எளிதான படிகளில் ஒரு பயண முகமை வணிகத்தை எவ்வாறு தொடங்குவது
உலக அளவில் சுற்றுலாத்துறையை என்பது குறிப்பிடத்தக்க வளர்ச்சியை ஒவ்வொரு வருடமும் அடைந்து வருகிறது எதிர்வரும் 2025-ம் ஆண்டுக்குள் இந்த துறையில் கிட்டத்தட்ட 47 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாகலாம் என்றும், அதன் காரணமாக நடப்பு ஆண்டில் சுமார் 8 லட்சம் கோடி வருமானம் எட்டப்படும் என்று சர்வதேச டிராவல்ஸ் அண்ட் டூரிசம் கவுன்சில் தெரிவித்துள்ளது. சுற்றுலா மூலம் மக்கள் கார்கள், பஸ்கள், ரயில், விமானம் ஆகியவற்றில் பயணித்து தங்களுக்கான இடங்களை அடைகிறார்கள் அவர்களுடைய பயணத்துக்கான ஏற்பாடுகளை சரியாக செய்து தரக்கூடிய டிராவல் ஏஜென்சி பிசினஸ் என்பது நேரடியாகவும் மறைமுகமாகவும் பல லட்சக்கணக்கான மக்களுக்கு உலக அளவில் வேலை வாய்ப்பை அளித்து வருகிறது.
தெளிவான திட்டம்
இந்த தொழிலில் முறையான திட்டம் அவசியமானது. அதாவது, பதிவு பெற்ற ஒரு நிறுவனமாக தொடங்கி நடத்துவது, பங்குதாரர்களுடன் நிறுவனத்தை நடத்துவது, முறையான உரிமங்களை பெறுவது, தொழிலை வீட்டிலிருந்தபடியே செய்வதா அல்லது அலுவலகம் தேவைப்படுகிறதா, முதலீட்டுக்கான அடிப்படைகள் என்ன, இந்தத் தொழிலில் நமக்கான இடம் என்ன என்ற விஷயங்களை ஆதி முதல் அந்தம் வரை தெளிவாக வரையறை செய்வது அவசியம். இந்த முயற்சிகளுக்கு சுமார் ஒரு வருட காலம் ஆகலாம். தேசிய அளவிலான சுற்றுலா வளர்ச்சியானது ஆண்டுக்கு 14 சதவிகிதம் என்ற அளவில் இருப்பதை மனதில் கொண்டால் இந்தத் தொழிலுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது உணர முடியும்
புதிதாக வருபவர்கள் இந்தத் துறையில் அனுபவம் பெற்றவர்களை ஒரு பங்குதாரராக சேர்த்துக் கொள்வது பாதுகாப்பானது. அவர் நிதி சார்ந்த பங்குதாரராகவும் அல்லது உழைப்பு சார்ந்த பங்குதாரராகவும் இருக்கலாம். தொழில் முதலீடு என்ற வகையில் குறிப்பிட்ட வங்கியை அணுகி முறையான செயல் திட்டத்தை அவர்களுக்கு அளித்து, கடன் தொகையை பெறலாம். தொழில் பங்குதாரர்கள் யாரும் இல்லாமல் சுயமாகவே தொழிலை ஆரம்பித்து செய்யவேண்டும் என்று விரும்புபவர்கள் நிச்சயமாக குறிப்பிட்ட காலத்துக்கு தொழிலுக்கான அனைத்துவிதமான சாதக பாதக அம்சங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும்
சுற்றுலா துறையுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட இந்த டிராவல் ஏஜென்சி பிசினஸ் செய்பவர்கள், பொதுமக்களுடைய அடிப்படை மனோபாவங்களை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். குறிப்பாக அவர்களது தேவைகள் என்ன என்பதை அறிந்து கொண்டு, அவற்றை தற்போது சந்தையிலுள்ள நடைமுறைகளுக்கு ஒரு நவீன மாற்றாக அளிப்பது தொழில் வளர்ச்சியை நிச்சயம் அளிக்கும். டார்கெட் ஆடியன்ஸ் என்று சொல்லப்படக்கூடிய யாருக்காக இந்த சேவை அளிக்கப்படவேண்டும் என்ற குறிக்கோள் அவசியமானது. டிராவல் ஏஜென்சி பிசினஸ் தொடங்க விரும்புபவர்களுக்கான குறிப்புகள்:
- தொழில் தொடங்குவதற்கு சட்டப்படியான சில உரிமங்கள் அவசியம். டிரேட்மார்க் பதிவு அதாவது பிசினஸ் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட அடையாளத்தை பதிவு செய்து கொள்வது அவசியம். நல்ல பெயரை தேர்வு செய்து அதை தக்க முறையில் விளம்பரம் செய்ய வேண்டும்.
- தொழில் நடத்துவதற்கான லைசென்ஸ் என்பது ஒவ்வொரு மாநிலத்திற்கும் சில வித்தியாசங்களை கொண்டதாக இருக்கலாம். டிராவல் ஏஜென்சி பிசினஸ் ஆரம்பிக்க இந்திய சுற்றுலாத் துறையிடம் பதிவு செய்ய வேண்டும். மேலும், சர்வதேச அளவில் சுற்றுலா அழைத்துச் செல்வதற்காக இந்தியன் அசோசியேஷன் ஆஃப் டூர் ஆபரேட்டர்ஸில் பதிவு செய்ய வேண்டும். ஜி.எஸ்.டி பதிவு எண்ணை பெற்றிருப்பதும் அவசியம்.
- வாடிக்கையாளர்கள் நம்மை நேரடியாக அணுகுவது அல்லது இணைய தளம் மற்றும் ஸ்மார்ட் போன் மூலமாக அணுகுவது என்ற வழிவகையை மிகச்சரியாக ஏற்படுத்தியிருக்க வேண்டும். இந்தத் துறையில் சக தொழில் முனைவோர்கள் ஒத்துழைப்பு மிக அவசியம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
- வீட்டிலிருந்தபடியே இந்த தொழிலை மேற்கொள்ள விரும்புபவர்கள் நன்றாக பேச தெரிந்தவர்களாகவும், மூன்று அல்லது நான்கு மொழிகளில் பேசக்கூடிய திறன் படைத்தவர்களாகவும் ஆன்லைன் தொடர்புகளுக்கு அவசியமான இன்டர்நெட் நடைமுறைகளில் சிறப்பான பரிச்சயம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.
- மக்களை நேரடியாக சென்று அடைவது போன்று விளம்பரங்கள் செய்ய வேண்டும். ஆன்லைன் முறைகளிலும் அல்லது அச்சு ஊடகங்கள் மூலமாக குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை நிறுவனம் சார்பான விளம்பரங்கள் வெளியிடப்பட வேண்டும்.
- பெரும்பாலான டிராவல்ஸ் சம்பந்தமான புக்கிங் அனைத்தும் இணையம் வாயிலாகவே மேற்கொள்ளப்படுகின்றன. அது ரயிலாக இருந்தாலும் சரி, பஸ் ஆக இருந்தாலும் சரி, விமானமாக இருந்தாலும் சரி ஸ்மார்ட் போன் அல்லது கம்ப்யூட்டர் மூலமாகவே பயணத்திற்கான பதிவுகள் செய்யப்படுகின்றன. அதனால் 24 மணி நேரமும் ஆன்லைன் தொடர்பு என்பது இந்த தொழிலுக்கு மிக அவசியமானது. இந்த தொழிலில் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் பற்றிய தகவலை நிச்சயம் இதர நிறுவனங்களின் கட்டணங்கள் உடன் ஒப்பிட்டுப் பார்த்து அதனடிப்படையிலேயே நிர்ணயம் செய்ய வேண்டும்.
- பொது மக்களின் பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்து தருவது மட்டுமல்லாமல் அவர்கள் விரும்பக்கூடிய வாகனங்களை ஏற்பாடு செய்து தருவது அல்லது அதற்கேற்ற டிக்கெட் போன்றவற்றை ஏற்பாடு செய்து தருவதும் இந்தத் தொழிலில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் செல்லக்கூடிய நாடு அல்லது பெரிய நகரங்களில் உள்ள வசதியான ஹோட்டல்கள் அல்லது சுற்றுலா மையங்கள் ஆகியவற்றில் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வதுடன் ஊரை சுற்றிப் பார்க்க விரும்புபவர்களுக்கு அதற்கான ஏற்பாடுகளையும் செய்து தரலாம்.
பாஸ்போர்ட், விசா ஏற்பாடு
பெரும்பாலான தொழிலதிபர்கள் உள்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடு சுற்றுலா செல்வதிலும் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான பாஸ்போர்ட் அல்லது விசா போன்றவை இருப்பதில்லை. அவர்களுக்கு டூரிஸ்ட் பாஸ்போர்ட் மற்றும் விசா வகைகளை சம்பந்தப்பட்ட ஏஜென்சி மூலமாக பெற்றுத் தரலாம். உள்நாடு அல்லது வெளிநாடு சுற்றுலா செல்வதற்கான டூரிஸ்ட் கைடு ஏற்பாடு செய்யும் பொழுது அவர்கள் பயிற்சி பெற்றவர்களாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக, சுற்றுலா செல்ல கூடிய நாட்டின் பண்பாடு மொழி இலக்கியம் ஆகிய அடிப்படை தகவல்கள் பற்றிய விஷயங்களை அறிந்து இருப்பவராக இருக்க வேண்டும். இந்திய அளவிலான சுற்றுலா என்றால் சம்பந்தப்பட்ட மாநிலத்திலுள்ள ஆலயங்கள் சிற்பங்கள் நடனம் இசை குறிப்பிட்ட மாநில மக்களின் வாழ்க்கை முறை உணவு ஆகிய பல்வேறு தகவல்களை டிராவல் ஏஜென்சி பிசினஸ் தொழில் முனைவோர்கள் அறிந்திருக்கவேண்டும்.
தேசிய அளவிலான சுற்றுலா நிறுவனங்களுக்கு நாட்டின் அனைத்து ஊர்களிலும் கிளைகள் இருக்கும் வாய்ப்பு இல்லை. அந்த நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட ஊர்களில் சப்-ஏஜெண்டுகளாக தனிநபர்கள் அல்லது நிறுவனங்களை நியமனம் செய்வார்கள். இந்த பணிகளையும் கூட ஏற்றுக்கொண்டு செய்து வருவதும் ஒரு லாபகரமான தொழில் முயற்சியாக இருக்கும். இதற்கு அதிகப்படியான முதலீடு தேவைப்படுவதில்லை. ஆனால் பல மொழிகள் பேசும் திறமையும் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய விசேஷ திறமையும் அவசியம்.
இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்பவர்கள் அந்த நாட்டின் கரன்சியை இந்தியாவில் இருந்து எடுத்துச் செல்ல முடியும். அதற்கேற்ப பல்வேறு மணி எக்சேஞ்ச் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. டிராவல் ஏஜென்சி பிசினஸ் செய்பவர்கள் அவற்றுடன் தொடர்புகொண்டு வாடிக்கையாளர்கள் தேவைகளை பூர்த்தி செய்து தரும் பணிகளை மேற்கொள்ளலாம்.
ஒரு பயணி எந்த ஒரு மாநிலத்திற்கு சென்றாலும் அல்லது வெளிநாட்டுக்கு சென்றாலும் அங்கே கிடைக்கக்கூடிய பிரபலமான பொருட்களை அல்லது விசேஷமான அடையாள பொருட்களை வாங்கிவந்து தமது நண்பர்கள் மற்றும் சொந்தக்காரர்களுக்கு பரிசாக அளிப்பது வழக்கம். மேலும், சம்பந்தப்பட்ட பகுதிகளில் கிடைக்கக்கூடிய சுவையான பாரம்பரியமான உணவு வகைகள் என்ன என்பதையும், அவை எந்தெந்த ஹோட்டல்களில் கிடைக்கும் என்பதையும் டிராவல் ஏஜென்சி பிஸினஸ் தொழில் முனைவோர் சர்வநிச்சயமாக அறிந்து வைத்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஏரியாவில் உள்ள லோக்கல் வாடகை வண்டி ஆபரேட்டர்களை அந்த பயணிகளுக்கு ஊர் சுற்றிப் பார்க்க நியமனம் செய்து தரலாம். அதற்கேற்ற தகவல் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதும் இந்த தொழிலுக்கான அடிப்படை விஷயமாகும். ஒரு டிராவல் ஏஜெண்ட் என்பவர் இந்த நுட்பமான விஷயத்தை நிச்சயம் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
இணைய வழி ஹோம் பிசினஸ்
குறைவான முதலீட்டில் வீட்டிலிருந்தபடியே இந்த தொழிலை செய்ய விரும்புபவர்கள் இந்திய ரயில்வே துறையின் துணை நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி இணைய தளம் மூலம் ஆன்லைன் டிக்கெட் பதிவு செய்து தரும் ஏஜென்டாக சேவையை அளிக்கலாம். பொதுவாக, இந்திய அளவில் சுமார் 55 சதவிகிதம் ரயில்வே டிக்கெட்டுகள் ஆன்லைன் முறையிலேயே பதிவு செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. வரிசையில் நின்றுதான் ரயில் பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டி இருந்த நிலை இன்றைக்கு அடியோடு மாறி விட்டது. அதே போல விமான பயணச் சீட்டுகளும், இருந்த இடத்தில் இருந்தே இணையம் வாயிலாக பதிவு செய்ய முடிகிறது. நீண்ட தொலைவு செல்லும் பேருந்துகளுக்கான பயணச் சீட்டுகளையும் இணைய தளம் மூலமாக பெற முடிகிறது.
இணையம் வந்த பிறகு எல்லா தொழில்களிலும் அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதைப் போலவே, சுற்றுலாத் தொழிலிலும் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. உலகின் எந்த மூலைக்கு செல்வதற்கும் ஆன பயணச் சீட்டுகளையும், தங்கும் விடுதிகளையும் எங்கிருந்தும் பதிவு செய்து கொள்ள முடிகிறது. அதற்காக ஆகும் செலவினங்ளையும் முன்னதாகவே திட்டமிட்டுக் கொள்ள முடிகிறது. குறிப்பாக ரூட் பிளானிங் என்ற செயல் திட்டம் மூலமாக ஒரு பயணி பிரயாணத்தை தொடங்கும் இடத்திலிருந்து பிரயாணத்தை பூர்த்திசெய்யும் இடம் வரை, அவற்றிற்கு இடையே அமைந்துள்ள சைட் சீயிங், மற்றும் தங்குமிட வசதிகள் உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் பற்றிய முழுமையான தகவல்களை சம்பந்தப்பட்ட டிராவல் ஏஜென்சி பிசினஸ் தொழில் முனைவோர் அளிக்க வேண்டும்.
டிராப் அண்ட் பிக்-அப்
பெருநகரங்களில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி புரியும் பெண்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு தினமும் செல்ல வேண்டிய மாணவிகள் ஆகியோர்களை காலையில் பத்திரமாக வீட்டில் இருந்து அழைத்துச் சென்று மீண்டும் மாலையில் அவர்களை பத்திரமாக வீட்டில் டிராப் செய்யக்கூடிய சேவை இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமான ஒன்று மேலும் விடுமுறை நாட்களிலும் கூட டிராவல் பிசினஸ் தொழில் முனைவோர்கள் தங்களுடைய சேவைகளை அளிக்க தயாராக இருக்க வேண்டும் காலத்தின் கட்டாயமாகும்.
இன்றைய நவீன தொழில்நுட்ப சூழலில் ஸ்மார்ட் போன் அப்ளிகேஷன்ஸ் மூலமாக பல்வேறு வசதிகளை பெறும் மனோபாவம் வளர்ந்து வருகிறது. தேசிய அளவில் கிட்டத்தட்ட 35 முதல் 40 சதவிகிதம் மக்கள் தங்களுடைய வர்த்தக நடவடிக்கைகளை மொபைல் அப்ளிகேசன்ஸ் மூலம் பூர்த்தி செய்து கொள்வதாக தெரிய வந்துள்ளது. அதனால், மாநில மொழிகளில் செயல்படும் வகையில் மொபைல் அப்ளிகேஷன்களை டிராவல் ஏஜென்சி பிசினஸ் தொழில் முனைவோர்கள் ஏற்படுத்திக்கொள்வது தொழில் வளர்ச்சிக்கு ஏற்றதாகும்.