இலாபகரமான போக்குவரத்து தொழில் திட்டங்கள்!
ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல போக்குவரத்து என்பது மிக அத்தியாவசியமான ஒன்றாக அனைவருக்கும் இருந்து வருகிறது. அது தேவைகளுக்கு ஏற்ப இடத்திற்கு இடம் மாறுபடும் வகையில் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இன்றைய உலகில் அனைவருக்கும் நேரம் என்பது முக்கியமாக இருக்கும் பட்சத்தில் அதற்காக அவர்கள் பல்வேறு பொது மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகளைத் தேர்ந்தெடுத்து ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மிக எளிதாக செல்ல பயன்படுத்திக்கொண்டு வருகின்றனர். அவ்வாறு நாம் பயன்படுத்தும் போக்குவரத்து என்பது பல்வேறு பணிகளுக்கு உதவிகரமாக இருக்கின்றவாறு உள்ளது.
அவசர மருத்துவ தேவை, வெளியிடங்களுக்கு செல்லுதல், பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்துதல் என பல வகைகளில் அனைவரின் வாழ்க்கையிலும் போக்குவரத்து என்பது மிகப் பெரும் உதவியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் சமீப காலமாகவே போக்குவரத்து தொழில் மிக அதிக அளவில் பல்வேறு வகைகளில் லாபம் தரக்கூடிய மிகப் பிரபலமான தொழில்களில் ஒன்றாக பிரபலமாகி வருகிறது. அதற்கு சான்றாக நாம் அன்றாட வாழ்வில் கடந்து செல்லும் பல டாக்ஸி மற்றும் ஷேர் ஆட்டோக்கள் என போக்குவரத்து சார்ந்த தொழில்கள் மக்களின் வாழ்க்கையுடன் ஒன்றியவாறு அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. அதேசமயம் இது அதிக லாபம் தரக்கூடிய வகையில் இருப்பதால் பலரும் பல போக்குவரத்து தொழில்களை மிக ஆர்வமாக தொடங்கி வருகின்றனர்.
போக்குவரத்து தொழிலைத் தொடங்குவதற்கு ஆரம்ப முதலீடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. எனினும் அவ்வாறு செய்யப்படும் முதலீடு மிக விரைவிலேயே லாபமாக கிடைத்து விடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இருப்பினும் இங்கு நாம் அன்றாட வாழ்வில் அனைவரும் பயன்படுத்தும் சில லாபகரமான போக்குவரத்து தொழில்கள் என்னென்ன அது எவ்வாறெல்லாம் பயன்படுகின்றன என்பதைப்பற்றி மிக விரிவாக காண்போம்.
செயலிகள் மூலம் இயங்கும் டாக்ஸி சேவை!
மக்கள் பலரும் தங்களது கைப்பேசியில் கட்டாயம் வைத்திருக்கும் செயலிகளில் ஓலா மற்றும் ஊபர் உள்ளிட்ட தனியார் டாக்ஸி செயலிகள் கண்டிப்பாக இடம்பெற்று இருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே செயலி மூலம் இயங்கும் டாக்ஸிகளின் எண்ணிக்கை என்பது நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வர மக்கள் அதனை மிக எளிதாக தங்களது அதிநவீன கைப்பேசியின் மூலம் இருந்த இடத்திலிருந்தே அவர்களுக்குத் தேவையான டாக்ஸியை பதிவு செய்து குறிப்பிட்ட இடத்திற்கு மிக சுலபமாக பயணம் செய்வது பெரும்பான்மையான ஜனங்களிடையே நாளுக்கு நாள் பெருகி வருகிறது, மேலும் அதையே பலரும் விரும்புகின்றனர்.
இவ்வாறான சூழ்நிலையில் ஓலா டிரைவ்–ல் பார்ட்னராக மாறலாம். அதற்கு தேவையான அடிப்படை ஆவணங்களான காரின் பதிவு எண் மற்றும் தேவையான சில அடிப்படையான ஆவணங்கள் உள்ளிட்டவைகளே போதுமானது. இவை மட்டும் இருந்தாலே போதும் நீங்கள் உங்களுடைய தொழிலைத் தொடங்கிவிடலாம். அவ்வாறு தொடங்கும் பட்சத்தில் எத்தனை கார்கள் பதிவு செய்யப்பட்டு ஓடிக்கொண்டிருக்கின்றது அதில் இயங்கும் ஓட்டுநர்கள் மற்றும் அவர்களின் திறமையைப் பொறுத்து அதில் வரும் நல்ல வருமானமும் அடங்கும்.
கார் ஷட்டில் சர்வீஸ் !
கார் ஷட்டில் சர்வீஸ் என்பது குறிப்பிட்ட இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கும் மட்டுமே பயணிக்க பயன்படுத்தப்படும் ஒரு போக்குவரத்து சேவை ஆகும். இது பெரும்பாலான நிறுவனங்களில் அவர்களது தொழிலாளர்களை ஏற்றிச் செல்லவும் திரும்ப கொண்டுவந்து விடவும் மட்டுமே தினந்தோறும் பயன்படுத்தப்படுகிறது.
நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களுக்கு போக்குவரத்து சேவையை அளிக்க தனியார் போக்குவரத்து சேவை மையத்தை அணுகியே பெரும்பாலும் இதுபோன்ற வசதியை தொழிலாளர்களுக்கு அளிக்கின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் சொந்தமாக போக்குவரத்து தொழில் தொடங்க நினைப்பவர்கள் குறிப்பிட்ட நிறுவனங்களை அணுகி ஒப்பந்த அடிப்படையில் பேசி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து பேருந்து அல்லது கார் ஷட்டில் சேவையைத் தொடங்கும் பொழுது இதில் நீங்கள் நினைத்து பார்த்ததை விடவும் மிக அதிகமான லாபம் அதேசமயம் வேலைப்பளுவும் குறையும். இதில் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால் நிறுவனங்கள் தொடர்ந்து இயங்குவதால் உங்களுக்கு தினம்தோறும் வேலை இருந்து கொண்டே இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு வரக்கூடிய லாபத்தின் அளவும் பல மடங்கு இருக்கும்.
மேலும் இப்போது உள்ள சூழ்நிலையில் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல நிறுவனங்கள் தாமாக முன்வந்து பெண்களுக்கு தனி போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. இதில் பகல்நேர வேலையை விட இரவு நேர வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நிறுவனங்கள் இதுபோன்ற இலவச போக்குவரத்து சேவையை அடிப்படை காரணியாக கொண்டுள்ளது. அவ்வாறு நிறுவனங்கள் உங்களிடம் இரவு போக்குவரத்து சேவைக்காக அணுகும்போது பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் அதில் வரும் லாபம் என்பதும் பகல் நேரத்தை காட்டிலும் கணிசமான முறையில் அதிகமானதாகவே இருக்கும்.
எனவே உலகில் நாளுக்கு நாள் நிறுவனங்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போக அவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதியும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில் இந்த சரியான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கார் ஷட்டில் சர்வீஸ் தொழிலை தேர்ந்தெடுப்பது மிக எளிமையான அதே சமயம் லாபகரமான பயனளிக்கும்.
வெளியூர் வாடகை கார் சேவை!
ஒவ்வொரு ஊர்களிலும் இதுபோன்ற பல முகவர்கள் வெளியூர் வாடகை கார் சேவை தொழிலை செய்து வருகின்றனர். அதேபோல நீங்களும் சொந்த அல்லது வாடகை கார் சேவை மையத்தை தொடங்கலாம். இவ்வாறான போக்குவரத்து தொழிலில் அதிகபட்சமாக பயன்படுத்துவது சிறு மற்றும் நெடுந்தூர பயணங்களுக்காக வாடிக்கையாளர்களை ஏற்றி செல்வதாகும். இது ஒரு சில சமயங்களில் நாட்கணக்கிலும், வார கணக்கிலும் இன்னும் சில சமயம் மாதக்கணக்கிலும் கூட கார் அல்லது பேருந்து பதிவு செய்யப்படுகிறது. இதில் ஓட்டுனர் உடன் செல்லும் பட்சத்தில் அவருக்கு தேவையான கட்டணமும் அதனுடன் சேர்க்கப்படுகிறது.
இவ்வாறு தொடர் பயணங்களில் வாடகை கார்களை இயக்கும் பொழுது அது உங்களுக்கு மிக நல்ல லாபத்தை ஈட்டி தருகிறது. இவ்வாறான வாடகை கார் சேவை போக்குவரத்து தொழிலை சொந்தமாக தொடங்கும் பொழுது ஆரம்ப முதலீடு என்பது சற்று அதிகமாகவே இருக்கும், சில சமயம் கோடிகளிலும் சென்று முடியலாம். இவ்வாறு பலவிதமான கார்களை உங்களது சொந்த போக்குவரத்து தொழிலில் வாடகைக்கு அமர்த்தும் பட்சத்தில் மக்கள் பலரும் வெளியிடங்களுக்கும் வெளி ஊர்களுக்கும் சென்று வர குடும்பங்களாகவும் அல்லது நண்பர்களுடனும் காரில் பயணம் செய்வதையே சவுகரியமாக எண்ணுகின்றனர். எனவே போக்குவரத்து தொழில் செய்யத் திட்டமிடும்போது இவ்வாறான வாடகை கார் சேவை என்பது நல்ல லாபத்தை தருவதோடு தொழிலில் மிக விரைவாகவே உச்ச நிலையை அடையலாம்.
கனரக போக்குவரத்து சேவை!
வெளி நாடுகளில் இருந்து அல்லது வெளி மாநிலத்தில் இருந்து வரும் கனரக பொருட்களை ஏற்றிச் செல்வது மற்றும் இறக்குவது உள்ளிட்ட வேலைகளுக்கு கனரக போக்குவரத்து சேவை மிக அத்தியாவசியமான ஒன்றாகும். இங்கு அனைத்து பொருட்களும் அனைத்து இடங்களிலும் கிடைப்பதில்லை எனவே ஒரு மாநிலத்தில் தயாரிக்கப்படும் பொருட்கள் அல்லது சரக்குகள் மற்றொரு மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அங்கு கொண்டுசெல்லப்படுகிறது.
இது ஒரு வகையில் மிக ஆபத்தான தொழில் என்றாலும் மிக அதிக அளவிலான லாபத்தை ஈட்டக்கூடிய அதேசமயம் தொடர்ந்து அனைத்து நாட்களும் பொருட்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி என தொடர்ந்து வேலை நடந்து கொண்டே இருக்கும். இவ்வாறான கனரக போக்குவரத்து சேவையைத் தொடங்க சில முக்கியமான ஆவணங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கனரக வாகனத்தை இயக்குவதற்கான உரிமம், சிறந்த ஓட்டுநர் மற்றும் மாநிலங்களுக்கு இடையே பயணிப்பதற்கு தேவையான சரியான ஆவணங்கள் உள்ளிட்டவைகள் இந்த வகையான போக்குவரத்து தொழில் தொடங்க அடிப்படையான ஒன்றாகும். மேலும் இதிலும் சொந்தமாக தொழில் தொடங்க ஆரம்ப முதலீடு என்பது மிக அதிக அளவிலேயே இருக்கும் அதேசமயம் லாபமும் நினைத்து பார்த்ததைவிட அதிக அளவிலேயே ஈட்டமுடியும்.
பயணிகள் பேருந்து சேவை!
குறிப்பிட்ட ஊர்களுக்கு மற்றும் நகரங்களுக்கு அல்லது மாநிலங்களுக்கு இடையே மக்கள் சென்று வர போக்குவரத்து சேவை என்பது மிக முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. எனவே பயணிகள் போக்குவரத்து தொழில் என்பது லாபகரமான போக்குவரத்து தொழில் தொடங்குவதற்கு மிகச்சிறந்த தேர்வாகும்.
அதேபோல் சொந்தமாக தொழில் தொடங்கும் பட்சத்தில் இதிலும் ஆரம்ப முதலீடு என்பது சற்று அதிகமாகவே இருக்கும், எனினும் அதனை சமாளிக்கும் வகையில் இதற்காக பெரும்பான்மையான வங்கிகளில் கடன் கொடுக்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற பயணிகள் பேருந்து சேவையை தொடங்க கட்டாயம் ஆர்டிஓ அலுவலகத்தில் முறையாக பதிவு செய்து வைத்திருத்தல் அவசியமாகும்.
அவசர மருத்துவ ஊர்தி சேவை!
இப்போதுள்ள சூழ்நிலையில் மருத்துவ அவசர ஊர்தியின் தேவையும் அதற்காக ஆகும் செலவும் நாம் அனைவரும் அறிந்ததே. போக்குவரத்து தொழில் தொடங்க நினைப்பவர்கள் மருத்துவ அவசர ஊர்தி சேவையை தொடங்குவது மிகச்சிறந்த அதே சமயம் பாதுகாப்பான தொழில் ஆகும்.
மற்ற தொழில்களைப் போல இந்த மருத்துவ அவசர ஊர்தி தொழிலிலும் ஆரம்ப முதலீடு என்பது சற்று அதிகமாகவே இருக்கும் ஆனால் மருத்துவமனைகள் உடன் ஒப்பந்த அடிப்படையில் ஊர்திகளை இயக்கும் பொழுது இதில் கிடைக்கும் லாபம் என்பது மிகப்பெரியதாகும். அவ்வாறு நீங்கள் இது போன்ற மருத்துவ அவசர ஊர்தி சேவை தொழிலை தேர்ந்தெடுக்கும் பொழுது அதில் நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் உள்ளிட்ட அடிப்படை மருத்துவ வசதிகள் எப்பொழுதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.
பள்ளி மற்றும் கல்லூரி பேருந்து வசதி!
இப்பொழுது உள்ள பெரும்பான்மையான பள்ளி மற்றும் கல்லூரிகள் தங்களது நிறுவனங்களின் பெயரிலேயே பேருந்து வசதிகளை கட்டணத்தின் அடிப்படையிலும் ஒருசில நிறுவனங்கள் இலவசமாகவும் அளித்து வருகின்றன. எனவே இதுபோன்ற கல்வி நிறுவனங்களுக்கு பயன்படுத்தும் பேருந்து வசதி என்பது இப்போதுள்ள சூழ்நிலையில் மிகப் பிரபலமான போக்குவரத்து தொழில்களில் அதிக வருமானத்தை ஈட்டக்கூடிய ஒரு தொழிலாகும்.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தனி டாக்ஸி அல்லது பஸ்களில் அனுப்புவதை விட கல்வி நிறுவனத்தின் பேருந்துகளில் அனுப்புவதைதே பலரும் விரும்புவதால் இந்த தொழிலை நீங்கள் செய்யவேண்டியவை குறிப்பிட்ட பள்ளி அல்லது கல்லூரி நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் இணைந்து கொள்ளுதல் இதற்கு ஏற்ற சரியான வழிமுறையாகும்.
பேக்கர்ஸ் மற்றும் மூவர்ஸ் சேவை :
சமீப காலமாகவே பலராலும் அறியப்படாத அதேசமயம் நகர்புறங்களில் அதிக லாபம் ஈட்டக்கூடிய போக்குவரத்து தொழில்களில் பேக்கர்ஸ் மற்றும் மூவர்ஸ் சேவை மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. வீடு அல்லது ஒரு நிறுவனத்தை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றும்போது அதிலுள்ள பொருட்களை மிக பத்திரமாக பாதுகாப்புடன் எடுத்துச்செல்லும் தேவையை இது அளிக்கிறது.
இந்த வகையான போக்குவரத்து தொழிலில் எந்த அளவிற்கு லாபம் இருக்கிறதோ அதே அளவிற்கு ஆபத்தும் இருக்கிறது. எடுத்துச் செல்லும் பொருட்கள் எந்த ஒரு சேதமும் இல்லாமல் அதே சமயம் குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு சேர்த்து விட வேண்டும் என்பது பல வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு. அவ்வாறு வாடிக்கையாளர்களிடம் நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் உங்களது நிறுவனத்தை தேடி வருபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு பெருகி வருவதோடு மிகக் குறைந்த காலத்திலேயே அதிக லாபத்தையும், தொழிலில் உயரிய இடத்தையும் இதில் அடைந்துவிடலாம். லாபகரமான போக்குவரத்து தொழில் தொடங்க நினைப்பவர்கள் குறிப்பாக நகரங்களில் இதுபோன்ற பேக்கர்ஸ் மற்றும் மூவர்ஸ் சேவை தொழிலை தொடங்குவது மிகச் சரியான தேர்வாகும்.