ஹோட்டல் தொழிலை தொடங்கி, வெற்றிகரமாகவும், லாபகரமாகவும் நடத்துவதற்கான வழிமுறைகள்
வாழ்க்கையில் சாப்பாடு ரொம்ப முக்கியம் என்ற வாக்கியத்தை நகைச்சுவையாக பலரும் குறிப்பிட கேட்டிருக்கலாம். ஒரு சாண் வயிற்றுக்காக தான் இவ்வளவு சிரமங்கள் என்ற நகைச்சுவையான சொற்றொடரையும் பலர் குறிப்பிடுவார்கள். உணவு என்பது வாழ்க்கையில் அவ்வளவு முக்கியத்துவம் பெற்ற ஒரு விஷயமாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பிட்ட உணவு வகையை குறிப்பிட்ட மனிதர்கள் விரும்பி உண்பது என்பது குடும்ப ரீதியான ஒரு பழக்கமாக இருந்து வருகிறது. குடும்பத்தில் தொடங்கிய அந்தப் பழக்கம் ஓட்டல் என்று சொல்லப்படும் உணவகங்களில் விரும்பியவற்றை சாப்பிடக்கூடிய சமூக பழக்கமாகவும் மாறி இருக்கிறது. ஒரு ஹோட்டல் நிர்வாகத்தில் மெனு கார்டில் உள்ள ஐட்டங்களை சுவையாக வாடிக்கையாளர்களுக்கு தயாரித்து வழங்குவதற்கு ஏற்ப அந்த நிறுவனம் பிரபலமான ஒன்றாக மாறுகிறது. ஹோட்டல் பிசினஸ் என்பது ஒரு தனி நபருடைய வெற்றியாக பார்க்கப்பட்டாலும் அதன் பின்னர் ஒரு மிகப்பெரிய குழுவினரின் கூட்டு முயற்சி இருப்பதை தொழில் முனைவோர்கள் நிதர்சனமாக அறிவார்கள். எல்லா காலகட்டங்களிலும் வர்த்தகரீதியான வாய்ப்பு கொண்ட ஒரு பிசினஸ் என்றால் ஹோட்டல் தொழிலை முக்கியமாக குறிப்பிடலாம். வர்த்தக ரீதியாக ஹோட்டல் பிசினஸ் தொடங்கி அதை லாபகரமாக நடத்த விரும்பும் தொழில் முனைவோர்கள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் பற்றிய தகவலை இங்கே பார்க்கலாம் .
எந்த ஒரு தொழிலையும் நடத்துவதற்கு அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட துறை ரீதியான அனுமதி என்பது அவசியம். அதன் அடிப்படையில், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ என்ற உணவு பொருள்களுக்கான கட்டுப்பாட்டு அமைப்பின் சான்றிதழ், சம்பந்தப்பட்ட மாநகரம் அல்லது நகர எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஹோட்டல் தொழில் நடத்துவதற்கு உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் வணிக உரிமம் ஆகியவற்றை பெற வேண்டும். தொழில் முனைவோர் அவருடைய பெயர் மற்றும் தொழில் விவரம், தொழில் நடத்தும் இடத்திற்கான முகவரி ஆகிய தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பம் அளிக்க வேண்டும். அத்துடன் முத்திரைத்தாளில் தொழில் உரிமம் சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்களை பின்பற்றுவதற்கான ஒரு உறுதிமொழி பத்திரம் கொடுக்க வேண்டும் அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் தொழில் உரிமம் அளிப்பார்கள்.
ஹோட்டல் தொழில் செய்யப்படவுள்ள கட்டிடத்தின் வரைபடம் சம்பந்தப்பட்ட மண்டல செயற்பொறியாளர் மூலம் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். வாடகை கட்டிடமாக இருக்கும் நிலையில் கட்டிட உரிமையாளர் ஆட்சேபணை இல்லா சான்றிதழ் அதாவது என்.ஓ.சி பெற்றிருக்க வேண்டும். மேலும் நடப்பு ஆண்டு வருமான வரி செலுத்தப்பட்டதற்கான நகல், தொழில் வரி நகல், மாவட்ட தீயணைப்பு அதிகாரியின் மூலம் பெறப்பட்ட என்.ஓ.சி, மற்றும் அருகாமையில் உள்ள பொதுமக்கள் அளித்த என்.ஓ.சி ஆகிய நடைமுறைகளை பூர்த்தி செய்து வணிக உரிமம் பெற வேண்டும். குறிப்பாக, ஹோட்டல் பிசினஸ் என்பதால் சுத்தமான குடிநீர் வசதிகள் செய்யப்பட்டு இருப்பதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். காற்றோட்ட வசதி, தீ தடுப்பு வசதி, அமர்ந்து உண்பதற்கான சரியான இருக்கை வசதி, சுகாதார ஆய்வாளர் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களின் அடிப்படையில் தொழில் செய்வதற்கான வணிக உரிமம் உள்ளாட்சி அமைப்புகளால் அளிக்கப்படுகிறது.
தெளிவான தீர்மானம் முக்கியம்
அரசாங்க ரீதியான அனுமதிகளை பெற்ற பிறகு, ஹோட்டல் பிசினஸ் எந்த அளவில் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை தெளிவாக எடுக்க வேண்டும். அதாவது, சிறிய அளவிலா அல்லது ஸ்டார் வேல்யூ கொண்ட வகையில் தொடங்குவதா, சைவமா அல்லது அசைவமா அல்லது இரண்டுமா என்ற தீர்மானத்தையும் செய்த பின்னர் களத்தில் இறங்க வேண்டும். இந்த தொழிலை பொருத்தவரையில் நிச்சயம் கள அனுபவம் இருப்பது தொழில் வெற்றிக்கான நல்ல வாய்ப்பாக அமையும். இல்லாவிட்டால் பணியாளர்கள் அல்லது பங்குதாரர்கள் அவர்களுடைய திறமையை அல்லது தொழில் அனுபவத்தை நம்பித்தான் களத்தில் இறங்கி செயல்பட வேண்டியதாக இருக்கும். ஹோட்டல் பிசினஸ் செய்பவர்கள் நிச்சயம் சமையல் துறையில் அனுபவம் பெற்றவராக இருப்பது மிக மிக அவசியமானது. அவ்வாறு சமையல் துறையில் அனுபவம் இல்லாவிட்டாலும் கூட தொழில் ரீதியான நிர்வாக அனுபவம் பெற்றிருந்தாலும், திறமையான ஊழியர்கள் மூலம் இந்த தொழிலில் வெற்றி பெற முடியும்.
சரியான இடத்தை தேர்வு செய்து ஹோட்டல் தொழிலை ஆரம்பிப்பது பாதி வெற்றி பெற்றதற்கு சமம் என்று அந்தத் தொழிலில் உள்ள வெற்றியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதனால் இடம் தேர்வு என்பது நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு, பல்வேறு கட்ட வர்த்தக ஆய்வுகளுக்குப் பிறகு முடிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.
நன்மை தரும் நான்கு விஷயங்கள்
இந்தத் தொழிலில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள் சொல்லக்கூடிய நான்கு விஷயங்களை தொழில் முனைவோர்கள் கவனத்தில் கொண்டால் வெற்றி பெறுவது உறுதி. அவை, குவாலிட்டி என்ற தரம், குவாண்டிட்டி என்ற அளவு, நீட்னெஸ் என்ற சுத்தம், பிரைஸ் என்ற விலை ஆகிய ஆகிய நான்கு அம்சங்கள் அவசியமானவையாகும்.
தரமே நிரந்தரம்
முதலாவதாக வரக்கூடிய குவாலிட்டி என்ற அம்சம் அந்த நிறுவனம் எவ்வளவு கண் கவரும் வகையில் உள்கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது, காற்றோட்ட வசதி, அமர்வதற்கான இருக்கைகள் மற்றும் டேபிள்கள், பரிமாறப்படும் உணவு நிறம், தரம் மற்றும் சுவை எவ்வாறு இருக்கிறது, உணவை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்களின் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைகிறது. அதாவது, ஒரு ஓட்டலில் தோசை அருமையாக இருக்கும் என்று பெயர் பெற்று இருந்தால், நிச்சயமாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளருக்கு தோசை தயாரிப்பதில் நீண்டகால அனுபவம் இருக்கும். அரிசியை எவ்வாறு ஊற வைப்பது, அதை மாவாக அரைத்து அதில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், அந்த மாவு புளிப்பதற்காக எந்த வகையிலான கலவை பயன்படுத்தப்பட வேண்டும் ஆகிய நுணுக்கமான நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவதுடன், அந்த தோசை வாடிக்கையாளருக்கு சென்று சேரும் பொழுது, அதனுடன் இணைப்பாக அளிக்கப்படும் சட்டினி, சாம்பார் உள்ளிட்ட இணை உணவு வகைகளின் தயாரிப்பு மற்றும் சுவை, மதியம் அளிக்கப்படும் சாப்பாடு வகைகள் ஆகியவை பற்றிய சகல தகவல்களையும் சம்பந்தப்பட்ட தொழில் முனைவோர் நிச்சயம் அறிந்திருப்பார். அதன் அடிப்படையில்தான் ஹோட்டல் பிசினஸ் நல்ல வருமானம் அளிப்பதாக இருக்கும்.
அளவு என்பது அவசியம்
இரண்டாவதாக உள்ள குவாண்டிட்டி என்ற அளவு என்பது உணவுப்பொருட்களின் அளவை குறிப்பதாகும். அதாவது, இட்லியின் அளவு, ஒரு தோசையின் சைஸ், சப்பாத்தி அல்லது புரோட்டா ஆகியவற்றின் வடிவம் மற்றும் அளவு, அசைவ உணவு வகை என்றால் அதற்கான கச்சிதமான வரையறுக்கப்பட்ட அளவுகள், இணை உணவு வகையாக அளிக்கப்படும் சட்னி, சாம்பார், கிரேவி உள்ளிட்ட பல்வேறு வகைகளில் அளவுகள் என்பது மிகவும் முக்கியமானது. காரணம் எந்த ஒரு உணவுப் பொருளும் விரையம் செய்யப்படுவது கூடாது என்பதில் ஹோட்டல் தொழில் முனைவோர் கவனமாக செயல்பட வேண்டும். மேலும், இந்திய பாரம்பரியப்படி மதிய உணவு என்பது ஒரு முழு உணவு வகையாகவும், ஸ்வீட், பொரியல் அவியல், கூட்டு, ரசம், அப்பளம், பாயாசம் உள்ளிட்ட பல்வேறு வகைகளின் சுவையான கூட்டாகவும் அமைந்திருக்கிறது. அளவுச் சாப்பாடு, பார்சல் சாப்பாடு உள்ளிட்ட வகைகளில் சரியான அளவு முறையை கடைபிடிப்பது முக்கியமானது.
சுத்தம் வர்த்தகத்தை அதிகரிக்கும்
மூன்றாவது அம்சமான சுத்தம் என்பது அமரக்கூடிய இருக்கைகள் மற்றும் டேபிள்கள் முதற்கொண்டு பணியாளர்கள் உடைய யூனிபார்ம் சுத்தம் வரையில் பல்வேறு நிலைகளில் சுத்தமும் சுகாதாரமும் கடைப்பிடிக்கப்பட வேண்டியது அவசியம். வாடிக்கையாளர் அமர்ந்து சாப்பிடும் பகுதிகளில், இதற்கு முன்னர் சாப்பிட்டவர் வைத்துள்ள தட்டு வகைகள் அல்லது இலைகள் ஆகியவை உடனடியாக அகற்றப்பட்டு அந்த இடம் சுத்தம் செய்யப்பட வேண்டியது மிகவும் அவசியம். அதற்கு ஏற்ப பணியாளர்கள் விரைவாக செயல்படுவதுடன் வாடிக்கையாளர்களிடம் இனிமையாக பேசுவதும் அவசியமானது. வாடிக்கையாளர்களை உதாசீனப்படுத்தும் ஊழியர்கள் காரணமாக சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிறுவனத்திற்கு வராமல் போகும் வாடிக்கையாளர்கள் இருப்பதை தொழில் முனைவோர் கவனத்தில் கொள்ள வேண்டும். குடிப்பதற்காக அளிக்கப்படும் தண்ணீர் ஆர் ஓ முறையில் சுத்திகரிக்கப்பட்ட தாக இருப்பது வாடிக்கையாளர்கள் உடைய வரவேற்ப்பை தருவதாக இருக்கும்.
தரத்திற்கேற்ற விலை
நான்காவதாக வரக்கூடிய விலை என்பதை ஹோட்டல் பிசினஸ் தொழில் முனைவோர்கள் மிகவும் கவனத்துடன் நிர்ணயிக்க வேண்டும். சக போட்டியாளர்கள் சம்பந்தப்பட்ட உணவு வகைகளுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறார்கள் என்பதை துல்லியமாக கணக்கில் கொள்ள வேண்டும். எந்த ஒரு வாடிக்கையாளரும் தான் கொடுக்கக்கூடிய பணத்திற்கான மதிப்பையும் பெறவேண்டும் என்பதை மனதார விரும்புவார்கள். அதற்கு ஏற்ப ஹோட்டலில் அமர்ந்து சாப்பிடக்கூடிய வாடிக்கையாளராக இருந்தாலும் சரி, பார்சல் மூலம் உணவை அனுப்புவதாக இருந்தாலும் சரி நிச்சயமாக அவற்றில் இருக்கக்கூடிய சுவை மற்றும் நறுமணம் ஆகியவற்றுடன் சரியான அளவுகளில் இருப்பதும் முக்கியமான ஒரு அம்சமாகும். சரியான லாப விகிதத்தை கணக்கிட்டு விலை நிர்ணயம் செய்தால் அது வாடிக்கையாளருக்கு பொருத்தமான நிலையாகவே இருக்கும் என்பது இந்தத் தொழிலில் நீண்டகால அனுபவம் பெற்ற அவர்களுடைய கருத்தாக இருக்கிறது.
மேலே குறிப்பிட்ட விதங்களில் கச்சிதமான செயல்திட்டத்தை மேற்கொள்ளக்கூடிய ஹோட்டல் தொழில் முனைவோர் நல்ல வெற்றி பெறுவார் என்று சொன்னாலும்கூட இன்னும் சில தொழில் நுட்பங்களை மனதில் கொள்ள வேண்டியது அவசியமானது. அதாவது, காலையில் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கக்கூடிய டிபன் மற்றும் காபி வகைகள், முற்பகல் வேலைகளில் அளிக்கக்கூடிய டீ மற்றும் மெதுவடை ஐட்டங்கள், மதிய உணவிற்கான விதவிதமான சாப்பாடு ஐட்டங்கள், பிற்பகல் வேளையில் கொடுக்கப்படும் டீ மற்றும் வடை, போண்டா வகைகள், விதவிதமான பிரியாணி வகைகள், இறுதியாக இரவு நேரத்தில் தயாரிக்கப்படும் டிபன் வகைகள் ஆகியவை பற்றி அனைத்து விதமான தொழில்நுட்ப, தயாரிப்பு மற்றும் விற்பனை விபரங்கள் குறித்த துல்லியமான தகவல்களை ஒரு ஓட்டல் தொழில் முனைவோர் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும். எந்த உணவை அல்லது சைடு டிஷ் வகையை யார் மூலம் தயாரிக்க வேண்டும் என்பதை அறிந்து வாடிக்கையாளருக்கு வழங்கக்கூடிய ஒரு ஹோட்டல் நிச்சயம் நல்ல பெயர் பெறும்.
விளம்பரம் என்பதும் முக்கியம்
சுவை, மணம், தரம், தூய்மை ஆகிய சிறப்பம்சங்கள் கொண்டதாக ஹோட்டல் பிசினஸ் இருந்தாலும், இன்றைய சூழலில் விளம்பரம் செய்ய வேண்டியது அவசியமாக இருக்கிறது. காரணம், பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் அவரவர் பிரச்சினை அவரவர்களுக்கு. இந்த நிலையில் ஒரு நிறுவனம் மக்கள் மத்தியில் அறியப்பட வேண்டுமானால் ஏதாவது ஒரு வகையில் பப்ளிசிட்டி என்ற விஷயம் தேவைப்படுகிறது. அதற்கு ஏற்ப, சம்பந்தப்பட்ட பகுதிகளில் வைக்கக்கூடிய அழகான பிளக்ஸ் பேனர்கள், சமூக வலைதளங்களில் செய்யப்படும் விளம்பரங்கள், இணையதளம் அல்லது உள்ளூர் பத்திரிகைகள் மூலமாக தொடர்ந்து செய்யப்படும் விளம்பரங்கள் மூலமாக ஆரம்ப கட்டத்தில் வாடிக்கையாளர்களை கவர வேண்டியதாக இருக்கும். விடுப்பு இல்லாமல் செயல்படக்கூடிய தொழில் இந்த தொழில் என்பதுடன், வர்த்தக நிறுவனங்களுக்கு இலவசமாக டோர் டெலிவரி செய்வது, சுப நிகழ்ச்சிகளுக்கு செய்யப்படும் உணவு சப்ளையை சொந்த ஆட்கள் மூலம் குறைந்த கட்டணத்தில் அளிப்பது போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களை தொடக்கத்தில் மேற்கொள்ள வேண்டியதாக இருக்கும். குறிப்பிட்ட அளவு வாடிக்கையாளர்கள் கவனத்தை சுவை, மணம் மற்றும் விலை ஆகிய நிலைகளில் ஈர்க்கக்கூடிய ஹோட்டல் நிறுவனம் ஒரு கட்டத்தில் விளம்பரம் இல்லாமலேயே தனக்கான வர்த்தக வாய்ப்புகளை அடைந்துவிடும் என்பதை பல ஆண்டு அனுபவம் பெற்ற தொழில் வல்லுநர்கள் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.