பேப்பர் பேக் தயாரிக்கும் தொழிலை மேற்கொள்வதற்கான செயல் திட்டங்கள்
சுற்றுச்சூழல் பற்றிய அக்கறை இன்றைய சூழலில் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்பட்டு வருகிறது. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் அதுபற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றன. அதன் அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் குறைந்த மைக்ரான் என்ற மதிப்பு கொண்ட பிளாஸ்டிக் கவர் தயாரிப்புகளுக்கு அரசு தடை விதித்திருக்கிறது. அந்த தடையின் எதிரொலியாகவும், பிளாஸ்டிக் கவர்களுக்கு மாற்றாகவும் பேப்பர் பைகள் மற்றும் பேக் வகைகள் சந்தையில் அறிமுகமாகி இருக்கின்றன. இந்த பேப்பர் பேக் வகைகள் பார்ப்பதற்கு கவர்ச்சிகரமான தோற்றத்தில் இருப்பதாலும், மறுசுழற்சி என்ற முறையில் சூழல் பாதுகாப்புக்கு ஏற்றதாக இருப்பதாலும் தொழில் நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அதன் பயன்பாட்டை வரவேற்று இருக்கிறார்கள். அதன் காரணமாக, காகிதப்பை என்ற பேப்பர் பேக் மேக்கிங் பிசினஸ் என்பது ஒரு நவீன வர்த்தக தொழில் பிரிவாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக இந்த தொழில் பிரிவுக்கு பெரிய அளவிலான முதலீடுகள் செய்யவேண்டியதில்லை என்பதால் பலரும் இந்த தொழிலில் ஈடுபட விரும்புகிறார்கள். கிராமப்பகுதிகளில் இந்த தொழிலை குடிசை தொழிலாகவும் செய்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
காகிதப் பைகள் தயாரிப்பது என்பது தற்போது உலக அளவிலான முக்கியத்துவம் பெற்ற தொழில் பிரிவாக மாறி இருக்கிறது. சர்வதேச அளவில் இந்த பிரிவின் சி.ஏ.ஜி.ஆர் என்று சொல்லப்படும் வருடாந்திர வளர்ச்சி விகிதம் என்பது சுமார் 5 சதவிகிதத்துக்கும் மேல் என்று ஒரு தகவல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. மேலும், உணவு மற்றும் பானங்கள், விவசாய துறை ஆகியவற்றில் பேப்பர் பேக் உபயோகம் என்பது அதிக அளவில் இருந்து வருகிறது. நடப்பு ஆண்டில் இந்திய சந்தைக்கான பேப்பர் தேவை என்பது சுமார் 20 மில்லியன் டன் என்ற அளவில் இருக்கக்கூடும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அளவை கணக்கில் கொண்டால் ஒவ்வொரு இந்தியரும் சுமார் தினமும் 9 கிலோ என்ற அளவில் பேப்பர் வகைகளை பயன்படுத்துவதாக தெரியவருகிறது. சர்வதேச அளவில் கணக்கிட்டால், ஒவ்வொரு தனி மனிதரும் தினமும் சுமார் 57 கிலோ அளவில் பேப்பர்களை பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. சிறந்த தொழில் மற்றும் வர்த்தக வாய்ப்புகளை உள்ளடக்கியதாகவும், தொழில் முதலீட்டாளர்களை கவரக் கூடிய வகையிலும் உள்ள தொழில் பிரிவான காகித பை தயாரிப்பு பற்றிய முக்கியமான விஷயங்களை இங்கே பார்க்கலாம்.
பேப்பர் பேக் தயாரிப்புக்கான வர்த்தக வாய்ப்புகள்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மறு சுழற்சிக்கு ஏற்றது மற்றும் குறைந்த விலை ஆகிய நிலைகளில் பேப்பர் பேக் மேக்கிங் பிசினஸ் என்பது வளர்ந்து வரும் தொழில் பிரிவாக உள்ளது. இந்த தொழிலுக்கான வர்த்தக வாய்ப்புகள் என்பது பெரிய பெரிய ஷாப்பிங் மால்களுக்கான சப்ளை, ஜுவல்லரி பேக்கிங், மருந்தகங்களுக்கான தேவை, பார்ட்டிகளுக்கான பேக்கிங் மெட்டீரியல், உணவு டெலிவரி மற்றும் தொழிற்சாலை தயாரிப்புகளுக்கான பேக்கிங் என்ற பல்வேறு வகைகளில் இருக்கின்றன.
தொழிலுக்கான பதிவு மற்றும் உரிமங்கள்
தொடக்க நிலையில் சிறுதொழில் நிறுவனமாக அதாவது அரசின் சிறு, குறு மற்றும் மத்திய தர தொழில் நிறுவனங்களுக்கான பதிவு பெற்று தொடங்கி செய்துவருவது நல்லது. ஏனென்றால் அதன் மூலம் பல்வேறு அரசு சலுகைகளை பெற முடியும். அதாவது, பிரதமரின் சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களுக்கான மானியம் 25 சதவிகிதம் என்ற நிலையிலும், கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்படும் தொழில் முயற்சிகளுக்கு 35 சதவிகிதமும் அரசு மானியமாக அளிக்கப்படுகிறது.
நிறுவனத்திற்கான பதிவு என்ற முறையில் சிங்கிள் புரோப்ரைட்டர்ஷிப் அல்லது லிமிட்டடு லையாபிலிடி பார்ட்னர்ஷிப் என்ற தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் நிறுவனத்தின் பதிவை செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கான பதிவு செய்துகொள்வது, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து தகுந்த தொழில் அல்லது வர்த்தக உரிமம் பெற்றுக் கொள்வது ஆகியவை அவசியம். மேலும் அரசின் சிறுதொழில் நிறுவனமான பதிவு செய்துகொண்டு உத்யோக் ஆதார் பதிவையும் மேற்கொள்வதும் நல்லது. இறுதியாக, இந்திய அரசின் பீரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்டு என்ற பி.ஐ.எஸ் என்ற தர முத்திரை சான்றையும் விண்ணப்பித்து பெற்றுக் கொள்வது, தொழில் வளர்ச்சிக்கு ஏற்றது.
உள்கட்டமைப்பு வசதிகள்
ஒவ்வொரு தொழிலுக்கும் சில அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் விசேஷமான உள்கட்டமைப்பு ஆகிய விஷயங்கள் தேவைப்படுகின்றன. பேப்பர் பேக் மேக்கிங் பிசினஸ் என்ற தொழில் பிரிவுக்கு அடிப்படையாக சில விஷயங்களை உள்ளன. முதலாவது, தகுந்த மின்சார வசதி. இரண்டாவது, தொழில்நுட்பம் அறிந்த பணியாளர்கள். மூன்றாவது, மூலப் பொருட்களை எடுத்து வருவது மற்றும் தயாரிப்புகளை வெளியே எடுத்து செல்வது ஆகியவற்றுக்கு அவசியமான போக்குவரத்து மற்றும் சாலை வசதி. நான்காவது தண்ணீர் வசதி ஆகியவையாகும். இந்த தொழிலை சிறுநகரங்களில் நடத்துவதற்கு அரசின் சலுகைகள் ஏற்றதாக இருக்கின்றன. குறைந்தபட்சமாக ஆயிரம் சதுர அடி இடத்தில்கூட இந்த தொழிலை அமைத்து செய்து வர முடியும்.
மூலப்பொருட்களின் தேவை
இந்த தொழில் பிரிவுக்கான மூலப்பொருட்களில் முதலாவது, வெள்ளை மற்றும் பல வண்ண நிறங்களில் உள்ள பேப்பர் ரோல், இரண்டாவது பேப்பர் சீட், மூன்றாவது பாலியஸ்டர் ஸ்டீரியோ, நான்காவது ஐ லிட், ஐந்தாவது லேசஸ் அண்ட் டேக்ஸ் மற்றும் ஆறாவது இங்க் மற்றும் பிரிண்டிங் ரசாயனங்கள் ஆகியவையாகும்.
தேவையான தயாரிப்பு இயந்திரங்கள்
பேப்பர் பேக் மேக்கிங் பிசினஸ் தொழில் பிரிவில் ஆட்டோமேட்டிக் எந்திரம், செமி ஆட்டோமேட்டிக் எந்திரம் மற்றும் மேனுவல் அதாவது கைகளால் இயக்கக்கூடிய எந்திரம் ஆகிய மூன்று வித இயந்திரங்களை பயன்படுத்தி தயாரிப்பை மேற்கொள்ள இயலும்.
ஆட்டோமேட்டிக் பேப்பர் மேக்கிங் மிஷின் என்பது பிரின்ட் ஆப்ஷன் கொண்டது மற்றும் பிரிண்ட் ஆப்ஷன் இல்லாதது என்ற இரு வகைகளில் இருக்கிறது. இந்த இயந்திரத்தில் ஒரு நிமிடத்தில் நூறு முதல் 120 பைகள் வரை தயாரிக்க முடியும். பைகளுக்கான அளவைப் பொறுத்து இந்த எண்ணிக்கை மாறுபடக்கூடும். பிரிண்ட் ஆப்ஷன் இருக்கக்கூடிய தயாரிப்பு எந்திரம் மேற்கண்ட முறையில் செயல்படும் என்றாலும்கூட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கான பெயர்களை பைகளில் அழகாக பிரிண்ட் செய்து பெற்றுக்கொள்ள இயலும். வண்ணங்களில் கடையின் பெயர் மற்றும் படங்களை அச்சிட்டு வழங்குவதால் கடைகளுக்கு நல்ல விளம்பரம் கிடைக்கும்.
பேப்பர் பேக் வகைகளை அடர்த்தியாகவும், எளிதில் கிழிந்துவிடாத வகையிலும் தரமாக தயாரிப்பதற்கு என்றே பேப்பர் பேக் மேக்கிங் பிசினஸ் பிரிவில் காம்போ எந்திர வகைகள் சந்தையில் உள்ளன. அந்த இயந்திரம் செமி ஆட்டோமெடிக் என்ற நிலையில் செயல்படுகிறது. இந்த வகை எந்திரம் மூலமாக பேப்பர் பேக் தயாரிப்பு என்பதை குடிசை தொழிலாகவே செய்ய இயலும். அதற்கு வீட்டில் உபயோகப்படுத்தக்கூடிய மின்சார பயன்பாடு போதுமானதாக இருக்கும் என்று அதன் தயாரிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். சுமார் 6 அல்லது 7 பணியாளர்கள் மூலம் தினமும் பத்தாயிரம் எண்ணிக்கையிலான பேப்பர் பைகளை தயாரிக்க இயலும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சூப்பர் மார்க்கெட்டுகள், ஜவுளிக் கடைகள், வணிக நிறுவனங்களில் ஆர்டர்கள், திருமண தாம்பூலம் ஆர்டர்கள் ஆகிய நிலைகளில் தரமான முறையில் எளிதில் கிழிந்துவிடாத வகையில் பை வகைகளை தயார் செய்து கொடுப்பது நல்ல லாபம் அளிக்கக் கூடிய விதத்தில் இருக்கும். மேலும் பேப்பர் பைகளில் குறிப்பிட்ட நிறுவனங்கள் உடைய பெயர்களை அச்சிட்டு கொடுப்பதற்கு இதர நிறுவனங்களிலிருந்து ஜாப் ஒர்க் வகையில் பணிகளை மேற்கொள்ளலாம். இந்த மெஷின் தயாரிப்பாளர்கள் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அதாவது எந்திரத்தை சரியாக அமைப்பது, ஏதாவது பழுது ஏற்பட்டால் சரி பார்ப்பது, வேறு ரகம் மற்றும் அளவுகளில் பேப்பர் பை தயாரிப்பது உள்ளிட்ட ஆப்டர் சேல்ஸ் சர்வீஸ் செய்வதாகவும் தெரியவந்துள்ளது.
பேப்பர் பைகள் தயாரிப்புக்கு மேலும் கூடுதலான எந்திரங்கள் தேவையாக இருக்கும். அவை, கிரீஸிங் மெஷின், கட்டிங் மெஷின், ஐ லிட் மெஷின், லேஸ் ஃபிட்டிங் மெஷின், பிரிண்டிங் மெஷின், துளையிடும் மெஷின், மோட்டார் பொருத்தப்பட்ட ரோல் ஸ்லிட்டர் மெஷின், ஸ்டீரியோ பிரஸ் மற்றும் ஸ்டீரியோ கிரைண்டர் மெஷின் மற்றும் அளவிற்கான சோதனை அதாவது டெஸ்டிங் ஸ்கேல் மெஷின் ஆகியவையாகும்.
தயாரிப்பு முறைகள்
பேப்பர் பேக் தயாரிப்பில் ஆறு விதமான முறைகளை மேனுவல் ஆக கையாள வேண்டியதாக இருக்கும். அவை, கட்டிங் செய்வது, பிரஸ்ஸிங் செய்வது, பிரிண்டிங் செய்வது, துளை இடுவது, கைப்பிடி பொருத்துவது மற்றும் பேக்கேஜிங் செய்வது ஆகியவற்றை கச்சிதமாக செய்து பைகளை சரியான மற்றும் தேவைப்பட்ட வடிவத்தில் உருவாக்குவது அவசியம். ஒருமுறை பயன்படுத்தும் செய்தித்தாள் பைகள், பலமுறை பயன்படுத்தும் டியூப்ளக்ஸ் போர்டு, கோல்டன் எல்லோ ஷீட், பிரவுன் ஷீட் பேப்பர் மற்றும் சார்ட் பேப்பர் பைகள் என இதில் பல வகைகள் உள்ளன. பல்வேறு வண்ணங்களில் தடிமனான பேப்பர்களில் தயாரித்து விற்பனை செய்யும் பேப்பர் பைகளுக்கு சந்தை வாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது.
விற்பனைக்கான சந்தை வாய்ப்புகள்
எந்த ஒரு தயாரிப்பும் சிறந்த தரத்துடனும், குறைவான விலை கொண்டதாகவும் இருந்தாலும் கூட அதற்கான விளம்பரம் மற்றும் விற்பனைக்கான சந்தை வாய்ப்பு ஆகியவற்றை சரியான திட்டமிடல் மூலமாக நிறைவேற்றி வர்த்தகத்தை வளர்த்துச் செல்வது அவசியமானது. போட்டிகள் நிறைந்த இன்றைய உலகத்தில் விளம்பரம் என்பது மிக அவசியம். அதற்கேற்ப பேப்பர் பேக் மேக்கிங் பிசினஸ் தொழில் முனைவோர்கள் அவர்களுடைய தயாரிப்பு பற்றி இணைய தளங்களிலும், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் குரூப் மூலமாகவும் தகவல்களை தெரிவித்து விற்பனைக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வது அவசியம்.
இந்த தொழில் பிரிவுக்கான விற்பனை வாய்ப்பு என்பது லோக்கல் மார்க்கெட் மற்றும் ஹோல்சேல் மார்க்கெட் என்று இரு பிரிவாக உள்ளது. லோக்கல் மார்க்கெட் வர்த்தகம் என்பது பேக்கரிகள், புத்தகக் கடைகள், பேன்சி ஸ்டோர், பழங்கள் மற்றும் காய்கறி விற்பனையகங்கள், மளிகை கடைகள், பரிசுப்பொருள் விற்பனையகங்கள், மருந்துக்கடைகள், நகைக்கடைகள், மீன் மற்றும் இறைச்சி விற்பனையகங்கள், காலனி, பல்பொருள் அங்காடிகள், துணிக்கடைகள் உள்ளிட்ட நுகர்பொருள் விற்பனை அமைப்புகளில் அவர்களுடைய தேவைகளுக்கு ஏற்ப சப்ளை செய்யலாம். விலையுயர்ந்த பொருட்களை இப்படி வண்ண பேப்பர் பேக்குகளில் வைத்து கொடுப்பதை தற்போது கடைகள் வாடிக்கையாக கொண்டுள்ளன. நல்ல உறுதியான பேப்பரில் பார்ப்பதற்கு அழகான டிசைனில் கைப்பிடியுடன் பைகள் வருவதால் மக்கள் இதனை விருப்பத்துடன் பெற்றுச் செல்கின்றனர்.
ஹோல்சேல் மார்க்கெட் என்ற நிலையில் செயல்பட விரும்பும் தொழில் முனைவோர்கள் கச்சிதமாக திட்டமிட்டு, பணியாளர்களின் திறமை அடிப்படையில் செயல்பட்டு வாடிக்கையாளர்களுடைய தேவையை குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் பூர்த்தி செய்ய வேண்டும். மொத்த விற்பனை என்ற நிலையில் இருக்கக்கூடிய சிக்கல் என்பது, குறிப்பிட்ட காலத்திற்குள் டெலிவரி அளிப்பது மற்றும் டெலிவரி அளித்த பொருட்களுக்கான விற்பனை பண மதிப்பை பெறுவது ஆகியவையாகும். அந்த நிலைகளில் உடனடியாக லாபகரமாக செயல்படுவது என்பது இயலாதது. அதனால், கொஞ்ச காலம் சென்ற பின்னர்தான் மொத்த விற்பனை என்பது லாபகரமாக இருக்கும்.