எந்த ஒரு முன்னணி நிறுவனத்தின் தயாரிப்பாக இருந்தாலும் அதற்கான உதிரி பாகங்கள் வெவ்வேறு சில்லறை விற்பனை நிறுவனங்கள் மூலம் விற்கப்படுகின்றன. தங்களுடைய தயாரிப்பின் சந்தை மதிப்பை கவனத்தில் கொண்டு பெரும்பாலான முன்னணி நிறுவனங்கள் அவர்களுடைய பிரதான தயாரிப்புகளுக்கான அக்ஸசரீஸ் வகைகளை அங்கீகாரம் பெற்ற முகவர்கள் மூலம் விற்பனை செய்கின்றன.
வசியமான அக்சஸரீஸ்
அன்றாட வாழ்க்கையில் நாம் உபயோகப்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும் பல்வேறு வகையான உதிரிபாகங்கள் இருக்கின்றன. உதாரணமாக, நம்முடைய ஆடை வகைகள், வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சார சாதனங்கள், எலக்ட்ரானிக்ஸ் ஐட்டங்கள், அலங்கார பொருட்கள், பர்னிச்சர் வகைகள், கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட் போன் மற்றும் உள் அலங்காரம் உள்ளிட்ட அனைத்து விதமான தயாரிப்புகளுக்கும் உதிரி பாகங்கள் நிச்சயம் தேவைப்படும். அதன் அடிப்படையில் அக்சஸரீஸ் கம்பெனி என்ற உதிரிபாக நிறுவனம் மூலம் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை விற்பதற்கான தொழில் வாய்ப்பு எல்லா காலங்களிலும் இருந்து வருகிறது.
கடந்த 30 வருடங்களுக்கு முன்னால் இருந்த உதிரிபாக பொருட்களின் எண்ணிக்கையை விட இன்றைய நிலையில் அது கிட்டத்தட்ட இரண்டு மடங்குக்கும் மேல் அதிகமாக இருக்கிறது. அதனால் தொழில் முனைவோருக்கான வாய்ப்புகளும் கூடுதலாக இருக்கிறது என்று. சொல்லலாம். குறிப்பாக, அக்சஸரீஸ் வகைகளை ஒருமுறை வாங்கினால் மட்டுமே போதுமானது என்ற நிலை நிச்சயம் இருப்பதில்லை. குறிப்பிட்ட மாதங்களுக்கு பிறகு மீண்டும் அவற்றை புதிதாக வாங்கி பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை அவை நிச்சயம் ஏற்படுத்துகின்றன. அதன் பின்னணியில் உள்ள உளவியல் என்னவென்றால் ஒரு புதிய தயாரிப்பை அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு பதிலாக அக்சஸரீஸ் வகைகளை பயன்படுத்தி அவற்றின் தோற்றத்தை புதியதாக மாற்ற முடியும் என்பது மட்டுமல்லாமல் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையிலும் அதை வாங்க இயலும்.
எளிய பட்ஜெட் அவசியம்
அக்சஸரீஸ் கம்பெனி என்பது மக்களின் கைகளை கடிக்காத விலை உள்ள பொருட்களை விற்பனைக்கு வைத்திருப்பதாகும். அதற்காக தரமற்ற பொருட்களை விற்பனைக்கு வைத்திருப்பது கூடாது. தரம் மற்றும் விலை ஆகிய இரு நிலைகளிலும் நிச்சயம் தொழில் முனைவோர் தனித்தன்மையை நிரூபிக்கும் வகையில் செயல்பட வேண்டும். காரணம், இந்த தொழிலானது நடுத்தர மக்களுக்கான விற்பனையகம் என்ற பொதுவான கருத்து மக்களிடையே உள்ளது. ஏனென்றால், குண்டூசி முதல் கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் வரை விற்பனை செய்யப்படும் என்பதால், வாடிக்கையாளர்களுக்கு உகந்த விலையில் தேவையான பொருட்களை அவர்களே தேர்வு செய்து வாங்குகிறார்கள். குறிப்பாக, பெண்களுக்கான அலங்கார பொருட்கள் எல்லா காலங்களிலும் விற்பனை வாய்ப்பை பெற்றவையாக இருக்கின்றன.
இந்த தொழிலை நடத்த விரும்புபவர்கள் எந்த ஏரியாவில் தொடங்குகிறார்கள் என்பதை பொறுத்து, அவற்றுக்கான விற்பனை வாய்ப்பு மற்றும் போட்டி ஆகியவற்றை அறிந்து கொண்டு தொடங்க வேண்டும். அதாவது, டெக்ஸ்டைல்ஸ் ஷோரூம்கள் நிறைய இருக்கக்கூடிய பகுதிகள் என்றால் அங்கு டெக்ஸ்டைல் சம்பந்தப்பட்ட அக்சஸரீஸ் அதாவது ஆண்களுக்கான ஆடைகள் மற்றும் பெண்களுக்கான ஆடைகள் ஆகியவற்றுக்கானவை மற்றும் நாகரிக உள்ளாடை வகைகளை விற்பதற்கான சந்தை வாய்ப்பு இருக்கும்.
தொழிற்சாலை ஏரியாக்கள்
குறிப்பிட்ட ரக தொழிற்சாலைகள், உற்பத்தி மையங்கள் ஆகியவை அமைந்துள்ள பகுதிகளில் அக்சஸரீஸ் கம்பெனி தொடங்குவதும் நல்ல முயற்சியாக இருக்கும் தொழில் போட்டி அதிகம் இல்லாத பகுதிகளை தேர்வு செய்து விற்பனை முயற்சியை தொடங்கினால் நிச்சயம் தொழில் லாபகரமாக நடக்கும். மேலும், சம்பந்தப்பட்ட பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை மற்றும் உற்பத்தி மையங்களில் உள்ள இயந்திரங்களுக்கான அக்சஸரீஸ் விற்பனை என்பது ஆண்டு முழுவதும் வர்த்தக வாய்ப்புகளை கொண்டதாக இருக்கும்.
பெரிய தொழிற்சாலைகள் அவர்களுக்கான அக்சஸரீஸ் வகைகளை, பிரபல நிறுவனங்களில் இருந்து கொள்முதல் செய்து கொள்வார்கள். ஆனால், சிறிய தொழிற்சாலை அல்லது உற்பத்தி மையம் நடத்துபவர்கள் வெளி மார்க்கெட்டில் இருந்துதான் தொழில் சம்பந்தமான அக்சஸரீஸ் வகைகளை வாங்க வேண்டும். அதனால், தரமாகவும், சரியான விலை கொண்டதாகவும் விற்கப்படும் நிறுவனங்களை அவர்கள் நாடுவது வழக்கம். அதற்கேற்ப சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகங்களை அக்சஸரீஸ் கம்பெனி நடத்தும் தொழில் முனைவோர்கள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அணுகி, கிடைக்கக்கூடிய உதிரி பாகங்கள் பற்றிய சகல விதமான தகவல்களையும் தெரிவிக்க வேண்டும். குறிப்பாக, அவற்றை டோர் டெலிவரி முறையில் விரைவாகவும், நேரடியாகவும் அவர்கள் அளிக்கும் ஆர்டர்களுக்கு ஏற்ப தருவதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த அணுகுமுறை நிச்சயமாக நல்ல விற்பனை வாய்ப்புகளுக்கான அடிப்படையாக இருக்கும்.
- ஆரம்பிக்கப்படும் நிறுவனம் ஒரே ஒரு உரிமையாளருடன் செயல்படுகிறதா அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் இருக்கிறார்களா என்பதற்கேற்ப நிறுவனத்தின் பதிவை மேற்கொண்டு தொழிலை தொடங்கலாம். தனிப்பட்ட உரிமையாளராக இருந்தாலும், தொழில் கூட்டாளிகளுடன் செயல்படுவதாக இருந்தாலும், அக்சஸரீஸ் கம்பெனி விசயத்தில் ஒரு சூட்சுமம் உள்ளது. அதாவது, பெண்களுக்கான அழகு சாதனங்கள் ஸ்மார்ட் போன் மற்றும் கம்ப்யூட்டர் ஆகிய பொருட்களுக்கான சந்தை விற்பனை நிலவரம் பற்றி ஓரளவுக்காவது அனுபவம் அல்லது தெளிவு பெற்றிருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் நல்ல அனுபவம் பெற்ற விற்பனையாளரை பணிக்கு அமர்த்த வேண்டும்.
- பொதுவாக இந்த அக்சஸரீஸ் கம்பெனி என்பது அன்றாட வாழ்வில் தினமும் உபயோகப்படுத்தும் ஏராளமான பொருட்களுக்கான களமாக இருக்கும். அதனால் இந்த தொழிலில் முதன்முறையாக இறங்குபவர்கள் குறைந்தபட்சம் 6 மாதங்களுக்காவது தாங்கள் நிறுவனத்தை தொடங்க விரும்பும் குறிப்பிட்ட ஏரியாவில் இடம் தேர்வு, அந்த பகுதியில் அதிகமாக விற்பனை ஆகக்கூடிய பொருட்கள், மக்களின் வாழ்க்கை முறை, சாலை வசதிகள், நிறுவனத்திற்கான இடம் தேர்வு ஆகியவற்றை பற்றி நன்றாக ஆய்வுகளை செய்ய வேண்டும். மிக முக்கியமாக சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு ஏற்ப டெக்ஸ்டைல்ஸ் அல்லது எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், எலக்ட்ரிக்கல் ஐட்டம் மற்றும் அழகு சாதன பொருட்கள் ஆகிய பொதுவான மற்றும் அத்தியாவசியமான பொருட்களுக்கான விற்பனை வாய்ப்பு பற்றியும் ஆய்வுகளை மேற்கொண்டு முடிவெடுக்க வேண்டும்.
- வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்கும் நிறுவனம் என்ற வகையில் ஜி.எஸ்.டி வரி பதிவு எண் பெறுவதுடன், உள்ளூர் நகராட்சி அல்லது முனிசிபாலிட்டி ஆகியவற்றில் முறையான உரிமங்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும். இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை விற்கக்கூடிய நிறுவனமாக இருக்கும் பட்சத்தில் முறையான எக்சைஸ் டியூட்டி செலுத்தப்பட்ட பொருட்களையே விற்க வேண்டும்.
- அக்சஸரீஸ் கம்பெனி தொடங்கும் தொழில் முனைவோர்களுக்கு ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், சமையலறை சாதனங்கள், ஸ்மார்ட் போன் மற்றும் கம்ப்யூட்டர் ஆகியவற்றுக்கான அக்சஸரீஸ், பெண்களுக்கான அழகு சாதனங்கள், பிறந்த நாள், மத ரீதியான பண்டிகைக்கான வாழ்த்து மடல்கள் மற்றும் பரிசுப் பொருள்கள் ஆகியவற்றின் விற்பனை வாய்ப்பு எப்போதுமே இருந்து வரும். அதனால், இந்த குறிப்பிட்ட பொருட்களை மட்டும் ஆரம்பத்தில் விற்பனை செய்வதன் மூலமாக, வாடிக்கையாளர்கள் விருப்பங்களை கவனத்தில் கொண்டு அதற்கு ஏற்ப மேலும் கூடுதலான வகைகளை ஸ்டாக் செய்து கொள்ளலாம்.
வாடிக்கையாளர் திருப்தி
எக்ஸ்பயரி ஆகக்கூடிய பொருட்களை அக்சஸரீஸ் கம்பெனி கொண்டிருப்பதில்லை. அதனால் அனைத்து பொருட்களையும் எப்போதும் சுத்தமாகவும் பளபளப்பாகவும் அடுக்கி காட்சிப்படுத்தி வைப்பது அவசியம். அதற்கேற்ப சரியான அலமாரி அமைப்பு இருக்க வேண்டும். தொடக்க நிலையிலேயே வாடிக்கையாளர் கேட்கக்கூடிய அக்சஸரீஸ் வகைகளை நிச்சயம் அளிக்க இயலாது. அதனால் ஒவ்வொரு நாளும் வரக்கூடிய வாடிக்கையாளர்கள் எந்தெந்த பொருட்களை கேட்கிறார்கள் என்பதை நிச்சயமாக குறித்து வைக்க வேண்டும். அவற்றை வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை கவனமாக பார்த்து அவற்றிற்கேற்ப பொருட்களுக்கான கொள்முதல் செய்ய வேண்டும். மேலும், வாடிக்கையாளர் கேட்கும் குறிப்பிட்ட ஒரு அக்சஸரீஸ் ஸ்டாக் இல்லை என்றாலும், அவற்றை வேறொரு இடத்தில் இருந்து பெற்று அவர்களுக்கு தருவதாக உறுதியளிக்க வேண்டும். எந்த வகையிலும் வாடிக்கையாளர் திருப்தி முக்கியம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். இந்த வகையில் தொழில்முறை போட்டியாளர்களை தொழில்முறை பங்குதாரர்களாக மாற்ற முடியும் என்பது சுவாரசியமானதாகும்.
இந்த தொழில் முயற்சியில் எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் விற்பனை வாய்ப்புகளைக் கொண்ட அக்சஸரீஸ் வகைகள் பற்றிய தகவல்களை இங்கே பார்க்கலாம். இவை புதிதாக இந்த தொழிலில் இயங்குபவர்களுக்கு நிச்சயம் உதவிகரமாக இருக்கும்.
ஹோம் டெக்ஸ்டைல்ஸ்
ஃபர்னிஷிங் ஃபேப்ரிக்ஸ், கர்டென்ஸ், டெகரேடிவ் மேட் அப்ஸ், குஷன் கவர், பெட் லினன், மெத்தைகள், பிளாங்கெடுகள், குவில்ட்ஸ், டவல்ஸ் மற்றும் பாத் லினன், டேபிள் மற்றும் கிச்சன் லினன், ரக்ஸ், டெர்ரி மற்றும் கார்பெட்ஸ், இதர ஹோம் டெக்ஸ்டைல் மற்றும் சாஃப்ட் ஃபர்னிஷிங் புராடெக்டுகள் ஆகியவை.
ஹோம் டெகரேஷன் வகைகள்
வால்பேப்பர்ஸ், வால் டெகரேஷன்ஸ், பிளைண்ட்ஸ், கார்பெட்ஸ் மற்றும் ரக்ஸ், மர மற்றும் டெகரேடிவ் ஃபுளோர் கவரிங்ஸ், டோர் மேட்ஸ், ஆர்ட்ஃபேக்ட்ஸ், ஹேண்டிகிராஃப்ட்ஸ், ஃபிகரின்ஸ், டேபிள் டெகரேஷன்ஸ், கர்டென் ராட்ஸ், டிரேப் மெகானிஸம்ஸ், டெகரேடிவ் லைட்ஸ் அண்ட் ஃபேன்ஸ், டெகரேடிவ் ஹார்ட்வேர், கடிகாரங்கள், டெகரேடிவ் ஆக்ஸசரீஸ், ஸ்மால் ஃபர்னிச்சர், மூங்கில் பொருள்கள், உலர் மற்றும் செயற்கை பூக்கள், அரோமாஸ் அண்ட் ஃபிராக்ரென்ஸ், கேண்டில்ஸ் மற்றும் ஸ்டாண்ட்ஸ், ஃபெஸ்டிவ் டெகரேஷன்ஸ் ஆகியவை
ஹவுஸ்வேர்
கிச்சன்வேர், குக்வேர், டேபிள்வேர், கிளாஸ்வேர், பார் துணைப்பொருள்கள், கிச்சன் அப்ளையன்ஸ், ஹோம் அப்ளையன்ஸ், பாத் ஆக்ஸசரீஸ், ஹெல்த் மற்றும் ஹைஜின் புராடெக்டுகள், டிஸ்போசபிள் ஹவுஸ்ஹோல்டு புராடெக்டுகள், கிளீனிங் அண்ட் மெயின்டனென்ஸ் புராடக்டுகள், ஸ்டோரேஜ், டாய்ஸ், கிட்ஸ் புராடக்ட்ஸ், அவுட்டோர், ஜெனரல் மற்றும் லைஃப்ஸ்டைல் ஹவுஸ்வேர் புராடெக்டுகள் போன்றவை.
யுட்டிலிட்டி பர்னிச்சர்
பிளாஸ்டிக் வகைகள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருட்கள், அக்ரிலிக் ஐட்டங்கள், கண்ணாடி மற்றும் மர பொருட்கள், ஸ்மார்ட் போன் ஸ்டான்ட் மற்றும் லேப்டாப் டேபிள்கள் ஆகியவை.
பரிசுப்பொருட்கள்
போட்டோ ஃபிரேம்ஸ், கிளாஸ் மற்றும் கிரிஸ்டல், கிளாக்ஸ் மற்றும் வாட்சுகள், ஹவுஸ்வேர், ஸ்கார்வ்ஸ் மற்றும் ஸ்டோல்ஸ், கிஃப்டிங் ஆக்ஸசரீஸ், ஹேண்டிகிராஃப்ட்ஸ், ஸ்டேஷனரி, கிஃப்ட் பேக்ஸ், கிஃப்ட் பாக்ஸ் மற்றும் பேக்கேஜிங் ஆகியவை.
குழந்தைகளுக்கான பொருள்கள்
விளையாட்டு பொருட்கள், கல்வி சம்பந்தமான பொருள்கள், கேம்ஸ் வகைகள், பொழுதுபோக்கு சாதனங்கள், ஸ்டேஷனரி ஐட்டங்கள், பேபி ட்ராலி, பேபி கட்டில், ஸ்டடி டேபிள், ஸ்டோரேஜ் அலமாரி, சிறிய டைனிங் டேபிள் ஆகியவை.
மேற்கண்ட பொருட்களை தயாரிக்கும் பிரபலமான நிறுவனங்களுக்கான பிரான்சைஸி முறையிலும் அக்சஸரீஸ் கம்பெனி தொழில் முனைவோர்கள் செயல்படலாம். அத்துடன் அவர்களது இதர வியாபார முறைகளையும் திட்டமிட்டு செய்தும் முன்னேறலாம்.