கட்டுமான பணிகளுக்கு உறுதுணையாக உள்ள சிமெண்ட் பிரிக் தயாரிப்பு தொழில்
எல்லாவித கட்டிடங்களும் அஸ்திவாரத்தின் மேல் அமையும் பக்கவாட்டு சுவர்களை கொண்டதாக கட்டப்பட்டு அதன் மீது டெரஸ் எனப்படும் கூரை அமைக்கப்படும். சுவர்களை கட்டமைக்க செங்கல்தான் இன்று வரை பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால், செங்கல் தயாரிப்பில் இயற்கையின் மண்வளம் சுரண்டப்படுவதை தடுக்கும் முயற்சியில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் காரணமாக, களிமண்ணை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் செங்கல் வகைகளை கட்டுமான பணியில் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. செங்கல் தயாரிப்பு என்பது சூழலியல் பாதுகாப்புக்கு ஏற்றதல்ல என்ற நிலையில், பெரும்பாலான பில்டிங் என்ஜினியர்கள் மற்றும் பில்டர்கள் செங்கல்லுக்கு மாற்றாக கான்கிரீட் கல் என்று சொல்லப்படும் சிமெண்ட் பிரிக்ஸ் வகைகளை தங்களுடைய பிராஜெக்ட்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அதனால் சிமெண்ட் பிரிக் மேனுஃபாக்சரிங் பிசினஸ் செய்வதற்கான சந்தை வாய்ப்புகள் தேசிய அளவில் பிரகாசமாக இருக்கின்றன.
செங்கலுக்கு மாற்றாக கட்டுமான தொழில்நுட்ப உலகம் கண்டறிந்த கான்கிரீட் பிளாக்குகள் மற்றும் ‘ஹாலோ பிளாக்’ கற்கள் ஆகியவை இன்றைய நிலையில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கான்கிரீட் பிளாக் என்பது குறிப்பிட்ட கட்டுமான பணி நடக்கும் இடத்திலேயே கான்கிரீட் பயன்படுத்தி தேவையான அளவுகளில் பிரிக் வகைகளை தயாரிக்கும் முறையாகும். இந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்த நிலையாக பிளை ஆஷ் பிரிக்ஸ் வகைகள் கட்டுமான உலகில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்தவகை கான்கிரீட் பிளாக் தயாரிப்பு என்பது ஃபிளை ஆஷ் சிமெண்ட், மணல் ஜிப்சம் மற்றும் சுண்ணாம்பு ஆகியவை குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் கலந்து தேவைப்பட்ட அளவுகளில் கட்டுமான கற்களாக தயார் செய்யப்படுகின்றன.
இந்தக் கல்லில் உள்ள பிரதானமான பொருள் ஃப்ளை ஆஷ் என்று சொல்லப்படக்கூடிய நிலக்கரி சாம்பல் ஆகும். அனல் மின் நிலையங்களிலிருந்து நிலக்கரி கழிவுகளாக வெளியேற்றப்படும் கூடிய இந்த ஃப்ளை ஆஷ் பயன்படுத்தி கட்டிடங்கள் அமைப்பதற்கு தேவையான பிளாக்குகள் தயாரிக்கும் தொழில்நுட்பத்திற்கு அரசாங்கம் பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. எல்லாக் காலத்திலும் கட்டிடங்கள் கட்டும் தொழிலுக்கு அவசியம் இருந்தே தீரும் என்பதால் கட்டுமான பணிகளில் அடிப்படையாக உள்ள இவ்வகை கான்கிரீட் பிளாக்குகளுக்கு எப்போதுமே வரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய தொழில்நுட்பம் மூலம் நவீன முறையில் தயாரிக்கப்படுவது, கட்டுமான பணிகளுக்கு எளிதாக பயன்படுத்தும் விதத்தில் இருப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏற்றதாக இருப்பது ஆகிய காரணங்களால் கட்டுமானத்துறையினரின் கவனத்தை தற்போது ‘பிளை ஆஷ் பிரிக்ஸ்’ வகைகள் அதிகமாக கவர்ந்து வருகின்றன. குறிப்பாக, இந்த பிரிக் வகைகளை பயன்படுத்தி அமைக்கப்பட்ட சுவர்களுக்கு தேவை அல்லது பயன்பாட்டை பொறுத்து பிளாஸ்டரிங் என்ற மேற்பூச்சு பணிகளை செய்து கொள்ளலாம். அல்லது மேற்பூச்சு பணிகளை தவிர்த்தும் விடலாம். இந்த சிக்கன நடவடிக்கை காரணமாக கட்டுமான பொறியாளர்கள் மற்றும் கட்டுனர்களின் கவனத்தை ஃப்ளை ஆஷ் கற்கள் கவர்ந்துள்ளன. அதனால், சிமெண்ட் பிரிக் மேனுஃபாக்சரிங் பிசினஸ் செய்வோர்கள் ‘சிமெண்டு செங்கல்’, ‘பிளை ஆஷ் செங்கல்’ என்று சொல்லப்படும் ‘பிளை ஆஷ் பிரிக்ஸ்’ தயாரிப்பை வெற்றிகரமாக செய்யலாம்.
ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ்’ அல்லது ‘பிளாக்குகள்’ தயாரிப்பில் முக்கிய மூலப்பொருள் அனல் மின் நிலையத்திலிருந்து பெறப்படும் நிலக்கரி சாம்பல் ஆகும். அதனுடன், சுண்ணாம்பு மற்றும் ஜிப்சம் ஆகியவை கலந்து இவை தயாரிக்கப்படுகின்றன. செங்கலைவிட வலிமை, நீடித்த உழைப்பு மற்றும் எளிதில் உடையாத தன்மை ஆகிய அம்சங்களை கொண்டு கட்டுமான பணிகளில் முக்கியமான இடத்தை பிளை ஆஷ் பிரிக்ஸ் பெற்றுள்ளது.
இவ்வகை கான்கிரீட் பிளாக்ஸ் தயாரிப்பது மிகவும் எளிமையான செயல்முறையாகும். நிலக்கரி சாம்பல் 70 சதவிகிதம், மணல் 15 சதவிகிதம், சுண்ணாம்புக்கல் 10 சதவிகிதம் மற்றும் ஜிப்சம் 5 சதவிகிதம் ஆகிய அளவுகளில் மூலப்பொருட்களைச் சரியான விகிதத்தில் கலந்து தயாரிக்கவேண்டும். மூலப்பொருட்களின் தரத்தினைப் பொறுத்து அவற்றின் கலவை விகிதம் மாறுபடலாம். 8-10 சதவிகிதம் என்கிற விகிதத்தில் தண்ணீர் சேர்த்து இந்தக் கலவையை ஹைட்ராலிக் இயந்திரத்தில் இட்டு அதை இயக்கவேண்டும். அதன் பின்னர் திட்டமிட்ட அளவுகளில் ஃப்ளை ஆஷ் செங்கற்கள் தயார் ஆகி விடும். அவற்றை 48 மணிநேரம் வெயிலில் உலர வைத்த பின்னர், அவற்றின் மீது தண்ணீர் ஊற்ற வேண்டும். அதன் காரணமாக அந்த பிளாக்குகள் கூடுதல் அடர்த்தி கொண்டவையாக மாறும். அதன் பின்னர் ஈரப்பதம் உலர்ந்த பின்னர் அவற்றை விற்பனைக்கு அனுப்பலாம்.
சிமெண்ட் பிரிக் மேனுஃபேக்சரிங் பிசினஸ் தொழில் முனைவோர்கள் ஃபிளை ஆஷ் பிரிக்ஸ் தயாரிப்புக்கான மூலப்பொருளான நிலக்கரிச் சாம்பலை பெறுவதில் முன்னர் சிக்கல் இருந்தது. ஆனால், தற்போது அனல் மின் நிலைய உலையில் இருந்து கிடைக்கும் மொத்த சாம்பல் அளவில் 20 சதவிகிதத்தை ‘பிளை ஆஷ் பிரிக்ஸ்’ தயாரிப்பாளர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு உள்ளது. அதனால், மூலப்பொருள் கிடைப்பதில் சிக்கல் இருக்காது என்பதை அதன் தயாரிப்பாளர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளனர். நாட்டின் மொத்த மின்சார தேவையில் கிட்டத்தட்ட 70 சதவிகித அளவுக்கு அனல் மின் நிலையங்களே பூர்த்தி செய்து வருகின்றன. அதன் அடிப்படையில் அனல்மின் நிலையங்களிலிருந்து ஆண்டுக்கு 90 மில்லியன் டன் சாம்பல் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் நெய்வேலி, மேட்டூர், தூத்துக்குடி, எண்ணூர் மற்றும் வடசென்னை அனல் மின் நிலையங்களிலிருந்து நிலக்கரிச் சாம்பல் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சிமெண்ட் பிரிக் மேனுஃபாக்சரிங் பிசினஸ் தொடங்குபவர்கள், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (என்.இ.இ.டி.எஸ் ஸ்கீம்) 25 சதவிகிதமும், பாரதப் பிரதமரின் சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் (பி.எம்.இ.ஜி.பி ஸ்கீம்) 25-35 சதவிகிதமும் அரசு மானியத்தை பெறலாம். இது தொழில் தொடங்க மிகவும் உதவியாக இருக்கும். சொந்த இடமாக இருந்தால் உற்பத்திச் செலவு குறையும். கட்டிடம் மற்றும் சிவில் வேலைகளுக்கு ரூ.4 அல்லது 5 லட்சம் வரை செலவாகலாம். அத்துடன் பிளான்ட் மற்றும் எந்திரம் அமைக்கும் பணிகளில் ரூ.16 முதல் 18 லட்சம் ஆகக்கூடும். மேலும், தொழில் முனைவோரது செயல்பாட்டு மூலதனமாக ரூ.5 லட்சம் ரூபாய் என மொத்தமாக ரூ.25 லட்சம் முதல் 30 லட்சம் வரை மொத்த செலவுகள் ஆகலாம்.
சிமெண்ட் பிரிக் மேனுஃபாக்சரிங் பிசினஸ் செய்வதற்கான எந்திர வகைகளில், பிளாக் மற்றும் பேவர்கள் தயாரிக்கும் எந்திரங்கள், ஆட்டோமேட்டிக் ஃப்ளை ஆஷ் பிரிக் தயாரிக்கும் எந்திரம், தானியங்கி கான்கிரீட் மல்ட்டி பிரிக் எந்திரம் மற்றும் பேவர் பிளாக், மொசைக் டைல், ஆட்டோமேட்டிக் இன்டர் லாக் பேவர் தயாரிக்கும் எந்திரம் ஆகியவை முக்கியமானவை. இவ்வகை எந்திரங்களில் சிலவற்றை கட்டுனர்கள் அவர்களது தயாரிப்பு இடங்களிலேயே அமைத்து தேவையான பிரிக் வகைகளை தயார் செய்தும் கொள்ள இயலும். ஆனால், அந்த முறைக்கு பட்ஜெட் அதிகமாக ஆகும் என்பதுடன், நிறைய இடமும் தேவையாக இருக்கும் என்பதால் எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த முறை பயன் தரும் என்று சொல்ல இயலாது. பெரிய அளவிலான பட்ஜெட் மதிப்புள்ள ஹை ரைஸ் பில்டிங் மற்றும் மல்ட்டி ஸ்டோரி பில்டிங் கட்டுமான பணிகளில் காண்ட்ராக்ட் பேசிஸ் அடிப்படையில் வெவ்வேறு அளவுகள் கொண்ட கான்கிரீட் பிளாக் தயாரிக்கும் எந்திரங்களை பணியிடங்களில் அமைத்து தயார் செய்து கொள்கிறார்கள். அதுபோன்ற எந்திரங்களை வாடகைக்கு விடக்கூடிய ஏஜென்சி தொழிலும் கட்டுமான தொழில் முனைவோருக்கான வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறது.
ஹாலோ பிளாக் கற்கள் உற்பத்தி முறை
குறைந்த செலவு, கட்டுமான பணிகளை எளிதாக செய்ய முடியும், மற்றும் தேவையில்லை என்றால் சுவற்றை இடித்து மீண்டும் கற்களை முழுமையாக மறு உபயோகம் செய்யலாம் என்ற அடிப்படையில் சிமெண்ட் பிரிக் மேனுஃபாக்சரிங் பிசினஸ் முறையில் ஹாலோ பிளாக் தயாரிக்கும் தொழிலுக்கு கிராக்கி அதிகரித்துள்ளதுடன், அதன் தேவையை பல மடங்கு உயர்த்தியுள்ளது. அதன் உற்பத்தி முறை, அதற்கு ஆகும் செலவு, அதற்கான இடவசதி போன்றவற்றை கீழே காணலாம்.
கட்டமைப்பு வசதி என்ற நிலையில் இட அமைப்பு குறைந்தபட்சம் 12 சென்ட்கள், போர்வெல் தண்ணீர் வசதியோடு இருக்க வேண்டும். திறந்தவெளியாக இருப்பது நல்லது. பிளாக் உற்பத்திக்கு இரண்டு முக்கிய இயந்திரங்கள் தேவை, ஒன்று கான்கிரீட் மிக்ஸர் மற்றும் ஹைட்ராலிக் பிரஷ்ர் மெஷின் ஆகியவையாகும்.இந்த மெஷினில் இரண்டு வகைகள் உண்டு. முதலாவது ஸ்டேஷனரி டைப் பிளாக் மேக்கிங் மிஷின். இது ஒரே இடத்தில் வைக்கப்பட்டு பிளாக்குகளை தயாரிக்கும் வகையில் அமைந்தது. இன்னொரு வகை எக் லேயிங் டைப் பிளாக் மேக்கிங் மெஷின். இந்த எந்திரம் தேவைப்படும் இடங்களில் அமைத்து வேண்டிய அளவுகளில் பிளாக்குகளை தயார் செய்து கொள்ளலாம்.
ஹாலோ பிளாக் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள்
கால் இஞ்ச் அளவுள்ள ஜல்லி, பவுடர் போல் இல்லாமல் குருணை போல் இருக்கும் கிரஷர் மண், ஓ.பி.சி ரக சிமெண்ட் ஆகியவை. ஓ.பி.சி சிமெண்டை பயன்படுத்தினால் உற்பத்தி செய்த 4 மணி நேரத்தில் உலர்ந்து பிளாக்குகள் விற்பனைக்கு தயாராகி விடும். கான்கிரீட் மிக்ஸர் மிஷினை இயக்கி அதில் சிமென்ட் 1 பங்கு ஜல்லி 2 பங்கு, கிரஷர் மண் 2 பங்கு என்ற விகிதத்தில் கொட்டி, தேவையான தண்ணீரை அதில் ஊற்ற வேண்டும். அதே விகிதத்தில் மீண்டும் மூன்று நான்கு முறை இவ்வாறு வரிசையாக கொட்டி கலக்கிய பின்னட், கலவையை வெளியே எடுத்து அது காய்வதற்கு முன் உடனடியாக ஹைட்ராலிக் பிரஸ்ஸிங் எந்திரத்தில் கொடுத்து, நன்றாக பலமுறை அழுத்தி, பின்பு விடுவித்தால் கற்கள் தயார் செய்யப்பட்டு விடும்.
இதே மிஷினில் மேலுள்ள அச்சை மாற்றுவதன் மூலம், சாலிட் பிளாக் கற்களையும் உருவாக்கலாம், இவை ஹாலோ பிளாக் கற்கள் போலல்லாமல் நடுவே துவாரமின்றி வெளி வரும், உறுதியான கட்டிடங்களுக்கு இவ்வகை கற்கள் உபயோகப்படுத்தப்படுகிறது. இவ்வகை மிஷின்களில் 4 இன்ச், 6 இன்ச் மற்றும் 8 இன்ச் அளவுள்ள கற்கள் உற்பத்தியாகிறது. கற்கள் சுமார் மூன்று மணி நேரத்திற்குள் காய்ந்து விட்டாலும், 24 மணி நேரத்திற்கு அதே இடத்தில் காய வைத்து, பின்பு வேறு இடம் மாற்றி, ஒரு வாரத்திற்கு தினமும் மூன்று வேளை முழுமையாக நனையுமாறு தண்ணீர் விட்டு வர வேண்டும். பின்பு மறுபடியும் ஒரு மூன்று நாட்களுக்கு காய வைத்தால் கற்கள் விற்பனைக்கு தயாராகி விடும். இவ்வாறு சரியான முறையில் பதப்படுத்தினால கற்கள் சிறந்த தரத்தில் கிடைக்கும்.
சிறு தொழில் வளர்ச்சி மையங்கள்
இதே முறைப்படி வலைத்தளங்களில் பாதிக்கப்படக்கூடிய பேவர் பிளாக் வகை கற்களையும் சிறப்பாக தயார் செய்வதற்கு தகுந்த எந்திரங்கள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன. அவற்றையும் பயன்படுத்தி தொழில் முனைவோர்கள் தங்களுடைய வர்த்தக வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ளலாம். சிமெண்ட் பிரிக் மேனுஃபாக்சரிங் பிசினஸ் தொழில் முனைவோர்கள் கான்கிரீட் சாலிட் பிளாக் கற்கள் ஹாலோ பிளாக் கற்கள் மற்றும் பேவர் பிளாக் கற்கள் ஆகியவற்றை தயாரிக்க விரும்பினால் அரசாங்கத்தின் சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலமாக தொழில் தொடங்குவதற்கு ஆலோசனை மற்றும் கடன் உதவிகளை பெற்று தொழிலை வெற்றிகரமாக செய்து வரலாம்.