மின் வணிகத்தை எவ்வாறு தொடங்குவது
மின்சாரம் இல்லாமல் ஒரு சில நிமிடங்கள் கூட நம்மால் இருக்க முடியாது என்ற அளவிற்கு அன்றாட வாழ்க்கை மின்சாரத்துடன் தொடர்பு கொண்டதாக அமைந்து விட்டது. மின்சக்தியை பயன்படுத்தி இயங்கும் அனைத்து உபகரணங்களையும் தயாரிப்பது லாபகரமான தொழிலாகும். எலக்ட்ரிக்கல் பிசினஸ் என்பது, பல்வேறு வகையான மின்சார சாதனங்களை வாடிக்கையாளர்களுக்கு சில்லரை விலையில் விற்பனை செய்வது அல்லது மொத்த விலையில் விற்பனை செய்வது என்ற நிலையிலும், சிறிய அளவிலான தயாரிப்பு அலகு அல்லது பெரிய அளவிலான தயாரிப்பு அலகு என்ற இரண்டு வகைகளில் உள்ளது.
இன்றைய அவசர உலகத்தில் வாடிக்கையாளர்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் எலக்ட்ரிக்கல் பிசினஸ், எலக்ட்ரானிக்ஸ் பிசினஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பிசினஸ் ஆகிய 3 வகைகளில் மின் சாதனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பொதுவாக எலக்ட்ரிக்கல் பிசினஸ் என்பது ஒரு தனிப்பட்ட துறையாக செயல்பட்டு வருகிறது. அதாவது, கட்டுமான துறையுடன் இந்த தொழில் நெருங்கிய தொடர்பு கொண்டது. புதிதாக கட்டப்படும் அனைத்துவிதமான கட்டிடங்களிலும், அரசு உரிமம் பெற்ற ஒரு எலக்ட்ரிக்கல் காண்ட்ராக்டர் மேற்பார்வையின் கீழ்தான் சகலவிதமான மின்சார விளக்குகள், தேவையான மின்சார ஒயர்கள், மின்விசிறிகள், ஏசி வகைகள், சகலவிதமான பைப் பிட்டிங்ஸ், கதவுகளில் பொருத்தப்படும் லாக்கர் அமைப்புகள் போன்ற அனைத்து விதமான வசதிகளும் செய்யப்படும்.
பல இடங்களில் எலக்ட்ரிக்கல் ஷாப் என்று நாம் பார்ப்பது அனைத்துமே சில்லரை விற்பனை கடைகள் ஆகும். அங்கு சாதாரண ஜீரோ வாட்ஸ் பல்ப் முதல் அனைத்து விதமான மின்சார விளக்குகள், மின்சாரத்தை எடுத்துச் செல்லும் ஒயர்கள், அவற்றிற்கான குழாய்கள், விதவிதமான மின்விசிறி வகைகள், சமையலறை, பாத்ரூம், படிக்கும் அறை, ஹால் போன்ற வீட்டில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் தேவையான மின்சாதன பொருட்கள் அனைத்துமே கிடைக்கும்
பில்டிங் காண்ட்ராக்ட் பிசினஸ்
கட்டிட பணிகளில் எலக்ட்ரிக்கல் பிசினஸ் காண்ட்ராக்ட் எடுத்து செய்ய வேண்டுமென்றால் அதற்கு குறைந்தபட்சம் சுமார் 500 சதுர அடி கடை தேவைப்படும்.மேலும், சரியான ஸ்டோரேஜ் கெப்பாசிட்டி ஷோகேஸ் அமைப்புகளை கச்சிதமான லைட் செட்டிங் உடன் செய்து வைத்திருக்க வேண்டும். புதிய கட்டிடங்களில் மின்சாதன வசதிகளை செய்யக்கூடிய தகுதி பெற்ற நபர்களாக மாநில அரசின் எலக்ட்ரிகல் லைசென்ஸ் பெற்றவர்கள் இருக்கிறார்கள். இந்த லைசென்ஸ் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் பி லைசன்ஸ், சி லைசன்ஸ் மற்றும் எஸ் லைசென்ஸ் ஆகிய மூன்று விதங்களில் உள்ளது.
இதில் எஸ் லைசென்ஸ் என்பது சூப்பர்வைசர் லைசென்ஸ் ஆகும். அவருடைய மேற்பார்வையில் கீழ்தான் கட்டிடங்களுக்கான மின்சாதன பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த லைசென்ஸ் பெறுவதற்கு ஒருவர் மின்சாரத்துறையில் குறைந்தபட்சம் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் இந்தத் துறையில் குறைந்த பட்சமாக 2 ஆண்டுகள் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். எலக்ட்ரிக்கல் பிசினஸ் துறையில் மின்னியல் துறை பொறியியல் பட்டதாரிகளுக்கு லைசென்ஸ் பெற்றுக்கொள்வது எளிதாக இருக்கும். அப்படி லைசென்ஸ் இல்லாதவர்கள் கட்டிட காண்ட்ராக்ட் பணிகளுக்காக ஒரு லைசென்ஸ் பெற்ற எலக்ட்ரிகல் சூப்பர்வைசரின் துணை அவசியம் தேவைப்படும்.
எலக்ட்ரிகல் ஷாப்
எலக்ட்ரிக்கல் சில்லரை விற்பனை ஷாப் தொடங்க குறைந்தபட்சம் 200 சதுர அடி இடம் போதுமானது. காரணம், சில்லறை விற்பனை என்ற நிலையில் வாடிக்கையாளர்கள் அவ்வப்பொழுது வந்து கேட்க கூடிய பொருட்களை மட்டும் வைத்திருந்து எடுத்துக் கொடுத்தால் போதுமானது. அனைத்து விதமான பொருட்களையும் இரும்பு அலமாரிகளை வைத்து அடுக்கி வைக்க வேண்டிய அவசியம் இருக்காது. அனைத்து பொருட்களையும் மொத்தமாக ஸ்டோரேஜ் செய்யப்பட்டிருக்கும் இடம் வேறு ஒரு பகுதியில் கூட இருக்கலாம். பொதுவாக, எலக்ட்ரிகல் பொருட்களுக்கு எக்ஸ்பயரி டேட் எதுவும் இருக்காது. அதனால் பொருட்கள் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் விற்க வேண்டும் என்ற நிலை எதுவும் ஏற்படுவதில்லை. பொருட்களில் ஏதாவது பாதிப்புகள் இருந்தால் மட்டுமே அது வாடிக்கையாளர் மூலம் திருப்பி எடுத்து வரப்படும். அவ்வாறு பாதிக்கப்பட்ட பொருட்களை சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் திரும்ப பெற்றுக் கொள்ளும் சலுகையும் எலக்ட்ரிகல் பிசினஸில் இருக்கிறது.
ஆன்லைன் முறையில் பொருட்களை விற்பதற்கு இது பொருத்தமான வியாபாரம் அல்ல. வாடிக்கையாளர் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு கடைகளை தேடித்தான் வந்தாக வேண்டும். இந்த தொழிலில் போட்டிகள் எதுவும் இல்லாத பட்சத்தில் நல்ல லாபகரமாக செய்து வர முடியும். வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறும் வகையில் செயல்படக்கூடிய விற்பனையாளர்கள் இந்த தொழிலில் வெற்றிகரமாக விளங்குகிறார்கள்.
இந்த தொழிலில் மிக முக்கியமான விற்பனை ஆதாரம் என்பது கட்டிடங்களுக்கான மின் சாதனங்களை மொத்த விற்பனை செய்யும் வகையில் அமைகிறது. அதனால் கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள காண்ட்ராக்டர்கள் மற்றும் பொறியாளர்கள் ஆகியோர்களின் தொடர்பை நிச்சயம் பெற்றிருக்க வேண்டும்.அவர்களுடன் இணைந்து செயல்படக்கூடிய தொழில்ரீதியான கண்ணோட்டம் என்பது எலக்ட்ரிக்கல் பிசினஸில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோர்களுக்கு அவசியமான ஒன்றாகும்.
தொழில் முதலீடு
எலக்ட்ரிகல் பிசினஸ் தொடங்குவதற்கு நிரந்திர முதலீடு என்ற நிலையில் கடை வாடகை முன்பணம், கணினி உள்ளிட்ட மின் மற்றும் மின்னணு சாதனங்கள், மேசை- நாற்காலிகள், இருசக்கர வாகனம் ஆகியவை இருக்கும். இரண்டாவதாக, நடைமுறை மூலதனம் அதாவது ஒர்க்கிங் கேப்பிட்டல் என்ற வகையில் பொருள் கொள்முதல், இடத்திற்கான வாடகை, ஊழியர் சம்பளம், மின்சாரம் மற்றும் தொலைபேசி கட்டணம், விளம்பர செலவு ஆகியவை அமைந்திருக்கும். இந்த இருவகை முதலீடுகளையும் கணக்கில் கொண்டே தொழிலில் இறங்க வேண்டும்.
புதியதாக இந்த தொழிலில் ஈடுபடுபவர்களுக்கான மிகவும் அவசியமான ஒரு தகவலை இங்கு பார்க்கலாம். அதாவது, சில்லறை விற்பனை தவிர கட்டிட கான்ட்ராக்ட் பணிகளில் ஈடுபடும் பொழுது அதற்கான எஸ்டிமேஷன் எவ்வாறு செய்வது என்பதற்கான அடிப்படையான விஷயங்களாவன:
- சிவில் லே-அவுட்
- எலக்ட்ரிக்கல் பாயிண்ட் லொகேஷன்
- ஒயரிங் லேஅவுட்
- சிங்கிள் லைன் டயக்ராம்
- பவர் கால்குலேஷன்
- ஒயர் லைன் கால்குலேஷன் மற்றும் அதன் நீளம்
- ஸ்விட்ச் பெட்டிகளின் எண்ணிக்கை
- எம்.சி.பி மற்றும் இ.எல்.சி.பி மற்றும் ஐசோலேட்டர் கணக்கீடுகள்,
- யு.பி.எஸ் கனெக்சன் பற்றிய தகவல்
- மொத்த செலவினங்கள்
ஆகியவற்றை கணக்கில் கொண்டு செயல்பட வேண்டும்.
எலக்ட்ரிகல் பிசினஸ் உட்பிரிவுகள்
எலக்ட்ரிக்கல் துறையில் பட்டம் பெற்ற மாணவர்கள் தொழில் முனைவோர்களாக தங்களுடைய வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்கிறார்கள். இன்றைய காலகட்ட எலக்ட்ரிக்கல் பிசினஸ் பல்வேறு உட்பிரிவுகளைக் கொண்டதாக அமைந்திருக்கிறது. அதாவது உபகரணங்கள், மின் கருவிகள் மற்றும் சாதனங்கள், உபயோகிப்பாளர்களுக்கான எலக்ட்ரிகல் பொருட்கள், தொழில்துறை எலக்ட்ரிக்கல் உபகரணங்கள் மற்றும் தொலைத்தொடர்புத் துறை கருவிகள் என்று வெவ்வேறு வகைகளாக உள்ளது.
எலக்ட்ரிகல் உபகரண தயாரிப்பு துறை
இந்திய அளவில் எலக்ட்ரிக்கல் உபகரண தயாரிப்பு துறை என்பது இரண்டு முக்கிய பிரிவுகளாக அமைந்துள்ளது. முதலாவது, ஆற்றல் உற்பத்தி செய்யும் உபகரண பிரிவு என்பதாகும். இது ஆங்கிலத்தில் ஜெனரேஷன் எக்விப்மென்ட் என்று சொல்லப்படும். பாய்லர்கள், டர்பைன் மற்றும் ஜெனரேட்டர் ஆகியவற்றை இந்த பிரிவு தயாரிக்கும். இந்திய அளவில் மொத்தம் 15 சதவிகித அளவுக்கு இந்தத் துறையின் தயாரிப்புகள் பங்களிப்பு செய்கின்றன.
இரண்டாவது பிரிவின் பணியானது, ஆற்றலை கடத்துதல் மற்றும் பிரித்து வழங்குதல் ஆகிய உபகரணங்களை தயாரிப்பது ஆகும். இந்த பிரிவு டிரான்ஸ்மிஷன் அண்டு டிஸ்ட்ரிபியூஷன் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும். கேபிள்கள், டிரான்ஸ்மிஷன் லைன்கள், ஸ்விட்ச் கியர், கெபாசிட்டர்கள், எனர்ஜி மீட்டர்கள், இன்ஸ்ட்ரூமென்ட் டிரான்ஸ்பார்மர்கள், சர்ஜ் அரஸ்டர்ஸ், ஸ்டாம்பிங் அண்ட் லேமினேஷன், இன்சுலேட்டர் இண்டிகேட்டிங் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ், வைண்டிங் வயர்கள் ஆகியவற்றை இந்தப் பிரிவு தயார் செய்யும். இந்திய அளவில் மொத்தம் 85% வர்த்தகம் இந்த பிரிவை சார்ந்து அமைந்துள்ளது.
மேலே கண்ட தகவல்களின் அடிப்படையில் எலக்ட்ரிகல் துறை படிப்பு முடித்தவர்களுக்கு ஏற்ற சில தொழில் வாய்ப்புகள் பற்றிய தகவல்களை கீழே காணலாம்.
- எலக்ட்ரிக்கல் கண்ட்ரோல் பேனல் பிசினஸ்
- எலக்ட்ரிக் எனர்ஜி மீட்டர் பிசினஸ்
- எலக்ட்ரிக் எக்ஸ்டென்ஷன் கார்டு பிசினஸ்
- பேட்டரி தயாரிப்பு
- கெப்பாசிட்டர் தயாரிப்பு
- இன்வெர்ட்டர் தயாரிப்பு
- வோல்டேஜ் ஸ்டெபிலைசர் தயாரிப்பு
- எலெக்ட்ரிக் ஸ்விட்ச் தயாரிப்பு
- எல்.இ.டி மின் விளக்குகள் தயாரிப்பு
- வயர் மற்றும் கேபிள் தயாரிப்பு
- உயர் மின் அழுத்த சர்க்யூட் பிரேக்கர் தயாரிப்பு,
- கட்டுப்பாடு மற்றும் தானியங்கி உபகரணங்கள் தயாரிப்பு,
- பயர் அலாரம் கண்ட்ரோல் பேனல் தயாரிப்பு,
- மின்சாதன பொருட்களுக்கான பரிசோதனைகள்,
- வீடுகளுக்குத் தேவையான ஒயரிங் பணிகள்
- மற்றும் பேட்டரி ரீ கண்டிஷனிங்
ஆகியவற்றை சுய தொழிலாக எலக்ட்ரிக்கல் துறை பட்டதாரிகள் மேற்கொண்டு தங்களுக்கான வாழ்வாதாரத்தை வகுத்துக் கொள்ளலாம்.
மின்சாரம் தயாரிப்பு
அன்றாட வாழ்வில் நாம் உபயோகப்படுத்தும் மின்சாரம் ஆல்ட்டர்னேட் கரண்ட் மற்றும் டைரக்ட் கரண்ட் என இரு வகையாக இருக்கிறது. இதில் ஆல்டர்னேட் கரண்டுதான் அன்றாடம் வீட்டில் உபயோகப்படுத்தும் மின்சாரம் ஆகும். டைரக்ட் கரண்ட் என்பது டைனமோ மூலம் கிடைப்பது ஆகும். இது வணிக ரீதியாக உற்பத்தி செய்யப்படுவதில்லை. அதேசமயம் டைரக்ட் கரண்ட் பேட்டரிகளில் சேமிக்க முடியும். பேட்டரிகளை சார்ஜ் செய்ய, ஏ.சி மின்சாரம் டி.சி ஆக மாற்றப்பட்டு சார்ஜ் செய்யப்படுகிறது. அதனால், சூரிய ஒளி மின்சார உற்பத்தி என்பது ஒரு லாபகரமான தொழிலாக எலக்ட்ரிகல் பிசினஸ் மாறி இருக்கிறது. சூரியன் இருக்கும் வரை அதன் ஒளிக்கதிர்களில் இருந்து தடையின்றி பெறக்கூடியது. எதிர்காலத்தில் இது மற்றவகை மின் உற்பத்திக்கு ஒரு மாற்றாக அமையும். வீட்டு உபயோகத்திற்கான மின்சாரத்தை சூரிய ஒளி மூலம் தயாரிக்க பலர் துவங்கியுள்ளனர். அதனால், சோலார் பவர் சிஸ்டம் வடிவமைத்தல், பராமரித்தல் போன்றவற்றில் சிறப்பான தொழில் வாய்ப்புகள் பெருமளவுக்கு இருக்கின்றன.
சிறிய காற்றாலையை வீட்டின் மேல் மாடியில் அமைத்துக் கொண்டு அத்துடன் அமைந்த சோலார் தகடுகள் மூலமாக மின் உற்பத்தி செய்யும் ஹைபிரிட் முறையும் நடைமுறையில் உள்ளது. பகலில் சூரிய ஒளி மூலமும், இரவு மற்றும் மாலை வேளைகளில் இந்த காற்று மின் இயற்றி மூலம் மின்சாரம் பெறலாம் என்பதால் இதற்கான தொழில் வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது.
புதிய தொழில் முனைவோர்களுக்கான உதவிகள்
எலக்ட்ரிக்கல் பிசினஸ் துறையில் விற்பனை அல்லது தயாரிப்பு தொடங்க முடிவு செய்பவர்கள் இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். ஒன்று, தொழிலை சிறப்பான முறையில் திட்டமிட வேண்டும். மற்றொன்று, தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில் துறை சம்பந்தப்பட்ட நுணுக்கங்களையும், தற்போதைய தொழில் நுட்பங்களையும் தெரிந்துகொள்ள முறையான பயிற்சி எடுக்க வேண்டும். மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகள் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி திட்டம், வர்த்தக திறன் மேம்பாட்டு திட்டம் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி ஆகிய பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகின்றன. தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம், இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி, தேசிய சிறுதொழில் நிறுவனம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் ஆகிய அரசு அமைப்புகள் தொழில் முனைவோர்களுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும், உதவிகளையும் அளித்து வருகின்றன. அவை பற்றி தகவல் அறிய, சம்பந்தப்பட்ட மாவட்டத் தொழில் மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.