கார் ரிப்பேர் ஷாப் தொடங்குவதற்கான வழிகாட்டு நெறிகள்
குடியிருப்பது வாடகை வீடாக இருந்தாலும், சின்னதாக ஒரு கார் இருக்கவேண்டும் என்பது நகர வாழ்க்கையின் அத்தியாவசியமாகவும், ஒரு அடையாளமாகவும் மாறி வருகிறது. அதுமட்டுமல்லாமல், குடும்பமாக அனைவரும் ஒன்றாக சேர்ந்து வெளியே செல்வதற்காக கார்தான் வசதி என்பதால் தவிர்க்க இயலாத ஒரு குடும்ப அங்கத்தினராகவும் கார் மாறி விட்டது. அதனால் வெளியூர்களுக்கு மட்டுமல்லாமல், குடும்பத்துடன் ஒரு நாள் விரும்பிய இடத்திற்கு அவுட்டிங் செல்வதும் சுலபமான விஷயமாக மாறி இருக்கிறது. வெயிலில் அலையாமல், பஸ் நெருக்கடியில் அவதிப்படாமல் சௌகரியமாக நம்முடைய பயணத்தை மாற்றிக்கொள்ள முடியும் என்ற மனநிலையை கார் அளிக்கிறது. ஆனால், கார் வைத்திருக்கும் அனைவரும் சலனப்படும் ஒரு விஷயம் அதற்கான பராமரிப்பு செலவுகள் ஆகும். குறிப்பாக மகிழ்ச்சியான ஒரு பயணத்தின் மத்தியில் கார் ரிப்பேராகி நின்றுவிடுவது கடும் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். நடைமுறை வாழ்வில் கார்களின் பயன்பாடு என்பது ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தனி நபர்களின் வாகனப் பயன்பாடும் கூடுதலாகி வருகிரது. அதனால், கார் ரிப்பேரிங் என்பது ஒரு காரின் அனைத்து பாகங்களையும் கவனித்து, பாதிப்பு ஏற்பட்ட பாகத்தை சரி செய்வது அல்லது மாற்றம் செய்து தரும் அவசியமான பணியாகும். இந்த நிலையில்தான் கார் ரிப்பேர் ஷாப் என்பது ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது.
தற்போதைய தொழில்நுட்ப புரட்சிக்கான காலகட்டத்தில் ஹாட்ச்பேக், மைக்ரோ செடான், காம்பேக்ட் செடான், சி.யு.வி, எஸ்.யு.வி, எம்.பி.வி, கன்வெர்ட்டிபிள், ஹைபிரிட், எலக்ட்ரிக் கார் மற்றும் மினி வேன் ஆகிய வடிவமைப்புக்கு ஏற்ற வகைகள் மற்றும் அதன் உட்பிரிவுகள் ஆகியவற்றில் ஏராளமான கார்கள் சந்தையில் உள்ளன. எனவே, கார் ரிப்பேர் என்பது எல்லா காலங்களிலும் தொழில் வாய்ப்புகளை உள்ளடக்கிய தொழில் பிரிவாக செயல்பட்டு வருகிறது. அனுபவமும், திறமையும் பெற்ற ஒரு கார் மெக்கானிக் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் பெற்றவராக கருதப்படுகிறார். தொழில் ரீதியாக ஒரு கார் ரிப்பேர் ஷாப் தொடங்குவதற்கு என்னென்ன அடிப்படையான விஷயங்கள் இருக்கின்றன என்பதையும், நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப அவற்றை அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு எடுத்துச்செல்வது என்பதற்கான விஷயங்களையும் இங்கே பார்க்கலாம்.
அடிப்படையான விஷயங்கள்
ஒரு கார் மெக்கானிக் என்பவர் ஆட்டோமொபைல் பொறியியல் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவராக இருப்பது வாடிக்கையாளர்களால் பெரிதும் வரவேற்கப்படும் தகுதியாக குறிப்பிடப்படுகிறது. இருந்தாலும் கூட தன்னுடைய அனுபவத்தின் மூலம் சிறப்பாக கார் பழுதுகளை சரி செய்யக்கூடிய ஒரு மெக்கானிக் கிட்டத்தட்ட அதே அளவுக்கு முக்கியத்துவம் பெற்றவராக இருக்கிறார். கல்வி மற்றும் அனுபவம் ஆகிய இரு நிலைகளிலும் தகுதி பெற்றவர்கள் கார் ரிப்பேர் ஷாப் தொடங்குவதற்கு அடிப்படையான தகுதி பெற்றவர்களாக இருக்கிறார்கள்.
பொதுவாக ரிப்பேர் செய்யும் மெக்கானிக்கின் பெயரிலேயே கார் பழுதுபார்ப்பு மையங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆனால் வர்த்தகரீதியாக செயல்பட வேண்டும் என்ற நிலையில் கார் ரிப்பேர் ஷாப் ஒரு நல்ல பெயரில் இயங்கி வருவது அவசியம். அதற்கு ஏற்ப நிறுவன பதிவு, தொழிலாளர் நலத்துறை அனுமதி, ஆர்டிஓ அலுவலகம் சம்பந்தமான உரிமங்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உரிமங்கள் ஆகிய நிலைகளில் தேவையான சான்றுகளை பெற்றிருப்பது அவசியம்.
சொந்தமாக, நவீன கார்களை ரிப்பேர் பார்க்கும் ஷாப் தொடங்க விரும்பும் தொழில் முனைவோர்கள் சரியான ஒரு இடத்தை தேர்வு செய்ய வேண்டும். நெருக்கடியான இடமாக இல்லாமல் கார் ரிப்பேர் செய்வதற்கான தண்ணீர் மற்றும் மின்சார வசதி வாய்ப்புகள் அமைந்துள்ள இடமாக அது இருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் சுலபமாக தங்களது கார்களை கொண்டு வந்து நிறுத்துவது மற்றும் திருப்பி எடுத்துச் செல்வது ஆகிய செயல்களுக்கு இடைஞ்சல் இல்லாத பகுதியாகவும் இருக்க வேண்டும்.
தொழிலுக்கான உள்கட்டமைப்பு என்ற வகையில் தேவையான தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் இதர உபகரணங்கள், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், காருக்கு கீழ்ப்புறமாக இருந்து ரிப்பேர் பார்ப்பதற்கான தரைத்தள கட்டமைப்பு ஆகியவற்றை சரியாக உருவாக்கியிருக்க வேண்டும். ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டு வரும் புதுப்புது தொழில் நுட்பங்களை அன்றாடன் கவனித்த வண்ணம் இருக்க வேண்டும். நேரம் கிடைக்கும்போது கார்களுக்கான துறை சார்ந்த புத்தகங்களைத் தேடிப்பிடித்து படிக்க வேண்டும். பல்வேறு பொறியியல் நுட்பங்கள், எந்திரங்கள் – கருவிகளின் கூட்டமைப்பாக இயங்குவது கார். அதில் எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அமைப்புகளும், கருவிகளும் அடங்கி இருக்கின்றன. விதவிதமான கார்கள், அவற்றில் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு பழுதுகள் ஏற்பக்கூடும் என்ற நிலையில் அவற்றை நுணுக்கமாக ஆராய்ந்து ரிப்பேர் செய்யும் கலையை மேலும் கூர்மைப்படுத்திக்கொள்ள தொழில் முனைவோர் தயார் நிலையில் இருக்கவேண்டும்.
ஆரம்ப கட்டம்
தொடக்கத்தில் வரும் வாடிக்கையாளர்களுக்கு நல்ல முறையில், நியாயமான கட்டணத்துடன் ரிப்பேர் செய்து கொடுக்க வேண்டும். மிக நன்றாக வேலையை முடித்துக் கொடுக்கிறீர்கள். எல்லோரையும் போல இல்லாமல் சுத்தமாக செய்கிறீர்கள். இடமும் தூய்மையாக இருக்கிறது என்று வாடிக்கையாளர் கூறும் அளவுக்கு பணித்திறன் இருக்க வேண்டும். அதன் பின்னர்தான், காலப்போக்கில் அனைத்து வகை கார்கள் பற்றியும் தெரிய வருவதுடன், நல்ல பணி அனுபவமும் கிடைக்கும்.
அதன் பிறகே, படிப்படியாக வரவேற்பு கிடைக்கத் தொடங்கும் நிலையில், கார் ரிப்பேர் ஷாப் பற்றி சுவரொட்டிகள் அல்லது ஃபிளெக்ஸ் ஆகியவற்றை தயார் செய்து விளம்பரம் செய்யலாம். விளம்பர அறிக்கைகளை சம்பந்தப்பட்ட பகுதியில் கார்கள் வைத்து இருப்பவர்கள் வீடுகள்தோறும் கொண்டு கொடுக்கலாம். இப்போது இணைய தளத்தையும் உங்கள் நிறுவனத்தை பலரையும் அறியச் செய்ய பயன்படுத்தலாம். தொழில் நுட்ப அறிவும், சேவையும் முழுமையாக வெற்றி அடைவது என்பது வாடிக்கையாளர்களின் மனநிறைவில்தான் உள்ளது என்ற சூட்சுமத்தை அப்போதும் கவனத்தில் கொண்டு செயல்படுவது முக்கியம்.
ஒரு கார் மெக்கானிக் என்பவர் எப்போதும் வாடிக்கையாளர்கள் சொல்லக்கூடிய விஷயங்களை காதுகொடுத்து கேட்கவேண்டும். காரணம் வருடக்கணக்காக அந்த காரை பயன்படுத்திவரும் நிலையில் அவர்கள் சொல்லக்கூடிய விஷயங்களிலேயே காருக்கான ரிப்பேர் என்ன என்பது உள்ளர்த்தமாக இருக்கக் கூடும். அதனால் அவர்களது கருத்தை முற்றிலும் கேட்ட பின்னர் ஒரு மெக்கானிக் என்ற அடிப்படையில் உங்களுடைய கருத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் தெரிவிக்க வேண்டும். அதன் பின்னர், சம்பந்தப்பட்ட காரை நன்றாக ஆராய்ந்து பழுது ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும். குறிப்பாக காருக்கு ஏதாவது உதிரி பாகங்கள் மாற்ற வேண்டும் என்ற நிலையில், அதை நிச்சயமாக வாடிக்கையாளரிடம் தெரிவிக்க வேண்டும். வாடிக்கையாளர் இல்லாத நிலையில் தொலைபேசி மூலமாக அந்தத் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். இன்னும் சரியாக சொல்வதென்றால் சம்பந்தப்பட்ட ஸ்பேர் பார்ட்ஸ் வாங்கப்பட்டு காருக்கு பொருத்துவதன் மூலம் ஏற்படக்கூடிய நன்மைகள் மற்றும் அதற்கான செலவினங்கள் என்ன என்பது பற்றி தெளிவாக குறிப்பிட்டு, அவர்களது சம்மதத்தின் அடிப்படையில் பணிகளை செய்து தரவேண்டும்.
வாடிக்கையாளர் நம்பிக்கை
அனுபவம் பெற்ற மெக்கானிக் என்பவர் பழுது பார்க்கப் படுவதற்கு முன்னரும், பழுது சரி செய்யப்பட்ட பின்னரும் சம்பந்தப்பட்ட காரை ஓட்டிப் பார்க்கும் வழக்கத்தை கடைபிடிப்பார். எல்லா நேரங்களிலும் அந்த முறை சாத்தியப்படாது என்பதால் நன்றாக ரிப்பேர் பார்க்க தெரிந்த ஓரிரு பணியாளர்களை நியமனம் செய்து கொள்ள வேண்டியதாக இருக்கும். எப்படி இருந்தாலும் கார் ரிப்பேர் ஷாப் ஓனர் வாடிக்கையாளர் அது காரை அவரது கண் முன்னே ஓட்டிப் பார்த்து அதன் தரத்தை சோதனை செய்வது என்பது வாடிக்கையாளர்கள் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் ஏற்படுத்தக் கூடியதாகும்.
வாடிக்கையாளரின் ஃபீட் பேக் என்று சொல்லப்படக்கூடிய சர்வீஸ் பற்றிய கருத்து ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிகவும் அடிப்படையான விஷயம் ஆகும். அதனால் அனைத்து வாடிக்கையாளர்களிடமும் அவர்களுடைய அனுபவம் மற்றும் கருத்துக்களைக் கேட்டுக் கொள்ள வேண்டும். அனைத்து வாடிக்கையாளர்கள் பற்றியும் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன் கண்டிப்பாக பதிவு செய்துகொள்ள வேண்டும். வாடிக்கையாளர் மீண்டும் எளிதாக கார் ரிப்பேர் ஷாப் மூலம் பழுது பார்க்கும் பணிகளை மேற்கொள்ள வசதியாக எஸ்.எம்.எஸ் மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்அப் ஆகியவற்றின் மூலம் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். புதிதாக அல்லது செகண்ட் ஹேண்ட் கார் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு உதவி செய்வது அல்லது ஆலோசனைகள் அளிப்பது ஆகியவை தொழில் ரீதியாக முக்கியமான அம்சமாகும்.
கார் ரிப்பேர் ஷாப் தொழில் முனைவோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய இன்றைய தொழில்நுட்பம் மொபைல் ரிப்பேர் ஷாப் என்பதாகும். இந்த விஷயம் சற்று கார்ப்பரேட் அணுகுமுறை சார்ந்ததாக இருக்கலாம். ஆனால் பிசினஸ் ரீதியாகவும், வாடிக்கையாளர் சேவை என்ற நிலையிலும் வர்த்தக ரீதியான வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய தொழில் முயற்சியாகவும் இருக்கும். இந்த சேவையில் இறங்கும் கார் ரிப்பேர் பிசினஸ் தொழில் முனைவோர் அட்வான்ஸ்டு டெக்னாலஜி முறையில் செயல்பட வேண்டியதாக இருக்கும். அதாவது வாடிக்கையாளரது தொலைபேசி எண் மூலம் ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவரது கார் நிற்கும் இடத்தை கண்டறிந்து மொபைல் கார் ரிப்பேர் சேவையை வழங்கலாம். இந்த முறையில் கட்டணங்களை பெறுவது என்பது பல்வேறு நடைமுறைகளை சார்ந்ததாக இருக்கும். பல வாடிக்கையாளர்கள் கட்டணத்தை பிறகு தருவதாக கூட சொல்லலாம். அதனால் ஆன்லைன் முறையில் கட்டணத்தை பெறக்கூடிய வசதிகளையும் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.
ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு காரில் செல்லும்போது எவ்வித பிரச்னையும் இல்லாமல் சென்றால் பயணம் மிக இனிமையாக அமைந்துவிடும். ஆனால் கார் பழுது அடையும்போது பலருக்கும் வரக்கூடிய டென்ஷனுக்கு அளவே இருக்காது. தெரியாத ஊரின் நெடுஞ்சாலை அல்லது கிராமத்தின் ஒரு சாலையில் கார் பழுதடைந்து, தடுமாறி நிற்கும் வாடிக்கையாளருக்கு உதவலாம். சம்பந்தப்பட்ட ஊரில் உள்ள கார் ரிப்பேர் ஷாப்பை தொடர்பு கொள்வதற்கேற்ப தகவலை வாடிக்கையாளருக்கு அளிக்கலாம். பல்வேறு இணைய தளங்கள் இந்த சேவையை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகின்றன. ஆனால், தெரிந்த வாடிக்கையாளருக்கு, பழக்கமான ரிப்பேர் ஷாப் மூலம் கிடைக்கும் தகவல் என்பதுதான் நம்பிக்கைக்குக்கு உரியதாக இருக்கும். அதற்கேற்ப பக்கத்து ஊர்கள் அல்லது வெவ்வேறு நகரத்தில் அமைந்துள்ள கார் மெக்கானிக் ஷாப் தொழில் முனைவோர்களிடம் தொடர்பு கொண்டு பேசுவதில் எவ்விதமான தயக்கமும் காட்டுவது கூடாது. தொழில் ரீதியான பரஸ்பர உதவி என்ற நிலையில் சக தொழில் முனைவோருடன் தொடர்பு கொள்வதன் மூலம் அதே உதவியை, கேட்டு சம்பந்தப்பட்ட கார் ரிப்பேர் ஷாப் ஓனரும் தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பமும் இருக்கிறது.
வாடிக்கையாளரின் காரை ரிப்பேர் பார்ப்பதுடன் காருக்கான இதர தகவல்களையும் அவருக்கு தெரிவிப்பது பெரும் உதவியாக இருக்கும். உதாரணமாக கார் எஞ்சின் ஆயில் மாற்றம் செய்வது, பிரேக் சம்பந்தமான திருத்தங்கள், ஸ்பார்க் பிளக், பேட்டரி மற்றும் பெயர்கள் ஆகிய விஷயங்களில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை வாடிக்கையாளருக்கு தெரிவிப்பது தொழில் வளர்ச்சிக்கு முக்கியமான அம்சமாக அமையும்.