பொம்மை மற்றும் விளையாட்டுப் பொருட்கள் விற்பனை தொழில் செய்ய எளிய வழிமுறைகள்
நீங்கள் பொம்மை அல்லது விளையாட்டுப் பொருட்கள் சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்யக்கூடிய தொழிலை சொந்தமாக தொடங்க விரும்புகிறீர்கள் என்றால் உங்களுக்கான அனைத்து விதமான தகவல்களையும் இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ள முடியும். குழந்தைகளுக்கு பொம்மைகளை வாங்கிக் கொடுக்கும்போது அவர்களின் முகத்தில் உள்ள எல்லையற்ற சந்தோஷத்தை காண்பது அழகாகவும் எல்லையற்ற மன நிறைவைத் தரக் கூடியதாகவும் இருக்கும். அவ்வாறு குழந்தைகளின் முகத்தில் புன்முறுவலை தரக்கூடிய தொழிலை செய்து, அந்த பொருட்கள் விற்பனை மூலம் நீங்கள் பணமும் சம்பாதிப்பது என்பது கண்டிப்பாக இரட்டிப்பு மகிழ்ச்சியை தரும். இத்தகைய இரட்டிப்பு மகிழ்ச்சியை தரக்கூடிய தொழில் செய்வதற்கான வாய்ப்பு வந்தால், மறுக்காமல் தொழிலை செய்வதற்கான அடுத்தகட்ட வேலையை அனைவரும் யோசிப்பார்கள்.
இரட்டிப்பு மகிழ்ச்சியை தரக்கூடிய தொழிலாக இருந்தாலும் உடனடியாக ஆரம்பிக்காமல் தொழில் பற்றிய நுணுக்கங்களையும் ஆபத்துக்களையும் நன்கு ஆராய்ந்து அதன் பிறகு விளையாட்டுப் பொருட்கள் மற்றும் பொம்மை விற்பனைக் கடையை தொடங்குவது நல்லது. ஏனென்றால் மற்ற வியாபாரத்தில் பொருளை வாங்க வருபவர்கள் அந்த பொருளை பற்றி தெரிந்தவர்களாகவும் அல்லது நீங்கள் அந்த பொருளை பற்றி விளக்கிக் கூறினால் அதை புரிந்து கொள்ளக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் விளையாட்டுப் பொருட்கள் மட்டும் பொம்மை விற்பனையில் பொருளை வாங்குபவர்கள் குழந்தைகள் ஆவர்.
குழந்தைகளுக்கு ஏற்றவாறு உங்களுக்கு வியாபாரம் செய்யும் பொறுமையும் திறமையும் இருத்தல் மிக மிக அவசியம். குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டுப் பொருளை அவர்கள் விருப்பம் அறிந்து கொடுப்பதும் அதற்கு ஏற்ற விலை பேரத்தை பெற்றோரிடம் பேசுவதும் உங்களுடைய மிக முக்கியமான பணியாக இருக்கும். அது மட்டுமல்லாது ஒவ்வொரு ஆண்டும் புதிதாக சந்தையில் வரக்கூடிய விளையாட்டுப் பொருட்களின் வரவு, பழைய விளையாட்டு பொருட்கள் மீதுள்ள ஈர்ப்பை குறைப்பதால் பல சிக்கல்கள் சந்திக்க நேரிடும். ஆகவே நீங்கள் பாதுகாப்பான முறையில் ஒரு பொம்மை விற்பனை வணிகத்தை நிறுவுவதற்கான முழு வழிமுறைகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பொம்மை விற்பனை நிலையத்தை திறப்பதற்கான படிப்படியான வழிமுறைகள்
1) பொம்மைகள் விற்பனை பற்றிய சந்தை ஆராய்ச்சி செய்ய வேண்டும்
நீங்கள் குழந்தைகளாக இருக்கும்போது விளையாடிய பொருட்களை மற்றும் பொம்மைகளை மனதில் வைத்துக்கொண்டு பொம்மை பொருட்கள் விற்பனை கடையை துவங்கினால் இக்கால கட்டத்தில் உள்ள சிறுவர்கள் உங்கள் கடையை விரும்பமாட்டார்கள். இக்கால கட்டத்தில் உள்ள சிறுவர்களுக்கு எந்தெந்த மாதிரியான விளையாட்டு பொருட்கள் பிடிக்கின்றது, எந்தெந்த மாதிரியான தொழில்நுட்பங்களை விளையாட்டுப் பொருட்களின் மீது திணித்து உள்ளார்கள், நடைமுறை சந்தையில் உள்ள விளையாட்டுப் பொருட்களின் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையிலான பொதுவான ஆராய்ச்சியை மேற்கொள்வது மிகவும் முக்கியம். ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் மக்கள் தொகையின் மூலம் குழந்தைகள் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியும்.இதன் மூலம் உங்களுக்கான வாடிக்கையாளர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு நீங்கள் தைரியமாக இந்த தொழிலை செய்ய முடியும். நாளுக்கு நாள் புதுப்புது பொம்மை மற்றும் விளையாட்டுப் பொருட்கள் விற்பனை கடை தொடங்கினாலும் அதிகரித்துவரும் குழந்தைகளின் எண்ணிக்கை காரணமாக இது சமநிலைப்படுத்த படுகிறது.
இவ்வாறு அதிகரித்து வரும் பொம்மை விற்பனைக் கடைகளிடமிருந்து நீங்கள் போட்டி போட்டுக்கொண்டு வெற்றி பெற வேண்டுமென்றால் மற்ற கடைகளை விட நீங்கள் தனித்து தெரிய வேண்டும். அதாவது மற்ற கடைகளை போல் ஒரே மாதிரியான பொம்மை மற்றும் விளையாட்டுப் பொருட்களை வைத்துக்கொள்ளாமல் பல்வேறு உலக சந்தைகளை ஆராய்ந்து புதுப்புது தொழில்நுட்பத்துடன் வரக்கூடிய விளையாட்டுப் பொருட்களை உங்கள் ஊரில் அறிமுகம் செய்துவைத்து குழந்தைகளை கவர வேண்டும். நீங்கள் விற்கும் பொம்மை பொருட்கள் வெறும் ஒரு விளையாட்டுப் பொருளாக மட்டும் இல்லாமல் குழந்தைகளுக்கான கல்வி அறிவையும் வளர்க்கக்கூடிய பொம்மைகளாக விற்றால் குழந்தைகள் மட்டுமல்லாது பெற்றோர்கள் இருக்கும் உங்களது கடை மீது நன்மதிப்பு வரக்கூடும். உங்கள் ஊரில் விளையாட்டுப் பொருட்கள் மற்றும் பொம்மைகளுக்கு நல்லதொரு சந்தை நிலவரம் இல்லை என்ற ஆராய்ச்சி முடிவு உங்களுக்கு வந்தால் உங்களது திட்டத்தை கைவிட்டு வேறு தொழிலைப் பற்றி சிந்திப்பதே நல்லதாகும்.
2) விளையாட்டுப் பொருட்கள் விற்பனைக்கு ஏற்ற இடத்தை தேர்வு செய்ய வேண்டும்
நீங்கள் தனியாக ஒரு கட்டிடத்தில் தொழிலை தொடங்க விரும்புகிறீர்கள் என்றால், உங்கள் கடைக்கு அருகில் சினிமா தியேட்டர்கள், ஐஸ்கிரீம் பார்லர்கள், விளையாட்டு பூங்காக்கள் மற்றும் இதர ஸ்டேஷனரி விற்பனை கடைகள் போன்றவை இல்லாமல் இருப்பதே நல்லது. ஏனென்றால் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் செலவைக் குறைப்பதற்காக குழந்தைகளுக்கு ஒரு ஐஸ்கிரீம் வாங்கித்தந்து அல்லது விளையாட்டு பூங்காக்களில் குழந்தைகளை விளையாட அனுமதி அளித்து தங்கள் குழந்தைகளை சமாதானப் படுத்தி விடுவார்கள். ஆனால் இவை அனைத்தும் உள்ளடக்கிய பெரிய ஷாப்பிங் மால்களில் உங்களது கடையை நிறுவினால் தரைதளத்தில் முன்பகுதியில் உள்ள ஏதேனும் ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து அதில் நிறுவுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அனைத்துக் குழந்தைகளின் பார்வையிலும் உங்களது கடை கண்ணில் படுவதோடு மட்டுமல்லாமல் குழந்தைகள் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக இருக்கும்.
3) உங்கள் கடையை பதிவு செய்யுங்கள்
விளையாட்டுப் பொருட்கள் விற்பனை மட்டுமல்லாது நீங்கள் எந்த ஒரு தொழிலை செய்தாலும் இந்திய அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தொழில்முனைவோராக உங்களை பதிவு செய்து அனைத்து சட்டப்பூர்வ சான்றிதழ்களையும் பெறுவது, பிற்காலத்தில் பல்வேறு அரசு வரிச்சலுகையை பெறுவதற்கு அவசியமாகும். நீங்கள் தனி நிறுவன உரிமையாளராக ஆகவோ அல்லது பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பொறுப்பாளர் ஆகவோ சட்ட திட்டத்தில் இடம் உண்டு. இதில் எந்த வகை நிறுவனமாக உங்களை பதிவு செய்து கொள்வது உங்களுக்கு நல்ல சௌகரியங்களை தரும் என்பதை நல்ல வழக்கறிஞரிடம் முழு திட்டத்தையும் கேட்டறிந்து முடிவு செய்ய வேண்டும்.
4) அழகான உட்கட்டமைப்பை கொண்ட இன்டீரியர் வேலைகளை செய்ய வேண்டும்
உங்கள் கடையில் விற்கப்படும் அனைத்து பொருட்களையும் விளையாண்டு பார்த்து வாங்கிக் கொள்ளும் அளவிற்கு உள்ள இடத்தை உங்களது கடைக்கு உள்ளேயே நீங்கள் அமைக்க வேண்டும். குழந்தைகளுக்கு பிடித்தமான பல்வேறு வண்ணமயமான சுவரொட்டிகளையும் பதாகைகளையும் ஆங்காங்கே நிறுவ வேண்டும். எந்தப் பொருட்கள் அதிகமாக தற்போது நடைமுறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பதை அறிந்து வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் கண்களில் தெளிவாக படும்படி பொம்மைகளை அடுக்கி வைக்கவேண்டும். உங்கள் கடைக்கு தாராளமாக இடம் இருக்குமேயானால் அரண்மனை, பவுண்டைன் போன்றவற்றை நிறுவுவதன் மூலம் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க முடியும். உட்புற செலவு அதிகம் மற்றும் விளையாட்டுப் பொருட்களுக்கான சேத வாய்ப்புகள் அதிகம் போன்றவற்றின் காரணமாக சரியான காப்பீட்டு திட்டங்களை தெரிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது.
குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற மாதிரியான பொம்மைகளை பிரித்து வைத்தால் குழந்தைகளுக்கு பரிசு பொருள் வாங்குவதற்காக வரும் இளைஞர்களுக்கு உதவியாக இருக்கும். பஞ்சினால் செய்யப்பட்ட பொம்மைகள் ஒரு பிரிவு, அறிவு சார்ந்த விளையாட்டு பொருட்களுக்கு ஒரு பிரிவு, வாகனம் போன்ற வடிவமைப்பைக் கொண்ட பொம்மைகளுக்கு ஒரு பிரிவு என அந்தந்தப் பொருளின் தன்மைக்கு ஏற்ற வகையில் பிரித்து வைப்பது முக்கியம். உட்புற கட்டமைப்பு மட்டுமல்லாது உங்களது கடைக்கு வெளியில் உள்ள இடங்களிலும் நல்லதொரு பதாகைகளை கொண்டு விளம்பரம் செய்து அதன் மேல் பல்வேறு வண்ண விளக்குகளை பயன்படுத்தினால் தூரத்தில் இருக்கக்கூடியவர்களுக்கும் ஒரு கண் பார்வை உங்களது கடை மீது படும். இவ்வாறு பொதுமக்களை உங்களது கடை மீது பார்வையை செலுத்தக் கூடிய வகையில் விளம்பரங்கள் மற்றும் விளக்கு ஒளிகள் இருந்தால் மட்டுமே அதிகப்படியான வாடிக்கையாளர்களை நாளுக்குநாள் பெறமுடியும்.
5) குழந்தைகளுக்குத் தேவையான மற்ற பொருட்களும் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்துங்கள்
விளையாட்டுப் பொருட்கள் மற்றும் பொம்மைகளை மட்டும் கவனத்தை செலுத்தாமல் குழந்தைகளுக்கு தேவையான மற்ற பொருட்களான உடைகள், உணவுகள், படுக்கைகள், ஸ்டேஷனரி பொருட்கள் போன்ற அனைத்தும் கிடைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரும்போது உங்களது வியாபாரம் மிக விரைவாக வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் இத்தகைய முயற்சிக்கு நீங்கள் மிக அதிகமான முதலீடு போட வேண்டியதாக இருக்கும் என்பதால் உங்களது பொருளாதார சூழ்நிலையை அறிந்து அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.
ஒவ்வொரு விதமான பொம்மைகளுக்கும் தனித்தனி பிரிவுகள் அமைப்பதன் மூலம் உங்கள் வாடிக்கையாளர் விரும்பும் பொருளை நீங்கள் எடுத்துக் கொடுப்பதற்கு ஏதுவாக இருக்கும். உங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களை பார்த்து அல்லது அவர்களிடம் பேசி புரிந்து எந்த மாதிரியான விலையில் உள்ள விளையாட்டு பொருட்களை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை தெரிந்து அதற்கேற்ற பொருட்களை அவர்கள் குழந்தைகளின் மனம் சந்தோஷம் படும்படி நீங்கள் விற்றால் உங்களின் மீது நன்மதிப்பு பெற்றோருக்கு வரும். அக்குழந்தைகளின் பெற்றோருக்கு உங்கள் மீது நன்மதிப்பு வந்தால் குழந்தைகள் வீட்டில் பொம்மைகளை கேட்கும் போது உங்களது கடைக்கு தேடி வந்து வாங்குவார்கள்.
6) தகுதியான ஊழியர்களை தேர்ந்தெடுத்து பணியமர்த்த வேண்டும்
ஒரு தொழில் நிறுவனராக நீங்கள் செய்யக் கூடிய மிக முக்கியமான வேலை என்னவென்றால் உங்களது நிறுவனத்திலோ கடையிலோ அல்லது அலுவலகத்திலோ வேலை செய்யக்கூடிய சரியான திறமை வாய்ந்த நபர்களை தேர்ந்தெடுப்பது ஆகும். லாப வாய்ப்புகள் பலவாறு அமைந்தாலும் ஒரு சில நிறுவனங்களால் சரியான வெற்றியை அடைய முடியாமல் போனதற்கு மிக முக்கிய காரணம் என்னவென்றால் தகுதி வாய்ந்த பணியாளர்களை தேர்ந்தெடுக்காமல் விட்டதே ஆகும். ஒரு சில லட்சங்கள் முதலீட்டில் நீங்கள் ஆரம்பிக்கும் விளையாட்டுப் பொருட்கள் விற்பனை தொழிலுக்கு குறைந்தபட்சம் கீழே குறிப்பிட்ட அளவு பணியாளர்கள் தேவைப்படுவார்கள்.
- ஒரு மேலாளர்
- ஒரு கணக்காளர்
- 3 கடை உதவியாளர்கள்
7) திறப்பு முதல் ஒரு ஆண்டு வரையிலான மார்க்கெட்டிங் உத்திகளை வரையறையுங்கள்
உங்களது பொம்மை மற்றும் விளையாட்டுப் பொருட்கள் விற்பனை கடையில் மொத்த முதலீட்டில் குறைந்த பட்சம் ஒரு 20 சதவீதமாவது விளம்பரங்களுக்கு பயன்படுத்த வேண்டும். செய்தித்தாள்கள், தொலைக்காட்சி, வானொலி, சமூக வலைதளங்கள், துண்டுப்பிரசுரங்கள், பெரிய பதாகைகளில், மற்றும் நடமாடும் ஒலிபெருக்கிகள் போன்ற அனைத்தையும் பயன்படுத்தி உங்களது கடை துவக்கத்தை பற்றிய எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் மக்களிடையே அதிகரிக்க வேண்டும். விளம்பரத்தின் உதவியுடன் நீங்கள் நிச்சயமாக உங்கள் வணிகத்தை ஊக்குவிக்க வேண்டும்.
கடைக்கு நாளன்று வரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் நிச்சய பரிசு வழங்குவது, அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கான குலுக்கல் பரிசு வழங்குவது, பிறந்தநாள் பரிசு பொருட்கள் வாங்குபவர்களுக்கு ஏதேனும் சலுகை வழங்குவது போன்ற விளம்பர செலவுகளை செய்வது பற்றி கவலைப்பட கூடாது. ஏனென்றால் இத்தகைய விளம்பரங்கள் மூலமாக தான் உங்களது கடை பற்றி வாய்மொழி வழியாக பல்வேறு தரப்பட்ட மக்களுக்கும் சென்று அடைவதற்கான வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் இவ்வளவு அதிகமாக செலவு செய்து நீங்கள் விற்க கூடிய பொருள்கள் மீது விலை ஏற்றத்தை வெளிப்படுத்தினால் மக்களிடம் வெறுப்பை சம்பாதித்து விடுவீர்கள். ஆதலால் சரியானதொரு மார்க்கெட்டிங் திட்டத்தை செயல்படுத்தி உங்களது பொம்மைகளுக்கு இருதரப்பிலும் நன்மை பயக்கக்கூடிய விலையை நிர்ணயிக்க வேண்டும்.