மார்பிள் மற்றும் கிரானைட் தொழில் முனைவோர் கவனத்தில் கொள்ள வேண்டிய வர்த்தகநடவடிக்கைகள்
வீடு கட்டுவது என்பது ஒரு தனி மனிதனுடைய வாழ்நாள் லட்சியமாக இருந்து வருகிறது. இந்திய அளவில் கணக்கெடுத்தால் நடுத்தர வர்க்கத்தினர் மிகவும் அதிகமாக இருப்பார்கள். அத்தகைய நடுத்தர வர்க்கத்தினரின் முக்கியமான கனவு சொந்த வீடு கட்டுவது என்பதாகும். சொந்த வீடு கட்டுவது என்றால் பழைய காலங்களில் இருப்பது போன்று சுலபமாக முடியக்கூடிய விதத்தில் இன்றைய வாழ்க்கைச் சூழல் அமைந்திருக்கவில்லை. வெவ்வேறு விதமான நாகரீக மாற்றங்களின் அடிப்படையில் வீடு கட்டுவது என்பது ஒருவிதத்தில் ஒருவருடைய அந்தஸ்தை வெளிக்காட்டுவதாக ஆகிவிட்டது. மேலும், கட்டிய வீட்டை பார்வையிட வரக்கூடிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் தரைத்தளத்தை கவனமாக பார்ப்பார்கள். தரைத்தள அமைப்பு மார்பிள் அல்லது கிரானைட் போடப்பட்டதாக இருந்தால் அதை பலரும் ரசிப்பார்கள். ஒரு வீட்டின் தரைத்தள கட்டமைப்பு என்பதுகூட சமூக அளவில் அவருடைய அந்தஸ்தை நிர்ணயம் செய்யும் காரணியாக இன்றைய நாகரீக வாழ்க்கை மாறிவிட்டிருக்கிறது.
பூமியில் இருந்து வெட்டி எடுக்கப்படும் மார்பிள் மற்றும் கிரானைட் வகை கற்கள் பெரும் பொருளாதார மதிப்பு கொண்டவையாக இருந்து வருகின்றன. வர்த்தக ரீதியாக அவற்றை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வது என்பது ஒரு பெரும் முதலீட்டை அடிப்படையாகக் கொண்டு துவங்க கூடிய நிறுவனமாக இருக்கும். மார்பிள் அண்ட் கிரானைட் பிசினஸ் என்பது தெளிவான முடிவு மற்றும் சந்தை நிலவரம் ஆகியவற்றின் அடிப்படையில் கச்சிதமாக செயல்படவேண்டிய தொழில் முயற்சியாகும்.
- இந்த தொழிலானது மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது. அதில், முதலாவது மார்பிள் அண்ட் கிரானைட் ஷோரூம் அமைத்து அதன்மூலம் வாடிக்கையாளர்களுக்கு சில்லறை விற்பனை செய்வதாகும்.
- இரண்டாவது முறை என்னவென்றால் மார்பிள் கிரானைட் ஃபேக்டரி அமைத்து வாடிக்கையாளர்களுக்கு மொத்த விற்பனை செய்யும் பிரிவாகும்.
- இதில் மூன்றாவது என்பது மிக அதிகமான தொழில் முதலீடு தேவைப்படக்கூடிய, பூமியிலிருந்து கிரானைட் வெட்டி எடுக்கக்கூடிய குவாரி பிசினஸ் செய்வதாகும்.
மார்பிள் மற்றும் கிரானைட் ஆகியவை இயற்கையாக உருவாகும் கற்களாகும். மார்பிளைக் காட்டிலும் அதிக ஆழத்தில் கிரானைட் உருவாகிறது. கனலாக எரியும் பாறைக் குழம்புகள் குளிர்ந்து உருவாகும் இந்தப் பாறையின் மூலப்பொருட்களின் தன்மையைப் பொறுத்து வண்ணம், கலவை போன்ற தன்மைகள் உருவாகின்றன. மார்பிள் கற்கள் பொதுவாக வெளிர் நிறங்களிலும் கிரானைட் கற்கள் பெரும்பாலும் அடர் வண்ணத்திலும் இருப்பது இயல்பு. அவற்றின் மூலப்பொருள் வித்தியாசத்தால் நிற வித்தியாசம் ஏற்படுகிறது.
நன்றாக பாலிஷ் செய்யப்பட்ட மார்பிள் கற்களுக்கு இந்திய அளவில் நல்ல வரவேற்பு இருக்கிறது குறிப்பாக வீடுகளின் கட்டுமானப் பணிகள் ஹோட்டல்கள் ஏர்போர்ட் ரயில்வே மருத்துவமனை உள்ளிட்ட கட்டிடங்களுக்கு மார்பில் வகைகள் பெரும்பாலும் தரை தளங்களாக அமைக்கப்படுகின்றன பக்கவாட்டு சுவர் பகுதிகளுக்கும் இவ்வகை கற்கள் பயன்படுத்தப்படுகின்றன. மார்பிள் வகைகளில் மக்ரானா மார்பிள், ராஜ்நகர் மார்பிள், அந்தி மார்பிள், சலும்பர் மார்பிள், ராஜஸ்தான் அபு பிளாக் மார்பிள் உள்ளிட்டபல்வேறு வகைகள் இருக்கின்றன. மார்பிள் மற்றும் கிரானைட் ஏற்றுமதியில் சீனா தென் கொரியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுடன் இந்தியாவும் சர்வதேச அளவில் முக்கியமான இடம் பெற்றுள்ளது
மிகுந்த அழுத்தம், வெப்பம் காரணமாக உருவாவதால், மார்பிளோடு ஒப்பிடும்போது கிரானைட்டின் துளையிடும் தன்மை மிகவும் குறைவாக இருக்கும். அதனால் அதன் வலிமையும் கூடுதலாக இருக்கும். மார்பிள் மற்றும் கிரானைட் கற்கள் முக்கால் இஞ்ச் அதாவது 18 எம்.எம். அளவிலிருந்து தேவைக்கேற்ப கனம் நிர்ணயிக்கப்பட்டுத் தொழிற்சாலைகளில் கச்சிதமாக கட்டிங் செய்யப்படுகின்றன.
மார்பிள் அண்ட் கிரானைட் ஷோரூம்
மார்பிள் மற்றும் கிரானைட் ஷோரூம் அமைப்பது என்றால் போதுமான இடவசதி போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றுடன் குறைந்தபட்ச முதலீடாக ரூ 10 லட்சம் தேவைப்படக்கூடும். இந்த தொழிலை ஆரம்பிக்க விரும்பும் தொழில் முனைவோர்கள் நிறுவனத்திற்கான நல்ல பெயர் மற்றும் ஜி.எஸ்.டி வரி விதிப்பு எண் ஆகியவற்றுடன் லோக்கல் முனிசிபாலிட்டி அல்லது நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளிடம் தேவையான லைசென்ஸ் ஆகியவற்றை பெற்றுக் கொண்டால் போதுமானது. இந்திய அளவில் இருக்கக்கூடிய சப்ளையர்களிடமிருந்து தேவையான மார்பிள் அல்லது கிரானைட் வகைகளை கொள்முதல் செய்து காட்சிப்படுத்தி வாடிக்கையாளர்கள் தேவைக்கேற்ப விற்பனை செய்யலாம்.
மார்பிள் அண்ட் கிரானைட் ஃபேக்டரி
இரண்டாவது வகையைச் சேர்ந்த இந்த மார்பிள் அண்ட் கிரானைட் பிசினஸ் தொழில் முனைவோர்கள் ஃபேக்டரி அமைத்து வர்த்தக ரீதியாக செயல்பட சற்று கூடுதலான இடவசதி மற்றும் பெரிய அளவிலான முதலீடு ஆகியவை அவசியமானது. இந்த இரண்டாவது தொழில் முறையானது மூன்று உட்பிரிவுகளை கொண்டுள்ளது. முதலாவது டைல்ஸ் பிராண்ட், இரண்டாவது கட்டர் சைஸ் பிராண்ட் மூன்றாவது கேங் ஷா சைஸ் பிராண்ட் ஆகியவையாகும். இந்த மூன்று வகை ஃபேக்டரி நடத்துவதற்கும் வெவ்வேறு வகையான சட்ட நடைமுறைகள் இருக்கின்றன. மூலப்பொருளாக எடுக்கப்படும் கிரானைட் அல்லது மார்பிள் கற்கள் வகைகளை சரியான அளவுகளில் கட்டிங் செய்ய வேண்டும் என்ற நிலையில், மத்திய மாநில அரசுகளின் மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் இருந்து அங்கீகாரம் பெற வேண்டும். அந்த பேட்டரியில் இயங்கக்கூடிய பெரிய அளவிலான எந்திரங்களுக்கு மின்சார வாரியத்திடம் இருந்து முறையான அங்கீகாரம் பெறவேண்டும். இந்த தொழில் பிரிவை தொடங்குவதற்கு நிச்சயம் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்ய வேண்டியதாக இருக்கும். ஆனால், அதற்கேற்ப லாபகரமாக நடக்க கூடிய தொழிலாக இது இருக்கிறது. குறிப்பாக, ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளையும் இந்த பிரிவு கொண்டுள்ளது என்பதை கவனத்தில் வைக்க வேண்டும்.
கிரானைட் குவாரி
மார்பிள் அண்ட் கிரானைட் பிசினஸ் துறையில் மூன்றாவது பிரிவு கிரானைட் குவாரி நடத்துவது என்பதாகும். நிச்சயமாக அனைவராலும் குவாரி நடத்துவது என்பது இயலாது. மிக மிக அதிகமான முதலீடு இந்த தொழிலுக்கு தேவை என்பதால் தேசிய அளவில் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே இந்த தொழிலை நடத்த இயலும். இதிலுள்ள ஒரு மாற்று வழி என்னவென்றால், சொந்தமாக குவாரி அமைத்து தொழில் நடத்த இயலாது என்ற நிலையில், ஒரு கிரானைட் குவாரியை குத்தகைக்கு எடுத்து ஆட்களை வைத்து தொழிலை செய்யலாம். வெட்டி எடுக்கப்படும் கிரானைட் வகைகளுக்கு ஏற்ப தக்க கமிஷனை நிலத்தின் உரிமையாளருக்கு தரலாம். இந்த பிரிவுக்கும் பல்வேறுவகையான சட்ட அனுமதிகள், தடையில்லா சான்றிதழ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளை கடந்த பிறகுதான் தொழில் நடத்துவது இயலும்.
மேலே நாம் கண்ட மூன்று வகைகளில் பெரும்பாலான தொழில் முனைவோர்களுக்கு நடைமுறை சாத்தியமாக உள்ள வர்த்தக வடிவம் என்பது கிரானைட் மற்றும் மார்பிள் ஆகியவற்றை சில்லறை விற்பனையாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வது ஆகும். மேலும், தனிப்பட்ட ஷோரூம் அமைப்பதன் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட மார்பிள் மற்றும் கிரானைட் வகைகளையும், உள்நாட்டில் கிடைக்கக்கூடிய பல்வேறு வகைகளையும் விற்பனைக்கு வைக்கலாம். அத்துடன் வாடிக்கையாளர்களுக்கு அந்த கற்களை பதித்து கொடுக்கும் பணிகளையும், பாலிஷ் செய்யக்கூடிய வேலைகளையும் செய்வதும் அவசியமானது.
மார்பிள் அண்ட் கிரானைட் பிசினஸ் என்ற நிலையில் தொழில் முனைவோர் ஷோ ரூம் அமைத்து வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை அளிக்க வழக்கமான லைசென்ஸ் வகைகளே தேவைப்படும். மத்திய மற்றும் மாநில அரசுகளின் உரிமங்கள், நிறுவனத்திற்கான பெயர் மற்றும் தொழில் ரெஜிஸ்ட்ரேஷன், ஜி.எஸ்.டி வரிக்கான பதிவு, ஃபேக்டரி லைசன்ஸ் மற்றும் பி.ஐ.எஸ் சர்டிபிகேஷன் ஆகியவை அவசியமானது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு சேவை மற்றும் ஸ்டோன் வொர்க் செய்யக்கூடிய தொழில்முறை பணியாளர்களை பணி நியமனம் செய்ய வேண்டும்.
ஷோரூம் என்றாலும்கூட கிடைக்கும் இடத்தை பொறுத்து சிறிய அளவிலான ஒர்க் ஷாப் ஒன்றும் இருக்க வேண்டும். அதன்மூலம் சில அவசியமான கட்டிங் செய்யும் பணிகளை அங்கேயே செய்து முடிக்க முடியும். அதற்கேற்ப தொழிலில் திறமை வாய்ந்த பணியாளர்களை சரியான முறையில் தேர்வு செய்ய வேண்டும்.
தொழிலில் கால் வைப்பது என்று முடிவெடுத்த பின்னர் அதற்கு தேவையான முதலீட்டு நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும். இடம் கச்சிதமாக தேர்வு செய்த பின்னர் ஓரிரு மாதங்களுக்கு சிறிய அளவிலான கொள்முதல் செய்து விற்பனையை நடத்தி வர வேண்டும். அதற்கான விளம்பரங்களையும் சம்பந்தப்பட்ட பகுதியில் சரியாக செய்து வர வேண்டும். தொழிலை மெல்ல மெல்ல விரிவாக்கம் செய்யும் முயற்சியை சிறிது காலம் கழித்து மேற்கொள்ளலாம். ஒரு வருடம் அல்லது ஒன்றரை வருடம் கழிந்த பின்னர் மேலும் தொழிலை விரிவாக்கம் செய்வதற்காக வங்கிகளிடம் கடன் கேட்டு விண்ணப்பம் செய்யலாம்.
மார்பிள் அண்ட் கிரானைட் பிசினஸ் ஷோரூம் சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் வாடிக்கையாளர்கள் கண்களையும் கருத்தையும் கவரும் வகையில் காட்சி அமைப்புகளை செய்து வைத்திருக்க வேண்டும். அதற்கேற்ப தேசிய அளவில் அல்லது சர்வதேச அளவில் உள்ள மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து பல்வேறு வகையான ஸ்டோன் மாடல்களை வாங்கி காட்சிப்படுத்த வேண்டும். அதன் மூலம் வாடிக்கையாளர் அளிக்கக்கூடிய ஆர்டர்களுக்கு ஏற்ப மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து உடனடியாக மார்பிள் அல்லது கிரானைட் வகைகளை பெற்று சப்ளை செய்ய வேண்டும்.
குறிப்பிட்ட ஒரு ஷோ ரூமிலிருந்து மார்பிள் அல்லது கிரானைட் வாங்கப்படும் பொழுது ஷோரூம் சம்பந்தமான ஸ்டோன் ஒர்கிங் பணியாளர்கள் பாலிஷிங் அண்ட் ஷைனிங் உள்ளிட்ட ஃபேப்ரிகேஷன் பணிகளை மேற்கொள்வது சரியான தொழில் நடைமுறையாகும். அதன் மூலம் வாடிக்கையாளர் கவனத்தை ஈர்க்க முடியும். பணிகள் முடிந்த பின்னரும் வாடிக்கையாளர்கள், ஷோரூமை தொடர்பு கொள்வதற்காக ஆஃப்டர் சர்வீஸ் என்ற சேவை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தொழில் மேம்பாட்டு தகவல்கள்
குறிப்பிட்ட ஏரியாவில் நடக்கக்கூடிய கட்டுமான பணிகள் பற்றிய அனைத்து தகவல்களும் மார்பிள் அண்ட் கிரானைட் பிசினஸ் தொழில் முனைவோருக்கு தெரிந்திருக்க வேண்டும். கட்டுமானப் பணியை செய்து வரும் வீட்டு உரிமையாளரை நேரடியாகவோ அல்லது அலுவலக மேலாளர் மூலமோ தொடர்பு கொண்டு நிறுவனம் அளிக்கும் பல்வேறு விதமான சர்வீஸ் பற்றிய தகவல்களை தெரிவிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள சிவில் இன்ஜினியர்கள், ஆர்கிடெக்ட், கட்டிட காண்ட்ராக்டர்கள், கட்டிட மேஸ்திரி போன்ற கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் எல்லாவிதமான தொழில்முறை நபர்களுடனும் நேரடியான தொடர்பில் இருக்க வேண்டும்.
பெடரேஷன் ஆஃப் இந்தியன் கிரானைட் அண்ட் ஸ்டோன் இண்டஸ்ட்ரி என்ற தேசிய அளவிலான அமைப்பு கிரானைட் மற்றும் மார்பிள் சம்பந்தப்பட்ட தொழில் முனைவோர்களுக்கு உதவி செய்கிறது. இந்த தொழில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கும் விதத்திலும் செயல்பட்டு வருகிறது. மார்பிள் அண்ட் கிரானைட் பிசினஸ் தொழில் முனைவோர்கள் தங்களுக்கு தேவையான சகலவிதமான தொழில்நுட்ப ஆலோசனைகளையும் இந்த அமைப்பில் பெற்றுக்கொள்ள முடியும். தங்களுடைய தொழிலாளர்களுக்கு தேவைப்படக்கூடிய பயிற்சிகளையும் இந்த அமைப்பின் மூலம் அளிக்க முடியும்.
தனியார் கன்சல்டன்ஸி
தற்போதைய வர்த்தக சூழலில் மார்பிள் கிரானைட் பிசினஸ் தொடங்கி நடத்த விரும்பும் தொழில் முனைவோர்களுக்கு கன்சல்டேஷன் அளிப்பதற்கு பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களுடைய நீண்ட அனுபவத்தின் அடிப்படையில் அந்த ஆலோசனைகளை அவர்கள் அளித்து வருவதாக தெரியவந்துள்ளது. ஒரு நிறுவனத்தை பதிவு செய்வது மற்றும் அவசியமான மத்திய மாநில அரசுகளின் அங்கீகாரங்களை பெறுவது உள்ளிட்ட ஃபார்மாலிட்டீஸ் வகைகளை எவ்வாறு செய்து முடிப்பது என்பதற்கான தகவல்கள் மற்றும் பிசினஸ் ரீதியான அணுகுமுறைகள் குறித்த விவரங்களையும் அவர்கள் அளிக்கிறார்கள்.