கூட்டு நிறுவன வணிகம் என்றால் என்ன? கூட்டு நிறுவன வணிகத்தை எவ்வாறு தொடங்குவது?
இந்தியாவில் தனி உரிமையாளர் வணிகமும் கூட்டு நிறுவன வணிகமும் பெரும்பாலான தொழில்களில் முதல் கட்ட முயற்சியாக இருக்கிறது. இவ்வாறு இந்த இரண்டு வகையான வணிகங்கள் மிகவும் பிரபலமான வகையில் இருப்பதற்கான காரணம் என்னவென்றால் இதன்மூலம் தொழில் செய்யும் நிறுவனங்களை பதிவு செய்வதற்கான செய்முறை மிகவும் எளிதாக இருப்பதாகவும் சில நேரங்களில் நீங்கள் எந்தவித பதிவும் செய்யாமலும் ஆரம்பிக்க முடியும் என்பதும் ஆகும். ஒரு எல்எல்பி நிறுவனத்தையோ அல்லது பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை தொடங்க வேண்டுமென்றால் பல்வேறு கட்ட சான்றிதழ்களையும் அரசாங்க அனுமதிகளையும் பெற வேண்டும் என்பதால் ஒரு குறிப்பிட்ட காலம் இதற்கே செலவாகி விடும். எனவே தொழில் வளர்ச்சிக்கான எண்ண ஓட்டங்களை உடனடியாக செயல்படுத்த விரும்பும் நபர்கள் இத்தகைய தனி உரிமையாளர் மற்றும் கூட்டு நிறுவன வணிகத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த கட்டுரையில் கூட்டு நிறுவன வணிகத்தை தேர்ந்தெடுத்து தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கூட்டு நிறுவன வணிகங்கள் என்றால் என்ன?
இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட நபர்கள் இணைந்து ஒரு தொழிலாக ஒரு நிறுவனத்தை நடத்தி அதன் மூலமாக வரும் லாப நஷ்டங்களை பகிர்ந்து கொள்ளும் முறையே இந்த கூட்டு வணிக திட்டம் ஆகும். உங்களது சொத்தை வாடகைக்கு விட்டு, வாடகை பணத்தை அண்ணன் மற்றும் நீங்கள் இருவரும் சரி பாதியாகப் பிரித்துக் கொள்ளும் போன்றவைகளெல்லாம் இந்த திட்டத்தின் கீழ் வராது. அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தொழிலை நடத்தி அதன் மூலம் வரும் நஷ்டங்களை மட்டும் லாபங்களை எந்த விகிதத்தில் பிரித்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவு செய்யப்பட்டு உருவாக்கக்கூடிய நிறுவனங்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் வரும். இந்தியாவில் ஒன்றுக்கு மேற்பட்ட அதாவது குறைந்தது இரண்டு நபர்களால் இணைந்து செய்யப்படும் தொழில்களுக்கான இந்திய கூட்டு வணிக திட்டம் பற்றிய வரைமுறைகள் முதன் முதலாக 1932 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
1932 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சட்டப் பிரிவின்படி அதிகபட்ச பங்குதாரர்க்கான எண்ணிக்கை என்பது குறிப்பிட படாவிட்டாலும் சமீபத்தில் 2014 ஆம் ஆண்டு உருவான தொழில் நிறுவனத்தின் இதர சட்டதிட்டங்கள் பிரிவின் அடிப்படையில் அதிகபட்சமாக 50 நபர்கள் கூட்டாக இணைந்து இந்த கூட்டு நிறுவன வணிகத்தை தொடங்கலாம். ஏதேனும் ஒரு நபருக்கு தொழில் தொடங்குவதற்கான முழு திட்டங்களும் உழைப்பும் இருக்கும் ஆனால் அவரிடம் அந்த தொழில் தொடங்குவதற்கான எந்தவித முதலீடும் இருக்காது. இன்றைய காலகட்டங்களில் வங்கிகளில் கடன் வசதி பெறும் வாய்ப்புகள் இருந்தாலும் புதிதாக தொழில் தொடங்க விரும்பும் பல்வேறுபட்ட தொழிலுக்கு அவ்வளவு எளிதாக தங்களது தொழிற்கடன் கிடைப்பதில்லை. அத்தகைய நபர்கள் தங்களது நண்பர்களிடமிருந்து உறவினர்களிடமிருந்து குறிப்பிட்ட தொகையை பெற்று அவர்களை அந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஆக இணைக்கும் முறை பார்ட்னர்ஷிப் வணிகம் என்றழைக்கப்படுகிறது.
அதாவது இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட நபர்கள் ஒரு தொழில் நோக்கத்துடன் ஒன்றாக இணைந்து தொழிலைத் தொடங்கும்நிறுவனங்களுக்கு பார்ட்னர்ஷிப் நிறுவனங்கள் என்று பெயர். நிறுவனத்தில் பங்குதாரராக உங்களது நண்பரை அல்லது உறவினரை மட்டுமே சேர்க்க வேண்டும் என்பது எந்தவித கட்டாயமும் இல்லை. நீங்கள் யாரை வேண்டுமானாலும் உங்களது தொழில் நிறுவனத்தின் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
ஒரு நிறுவனத்தில் ஒருவர் பங்குதாரராக இருக்க வேண்டுமென்றால் முதலீடு செலுத்தி மட்டுமே கூட்டாளர் ஆக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இத்தகைய வணிகத்தில் செயலில் / நிர்வாக பங்குதாரர் தூங்கும் கூட்டாளர், பெயரளவு கூட்டாளர், சிறு கூட்டாளர், ரகசிய கூட்டாளர், வரையறுக்கப்பட்ட கூட்டாளர் என பல்வேறு விதமான வரையறைகளை நம் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் வகுத்துக்கொள்ள முடியும்.
கூட்டாளர்களுக்கிடையில் ஒப்பந்தம் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும்?
கூட்டுத் தொழில் நிறுவனங்களை நடத்துகிறது இடையே நடக்க வேண்டிய மிக முக்கிய செயல் என்னவென்றால் கூட்டாளர் பத்திரம் அதாவது கூட்டாளர்களுக்கிடையேயான ஒரு உடன்படிக்கை ஒப்பந்தத்தை தயார் செய்து கொள்வதாகும். உடன்படிக்கை ஒப்பந்தத்தில் கூட்டு நிறுவனத்தில் உள்ள ஒவ்வொருவரின் உரிமைகள், கடமைகள், லாப மற்றும் நஷ்ட பங்குகள் மற்றும் பிற கடமைகள் குறிப்பிடப்படுகின்றன. பிற்காலத்தில் ஏற்படும் மனக் கஷ்டங்கள் மற்றும் பண இழப்பை தவிர்ப்பதற்காக வாய்மொழியாக அல்லாமல் எழுத்துப் பூர்வமாக உடன்படிக்கை ஒப்பந்தத்தை தயார் செய்து கொள்வது நல்லது.
கூட்டு நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்
-
கூட்டாளரைத் தேர்ந்தெடுப்பதில் அவசரப்பட வேண்டாம்.
பல்வேறு தொழில்முனைவோர்கள் செய்கின்ற மிகப் பெரிய தவறு என்னவென்றால் தங்களது அவசர பணத் தேவைக்காக தவறான நபர்களை தங்களது தொழிலில் கூட்டாளிகளாக இணைத்து கொள்வதாகும். உங்கள் வணிகத்திற்கு சரியான கூட்டாளர்களின் தேர்ந்து எடுப்பதில் மிகுந்த சிரத்தை எடுத்து ஒத்த மனநிலை கொண்டவராகவும், காழ்ப்புணர்ச்சி இல்லாதவராகவும், தொழில் பற்றிய விவரம் அறிந்தவராகவும், உங்களைப் பற்றி மிகுந்த நம்பிக்கை கொண்டவராகவும், சரியான குறிக்கோள்களை கொண்டவராகவும் இருத்தல் அவசியம்.
2. எழுத்துப்பூர்வமான உடன்படிக்கை கண்டிப்பாக தேவை
பெரும்பாலாக இன்றைய காலகட்டத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இடையே எந்தவிதமான தொழில் உடன்படிக்கையும் இல்லாமல் வாய்மொழி வழியாக பேசிக்கொண்டு தொழிலை ஆரம்பிக்கின்றனர். இத்தகைய செயல்முறைகள் காரணமாகத்தான் பிற்காலங்களில் தொழிலில் உள்ள பிரச்சினைகள் காரணமாக நண்பர் உறவினர் என்ற உறவு முறையையும் இழக்க நேரிடும்.
-
எல்.எல்.பி பற்றியும் தெரிந்து கொள்க
கூட்டு தொழில் வணிகத் திட்டம் சிறந்ததா எல்எல்பி வணிகம் சிறந்ததா என்பதை நன்கு ஆலோசித்து முடிவெடுங்கள். எல்எல்பி நிறுவனங்கள் தொடங்குவதற்கு பல்வேறுவகையான சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட வேண்டி இருப்பதால் பல்வேறு விதமான நன்மைகளும் உங்களுக்கு அதில் இருக்கின்றன. குறிப்பாக உங்களது கூட்டாளிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தில் எந்தவித பொறுப்பும் உங்களுக்கு இருக்கும் வகையில் அமையாது. நிறுவனத்தின் பெயரில் தனி சொத்துக்கள் மற்றும் பல்வேறு விதமான வரி சலுகைகள் கிடைக்கப்பெறும் என்பதால் நன்கு சிந்தித்து முடிவெடுங்கள்.
-
உங்களது முதலீட்டைப் பற்றி சிந்தித்து செயல்படுங்கள்
ஒரு கூட்டு நிறுவன வணிகத்தில் நீங்கள் கூட்டாளியாக சேர வேண்டும் என்றால் உங்களது பணத்தை மட்டுமே முதலீடாக செலுத்த வேண்டும் என்பது இல்லாமல் உங்களுக்கு தெரிந்த தகவல்கள் உங்களது உழைப்பு மூலமும் சேரமுடியும். உங்கள் தகவல்களை மற்றவர்களிடம் தெரிவிக்கும் பொழுது அதை அவர்கள் பயன்படுத்தி வேறு தொழில் செய்வதற்கான வாய்ப்பு உள்ளதால் கவனமாக சிந்தித்து முடிவெடுங்கள். பணத்தை வைத்துக் கொண்டு முதலீடு செய்ய இருப்பீர்களானால் லாபத்தில் எவ்வளவு விகிதாச்சாரத்தில் உங்களுக்கு கிடைக்கப்பெறும் என்பதை தெரிந்து கொள்க.
-
கூட்டாளர்கள் வெளியேறும்போது எடுக்கவேண்டிய செயல் வடிவம்
உங்களது கூட்டு நிறுவனத்தில் இருந்து நீங்கள் வெளியேற விரும்பினாலோ அல்லது உங்கள் கூட்டாளர்களின் யாரேனும் ஒருவர் வெளியேற விரும்பினாலோ அல்லது கூட்டாளிகளுக்கு மரண சம்பவம் ஏதேனும் நிகழ்ந்தால் எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை தெளிவாக வரையறுக்க வேண்டும். தொழில் நிறுவனம் ஆரம்பித்த சில காலத்திற்குப் பிறகு புதிதாக ஏதேனும் ஒரு கூட்டாளர்கள் சேர்க்க வேண்டும் என்றால் எந்த மாதிரியான லாப விகிதம் அவருக்கு வழங்கப்பட வேண்டும் போன்ற தகவல்களையும் சிந்தித்து செயல்படவேண்டும்.
கூட்டாளர்கள் இடையேயான உடன்படிக்கை ஒப்பந்த பத்திரத்தில் இருக்க வேண்டிய அம்சங்கள்
- உங்களது தொழில் நிறுவனத்தின் பெயர், எந்த மாதிரியான வணிக பிரிவை சார்ந்த தொழில் மற்றும் உங்களது தொழில் குறிக்கோள்
- உங்களது தொழில் நிறுவனம் அமைக்கப்பட்ட தேதி, நிறுவனத்தின் முகவரி மற்றும் கிளைகள்
- குறிப்பிட்ட காலத்திற்கான ஒப்பந்த வணிகமாக இருந்தால் அதன் கால அளவு பற்றிய விவரங்கள்
- உங்கள் கூட்டு நிறுவனத்தில் உள்ள அனைத்து கூட்டாளர்களின் பெயர் மற்றும் நிரந்தர முகவரி பற்றிய தகவல்கள்
- ஒவ்வொரு கூட்டாளிகளும் எவ்வளவு முதலீடு செய்துள்ளார்கள் மற்றும் எந்த மாதிரியான முதலீடு செய்துள்ளார்கள் என்பது பற்றியான தகவல்கள்
- ஒவ்வொரு கூட்டாளர்களுக்கும் எவ்வளவு லாப விகிதம் வழங்கப்படவிருக்கிறது என்பதைப்பற்றிய விவரங்கள்
- சொந்தத் தேவைக்காக எவ்வளவு பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்பதற்கான வரையறை
- சொந்த செலவுக்காக எடுக்கும் பணத்திற்கான வட்டி விகிதாச்சாரம்
- கூட்டாளர்கள் உழைப்பிற்கு ஏற்றவாறு சம்பளம் மற்றும் கமிஷன் வழங்கப்படும் ஏய் ஆனால் அதன் பற்றிய தகவல்கள்
- கணக்கு வழக்குகளை யார் சரிபார்ப்பது எத்தனை மாதத்திற்கு ஒருமுறை அவர்களுக்கு இடையே பகிர்ந்து கொள்வது போன்ற தகவல்கள்
- புதிதாக ஏதேனும் ஒரு கூட்டாளர் சேர்க்க வேண்டும் என்றால் எந்த அடிப்படையில் சேர்க்க வேண்டும்
- கூட்டு நிறுவனத்தில் இருந்து யாரேனும் வெளியேற விரும்பினால் எவ்வளவு காலத்திற்கு முன்பு தகவலை தெரிவிக்க வேண்டும் அவர்களுக்கு எவ்வித செட்டில்மெண்ட் செய்யப்படவேண்டும் போன்ற தகவல்கள்
- நிறுவனங்களின் சொத்துக்கள் மீதான பிற்கால மதிப்பிற்கு ஏற்றவாறு எந்த மாதிரியான பங்குகள் ஒவ்வொருக்கும் கிடைக்க வேண்டும்
- கூட்டாளர்கள் யாரேனும் ஒருவருக்கு மரணம் ஏற்பட்டால் அவர்களுடைய பங்குகளை யாருக்கு கொடுக்க வேண்டும் என்பது பற்றிய தகவல்கள்
- கூட்டு நிறுவனத்தை முழுவதுமாக கலைக்க வேண்டும் என்றால் எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் போன்ற அனைத்து தகவல்களும் இதில் இடம் பெறுவது முக்கியமாகும்
கூட்டாண்மை நிறுவனத்தை பதிவு செய்யலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யுங்கள்
இந்திய அரசின் சட்டத்தின்படி கூட்டு நிறுவனங்களாக தொடங்கப்படும் தொழில்களை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்ற வரையறை இல்லாததால் உங்களது நிறுவனத்தை அரசாங்கத்திடம் பதிவு செய்ய வேண்டுமா வேண்டாமா என்பதை பற்றி முடிவெடுக்கும் முழு உரிமை உங்களிடம் இருக்கிறது. நீங்கள் ஆரம்ப காலகட்டத்தில் பதிவு செய்யாமல் தொழில் தொடங்கினாலும் உங்களுக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கம் தோன்றும்போது பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. பிற்காலத்தில் உங்களது ஒப்பந்த உடன்படிக்கை ஏதேனும் சங்கடங்கள் ஏற்பட்டு அதன்படி வழக்குகள் தொடர வேண்டும் என்றால் உங்களது நிறுவனத்தை பதிவு செய்து நடத்தி வருவது நல்லதாகும். அதுமட்டுமல்லாது பதிவு செய்யப்பட்ட கூட்டு நிறுவனங்களுக்கு பல்வேறு விதமான வங்கி கடன் தொகையிம் வரி சலுகைகளும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
பதிவு செய்வதற்கான வழிமுறைகள்
உங்களது கூட்டு நிறுவனத்தின் உடன்படிக்கை ஒப்பந்தத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் தகுந்த கட்டணத்தை செலுத்தி சமர்ப்பிக்க வேண்டும்.
- கூட்டாண்மை பதிவு செய்வதற்கான விண்ணப்பம் (படிவம் 1)
- உங்கள் நிறுவனத்தின் பிரமாண பத்திரத்தின் நகல்கள்
- கூட்டாளர் பத்திரத்தின் சான்றளிக்கப்பட்ட அசல் நகல்
- உங்கள் நிறுவனம் அமைந்துள்ள இடத்திற்கான வாடகை ஒப்பந்தம்
பதிவாளர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் நிறுவனங்களின் பதிவேட்டில் அனைத்து விதமான பதிவு செய்யப்பட்ட கூட்டு நிறுவனங்களின் முழுமையான தகவல்களும் சரிபார்க்கப்பட்ட பிறகு சேர்க்கப்படும். இதன் பிறகு உங்களது கூட்டு வணிக நிறுவனத்திற்கு என தனி வங்கி கணக்கு தொடங்கி பான் கார்டு பெற்று கூட்டாண்மை நிறுவனத்தின் பெயரில் உள்ள வங்கி கணக்கு மூலமாகவே அனைத்துவிதமான பண பரிமாற்றங்களும் நடைபெறவேண்டும்.