ஈவன்ட் டெகரேஷன் பிசினஸ் தொடங்குவதற்கு அத்தியாவசியமான தகவல்கள்
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மக்களின் வாழ்க்கை முறை, உறவு நிலை, வாழ்வியல் கொண்டாட்டங்கள் மற்றும் நோக்கங்கள் ஆகிய அனைத்திலும் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குடும்ப ரீதியான விழா என்றாலும் அல்லது சமூக அளவிலான திருவிழா என்றாலும் இந்திய குடும்பங்களில் உள்ள அனைத்து சொந்தங்களும் ஒன்றாக இணைந்து அவர்களுடைய பங்களிப்பின் மூலம் விழாவின் இனிமையை அதிகரிப்பது வழக்கம். ஆனால், கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை அவ்வளவாக நடைமுறையில் இல்லாத இன்றைய சூழலில் குடும்ப விழாக்கள் விமரிசையாக நடத்துவதற்கு தேவையான வசதிகள் தற்போதைய நகர வாழ்வில் இல்லை. அதன் அடிப்படையில் நிகழ்ச்சிகளை அழகுற வடிவமைத்து நடத்துவதற்கு வெளியிலிருந்து உதவி செய்யும் தனிநபர்களை நாட வேண்டியதாக இருந்தது. அதற்கான வர்த்தக முயற்சிதான் ஈவன்ட் டெக்கரேஷன் பிசினஸ் என்ற தொழில் பிரிவாக உருவாகி இருக்கிறது.
தொழில் மற்றும் பணி வாய்ப்பு ஆகிய நிலைகளில் நகர்ப்புறங்களில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கும் அனைத்து தர மக்களுக்கும் அவர்களுடைய குடும்ப மற்றும் சமூக விழாக்களை நடத்துவதற்கு வர்த்தகரீதியாக நிகழ்ச்சி அலங்காரங்களை செய்து தருவதற்கு தனி மனிதர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. தொழில் ரீதியாக ஈவன்ட் டெக்கரேஷன் பிசினஸ் நடத்த, சாதாரண வணிக நிறுவனப் பதிவு மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தொழில் பர்மிட் ஆகியவை போதுமானதாகும்.
ஈவன்ட் டெக்கரேஷன் பிசினஸ் என்பது பல்வேறு வகையான கிளைகளை கொண்ட தொழிலாக இருக்கிறது. அதாவது திருமணம், காது குத்துதல், பூப்பு நன்னீராட்டு விழா, எழுதிங்கள் சீர் விழா, மண்டபங்களில் நடக்கும் தனிப்பட்ட நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள், அவற்றிற்கு தேவையான பந்தல் மற்றும் அலங்கார வேலைகள் போன்ற வெவ்வேறு நிலைகளில் அதன் தேவை சமூகத்திற்கு அவசியமாக உள்ளது. இன்றைய வாழ்க்கைச் சூழலில் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்தும் குடும்பத் தலைவர் ஒருவர் ஆகவே அனைத்து வேலைகளையும் செய்வது இயலாத ஒன்று. திருமணம் என்று எடுத்துக் கொண்டால் பந்தல்கால் நடும் அதிலிருந்து மணமக்களை மண்டபத்திலிருந்து அழைத்துச் செல்வது வரை உள்ள நிகழ்ச்சிகளுக்கான அலங்காரம் என்பதை ஒரு குடும்பத்தவர் மட்டும் செய்து முடிப்பது இயலாத காரியம். திருமணம் மட்டுமல்ல வேறு எவ்விதமான குடும்ப சுப நிகழ்ச்சியாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கான அலங்காரம் என்பது ஒரு பெரும் கூட்டு முயற்சியாகவே நம்முடைய சமூக அளவில் மாறி இருக்கிறது. பழைய காலங்களில் குடும்ப உறவினர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து செய்த வேலைகளை, இன்றைய நவீன காலகட்டத்தில் தனிப்பட்ட நிறுவனங்கள் குறிப்பிட்ட கட்டணங்களை நிர்ணயம் செய்து அவர்களது சேவையை அளிக்கின்றன.
தற்போது அலங்கார அமைப்புகள் இல்லாத குடும்ப ரீதியான அல்லது சமூக ரீதியான நிகழ்ச்சிகள் எதுவுமே நடத்தப்படுவதில்லை. இந்த விஷயத்தில் உயர் வர்க்க சமூகத்தினரும், நடுத்தர வர்க்க மக்களும், குறிப்பாக கீழ்த்தட்டு மக்களும் கூட அலங்கார வகைகளை அவர்களது நிலைக்கு ஏற்ப செய்து கொள்வதாக தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் இந்த தொழில் பிரிவுக்கான வாய்ப்பு தற்போது பிரகாசமாக இருப்பதாக குறிப்பிடலாம்.
குறிப்பாக, அரசியல் கட்சிக் கூட்டங்கள், கட்சிகளின் நிர்வாகிகள் கூட்டம், ஆன்மீக ரீதியான திருவிழாக்கள் ஆகியவற்றில் ஈவன்ட் டெக்கரேஷன் பிசினஸ் துறையில் உள்ள தொழில் முனைவோர்களுக்கு எப்போதும் பரபரப்பான தொழில் வாய்ப்பு இருப்பதை அனைவரும் உணர்ந்திருப்பார்கள். சிறப்பான மேலாண்மை திறன் உள்ள தனிநபர்களின் திறமையான நிர்வாகம் மூலமாகவே இந்த துறையில் வெற்றி என்பது சாத்தியம். ஏனென்றால், உட்காருவதற்கான இருக்கைகள், பந்தல் அமைப்பது, டியூப் லைட் பொருத்துவது, மைக் செட்டிங், சீரியல் லைட்டுகள் அமைப்பது, பல்வேறு வண்ண வண்ண விளக்குகள் அமைப்பது, அலங்கார வளைவுகள் மற்றும் புஷ்ப அலங்காரம் போன்ற கலை வடிவங்களை கண் கவரும் வகையில் செய்யும் பணி என்பது எளிதான காரியம் அல்ல. திட்டமிட்ட முறையான உழைப்பை அளிப்பவர்களுக்கு இந்த தொழில் பிரிவில் வெற்றி கிட்டும்.
தனித்திறமைகள் அவசியம்
ஈவன்ட் டெக்கரேஷன் பிசினஸ் செய்ய திட்டமிட்ட கூடிய தொழில் முனைவோர்கள் களத்தில் இறங்கி கடினமாக உழைக்க வேண்டிய மன உறுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும். அதற்கு சக பணியாளர்கள் உடைய மனோநிலை மற்றும் வேலையில் உள்ள திறமை ஆகியவற்றை சரியாக கண்டறியக்கூடிய திறன் பெற்றவர்களாக இருப்பது அவசியம். காரணம், நடைபெறக்கூடிய நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட டெக்கரேஷன் நிறுவன நிர்வாகியை மட்டுமே நிகழ்ச்சி நடத்துனர்கள் தொடர்புகொண்டு குற்றம் குறைகளை தெரிவிப்பார்கள். அவற்றை மனம் கோணாமல் கேட்கும் திறன் இருக்க வேண்டும் என்பதுடன், அவற்றை எதிர்காலங்களில் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களை தவிர்ப்பதும் அவசியம்.
இந்த தொழிலை இரண்டு வகையாக ஒரு தொழில் முனைவோர் மேற்கொள்ள முடியும்.
- முதலாவது ஒரு ஈவன்ட் மேனேஜ்மென்ட் அமைப்புடன் ஒன்றாக இணைந்து அவர்களுடைய நிகழ்ச்சிகளில் ஈவன்ட் டெக்கரேஷன் பிசினஸ் முறையில் பங்களிப்பு செய்யலாம்.
- இரண்டாவது முறை என்னவென்றால் நேரடியாகவே ஒரு நிகழ்ச்சியில் டெக்கரேட்டிவ் பணிகளை மேற்கொண்டு செய்வதாகும்.
பொதுவாக, மக்கள் மத்தியில் சிக்கனம் என்ற மனநிலை பலருக்கும் இருந்து வருவதால் குறிப்பிட்ட நிகழ்ச்சியை நடத்துபவர்களிடம் ஈவன்ட் டெக்கரேஷன் பிசினஸ் தொழில் முனைவோர் நேரடியாக அணுகி வாய்ப்பு கேட்கும் பட்சத்தில் நிச்சயம் அவர்களுக்கான சந்தர்ப்பத்தை பெறுகிறார்கள். ஏனென்றால், ஒரு நிகழ்ச்சியை ஏற்பாட்டாளர்கள் மூலமாக செய்து நடத்துவதை விடவும், நிகழ்ச்சி சம்பந்தமான அலங்காரப் பணிகளை மேற்கொள்ளப் அவர்களை வைத்து நிகழ்ச்சியை சிக்கனமாக முடிப்பதற்கே பலரும் விரும்புவதாக தெரிய வந்துள்ளது. அதனால், நிகழ்ச்சியை நடத்தும் தொழில் முனைவோர், அங்கு வரக் கூடிய தனி நபர்களிடம் நிறுவனம் பற்றிய தகவல்கள் மற்றும் தரப்படும் சேவைகள் பற்றிய செய்திகளை அறியும்படி ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.
தொழில் ரீதியான முதலீடு
முதலில் தொழில் செய்வதற்கான சரியான பகுதியை தேர்வு செய்வது அவசியம். மேலும் எந்த அளவில் செய்ய வேண்டும் என்பதற்கான தெளிவான வரையறை அவசியம். தொழிலுக்கான அனைத்து வகையான பொருட்களையும் சொந்த முதலீட்டில் வாங்குவதா அல்லது வாடகைக்கு எடுத்துக் கொள்வது என்பதற்கான தீர்மானம் மிக அவசியம். அதன் அடிப்படையில் தக்க தொழில் பார்ட்னர்கள் உடன் இணைந்து வாடிக்கையாளர் சேவையை அளிக்கலாம். இந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் பலரும் பெரும்பாலான பொருட்களை வாடகை முறையிலேயே பெற்று, நிகழ்ச்சி நடத்தப்பட்டு முடிந்தபிறகு சம்பந்தப்பட்ட பொருட்கள் திருப்பி அளிக்கப்பட்டு அதற்கான வாடகை அளிக்கப்படும் விதத்திலேயே செயல்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. இந்தநிலையில் அதிக முதலீடு தேவைப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அனைத்து பொருட்களையும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் இருப்பில் வைத்துக் கொள்வதற்கான இடமும் தேவையில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
சிறிய அலுவலகமே போதுமானது
குறைந்த முதலீடு என்ற நிலையிலும், அலுவலகத்திற்கான இடமும் கூட சிறியதாக இருந்தாலும் போதும் என்ற நிலையிலும் இந்த தொழிலை எளிதாக ஆரம்பித்து விட முடியும். ஆனால் பணியாட்கள் மற்றும் இதர பொருட்களை ஒன்று சேர்த்து நிகழ்ச்சியை நல்லவிதமாக முடித்து வாடிக்கையாளரிடம் இருந்து தேவையான கட்டணத்தை பெறுவதற்கு, தனித் திறமை பெற்றவராக ஈவன்ட் டெக்கரேஷன் பிசினஸ் தொழில் முனைவோர் இருக்க வேண்டும். சொந்த இடமாக இருந்தாலும் சரி வாடகை இடமாக இருந்தாலும் சரி சிறிய அளவிலான இடம் போதுமானது. ஆனால், அலுவலகம் அனைவரும் எளிதாக அணுகுவதற்கு ஏற்றவகையில் நல்ல சாலை வசதி கொண்ட பகுதியில் அமைந்திருக்க வேண்டும். அலுவலகத்தில் நிச்சயமாக ஒரு ரிசப்ஷனிஸ்ட் இருப்பது முக்கியம். வரக்கூடிய அனைத்து வாடிக்கையாளர்கள் இடமும் சரியான தகவல்களை கேட்டறிந்து, முறையான விஷயங்களை அளிக்கக்கூடிய விதத்தில் அவர் செயல்பட வேண்டும். காரணம், வரக்கூடிய வாடிக்கையாளர் அவருக்கு கிடைக்கக்கூடிய வரவேற்பு மற்றும் மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில்தான் நிறுவனத்தை தேர்வு செய்கிறார்.
தேவையான பணியாளர்கள்
இந்த தொழில் பிரிவுக்கு கான்ட்ராக்ட் முறையில் பணியாளர்களை தேர்வு செய்து கொள்வதே சிறந்தது. அதாவது ஒரு வருடத்தின் அனைத்து மாதங்களிலும் நிகழ்ச்சிகள் இருக்கும் என்பதை நிச்சயமாக சொல்ல இயலாது. ஒரு மாதத்தின் எட்டு மாதங்கள் நிச்சயமாக ஈவன்ட் டெக்கரேஷன் பிசினஸ் தொழில் முனைவோர்களுக்கு பணி வாய்ப்புகளை அளிக்கக் கூடியதாக இருக்கும். அதனால், கிடைக்கும் ஆர்டர்களுக்கு ஏற்ப பல்வேறு பகுதிகளிலிருந்து பணியாளர்களை வரவழைத்து பணியில் ஈடுபடுத்தும் திறன் அவசியமானது. அதற்கேற்ப துறைசார்ந்த பணியாளர்களின் தொடர்பு அத்தியாவசியம். குறிப்பாக, அனுபவம் பெற்ற பணியாளர்கள் மற்றும் அனுபவம் மாற்ற பணியாளர்கள் ஆகிய இரு தரப்பையும் பயன்படுத்தி சரியாக பணிகளை முடிப்பது என்பது நல்ல அனுபவம் பெற்ற தொழில்முனைவோர்கள் மட்டுமே இயலும்.
சொந்த பொருட்களும் அவசியம்
ஈவன்ட் டெக்கரேஷன் பிசினஸ் தொழில் முனைவோர்கள் எல்லா பொருட்களையும் வெளியிலிருந்து வாடகைக்கு எடுப்பது என்பது ஒத்து வராது. சில பொருட்களை சொந்த செலவில் கொள்முதல் செய்து அவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். உதாரணமாக சொல்வதென்றால் விதவிதமான அலங்கார செடிகள் கொண்ட பூந்தொட்டிகள், பன்னீர் தெளிக்கும் தானியங்கி ரோபோ, அழகான ஸ்கிரீன் வகைகள், ஏணிகள், அதிநவீன அலங்கார விளக்குகள் உள்ளிட்ட பல பொருட்களை சொந்தமாக வைத்திருப்பது தவிர்க்க இயலாத ஒன்றாகும். அப்போதுதான் பல சமயங்களில் இருப்பதை வைத்து கூட ஒரு நிகழ்ச்சியை நல்லவிதமாக நடத்த முடியும். நீண்ட அனுபவம் பெற்றிருக்கும் நிலையில் ஒரே சமயத்தில் இரண்டு மூன்று நிகழ்ச்சிகளைக் கூட ஏற்றுக்கொண்டு தகுந்த ஆட்கள் மூலம் வாடகைக்கு எடுக்கப்பட்ட பொருட்களை வைத்து நிகழ்ச்சியை நிறைவேற்றி தர முடியும்.
பொருட்களின் பாதுகாப்பு மிக முக்கியம்
நிறுவனங்களின் சொந்த பொருட்களை அதன் மெருகு குறையாமல் பாதுகாப்பாக வைத்திருப்பது தொழிலுக்கு மிகவும் அவசியமானது. ஏனென்றால் வாடிக்கையாளர்கள் அனைவருமே புதியதாக உள்ள பொருட்களையே தங்கள் நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புவார்கள். அதன் காரணமாக அலங்காரப் பொருட்கள் அனைத்துமே தக்க முறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படுவது முக்கியமானது. அதற்கு ஏற்ப தகுந்த பராமரிப்பு செலவுகளை செய்ய வேண்டியதும் அவசியமானதாகும்.
கச்சிதமான கட்டணம்
ஈவன்ட் டெக்கரேஷன் பிசினஸ் தொழில் முனைவோர் தனது சக தொழில் போட்டியாளர் ஒரு நிகழ்ச்சிக்கு என்ன கட்டணத்தை பெறுகிறார் என்பதை நிச்சயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். எவ்வளவு சிறப்பாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தாலும் கூட கட்டணம் என்று வரும்போது வாடிக்கையாளர்கள் நிச்சயம் ஒப்பீட்டு மனநிலைக்கு வந்து விடுவார்கள். அதனால் சக போட்டியாளரின் கட்டணத்திற்கு அதிக வித்தியாசம் இல்லாத தொகையையே நிர்ணயம் செய்ய வேண்டும்.
காலம் மிகவும் முக்கியம்
இந்த தொழிலில் காலம், நேரம் என்பது மிக முக்கியமானது. வாடிக்கையாளர் குறிப்பிட்ட நேரத்திற்கு பொருட்கள் மற்றும் ஆட்கள் இருப்பது மிகவும் அவசியமானது. அதே முறையில் நிகழ்ச்சி முடிந்த பிறகு உடனடியாக பொருட்களை பேக்கிங் செய்து திரும்ப எடுத்துச் செல்வதும் அவசியமானது.
விளம்பரம் அவசியம்
வெற்றிகரமாக ஒரு நிகழ்ச்சியை முடித்த ஈவன்ட் டெக்கரேஷன் பிசினஸ் தொழில் முனைவோர் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி பற்றிய வீடியோ பதிவு அல்லது போட்டோகிராபி ஆகியவற்றை தவறாமல் பதிவாக வைத்திருக்க வேண்டும். அதன் மூலம் அடுத்த வாடிக்கையாளருக்கு நிகழ்ச்சி எவ்வாறு நடந்தது என்பது பற்றி ஆதாரப்பூர்வமாக தெரிவிக்க முடியும். மேலும் சோசியல் மீடியாக்கள் மூலமாகவும் நிறுவனம் பற்றிய தகவல்களை நிச்சயம் அளிப்பதும் அவசியம்.