கார்ட்ரிட்ஜ் ரீஃபில்லிங் தொழிலை தொடங்கி நடத்துவதற்கான செயல் திட்டம்
கம்ப்யூட்டர் என்ற எந்திரம் மனித வாழ்க்கையில் இடம்பெற தொடங்கியது முதல் அதிக உழைப்பு மற்றும் கூடுதல் முயற்சி என்ற உழைப்பின் பிரயத்தனங்கள் இல்லாமல் பல்வேறு பணிகளை எளிதாக செய்ய முடிகிறது. உலகம் முழுவதும் ஏராளமான தொழில் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக அமைப்புகள் கம்ப்யூட்டரை முழுமையாக நம்பியே தங்களுடைய தொழில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதாவது, சம்பந்தப்பட்ட கம்ப்யூட்டரில் பதிவாக அமைந்த ஒரு தகவலை பேப்பரில் அச்சிட்டு எடுத்துக் கொள்ள இயலும் என்ற உறுதியை பிரிண்டர்கள் அளிக்கின்றன. அதன் அடிப்படையில் தனி மனிதர்களும் தங்களுடைய பல்வேறு தகவல்களை கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட பிரிண்டிங் மெஷின் மூலமாக அச்சிட்டு பெற்றுக்கொள்கிறார்கள். பிரிண்டர் என்பது அச்சிடும் எந்திரம் என்ற நிலையில் அதற்கான இங்க் அல்லது டோனர் ஆகியவை தேவைப்படுகின்றன. அவற்றின் மூலம்தான் அச்சிடப்படும் தகவல் பேப்பரில் தேவைப்படும் வடிவத்தில் வெளிப்படுகிறது. தற்போதைய சூழலில் பிரிண்ட் செய்யப்படும் தொழில்நுட்பமானது இங்க்ஜெட் பிரின்டர் மற்றும் லேசர் பிரிண்டர் என்ற வகைகளில் நடைமுறையில் இருந்து வருகிறது.
ஒவ்வொரு நாளும் கல்வி சம்பந்தமாக அல்லது வர்த்தகம் மற்றும் தொழில் சம்பந்தமாகவும் மற்ற இதர காரணங்களின் அடிப்படையிலும் நூற்றுக்கணக்கான பக்கங்களை பிரிண்ட் எடுக்க கூடிய தனி நபர்கள் இருக்கிறார்கள். அதேபோல ஒரே நாளில் ஆயிரக்கணக்கான பக்கங்கள் பிரிண்ட் செய்யக்கூடிய பல்வேறு துறை சார்ந்த பெரு நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. அதனால் குறிப்பிட்ட ஒரு நகரத்தில் ஆயிரக்கணக்கான பிரிண்டிங் எந்திரங்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றன. பிரிண்ட் செய்யப்படுவதற்கான முக்கிய பொருள் பிரிண்டிங் கார்ட்ரிட்ஜ் என்பதாகும். முன்னரே நாம் பார்த்தது போல அது இங்க் மற்றும் டோனர் என்ற இரண்டு வகையில் அமைந்துள்ளன. அவற்றின் தன்மை மற்றும் அளவுகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்கங்கள் மட்டுமே பிரிண்ட் செய்ய முடியும். அதற்குப் பின்னர் அவற்றை மாற்றுவது அவசியம். ஆனால், கார்ட்ரிட்ஜ் மாற்றம் என்பது அதன் விலை மற்றும் மாற்றுவதற்கான தொழில்நுட்ப வசதிகள் என்ற நிலையில் அனைவராலும் அதை செய்ய இயலுவதில்லை. இந்த நிலையில்தான் கார்ட்ரிட்ஜ் ரீஃபில்லிங் என்ற தொழில் பிரிவு அளிக்கும் சேவைகள் அனைத்து தரப்பு மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் பெரும் உதவியாக அமைந்திருக்கின்றன.
சுயமாக தொழில் செய்ய விரும்பும் தொழில் முனைவோர்களுக்கு எளிதாகவும், உடனடியாகவும் வர்த்தக வாய்ப்பை அளிக்கக் கூடிய தொழில் பிரிவு இதுவாகும். ஏனென்றால், பெருநகரங்கள் அல்லது நகர்புறங்களில் உள்ள தனி நபர்கள் சுலபமாக தாங்கள் வசிக்கும் இடங்களில் இருந்து இந்த தொழில் பிரிவை தொடங்கி செயல்படுத்த முடியும். சிறிய அளவில் ஆரம்பித்து, சிறப்பான சேவைகளை அளிக்கக்கூடிய தனிநபர்கள் தொடர்ச்சியான வாய்ப்புகளை பெறக்கூடிய நவீன துறையாக இந்த தொழில் அமைந்துள்ளது என்று குறிப்பிடலாம். இந்த வகையில் காலப்போக்கில் நல்ல அனுபவமும், வாடிக்கையாளர்கள் உடைய தொடர்பும் பெற்றுள்ள தனிநபர்கள் பிரபலமான நிறுவனங்களின் பிரான்சைஸி என்ற தொழில் வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு முன்னேற்றம் பெற இயலும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏற்றது
கார்ட்ரிட்ஜ் ரீஃபில்லிங் என்ற தொழில் பிரிவானது இன்றைய சூழலில் முக்கியத்துவம் பெறுவதற்கான காரணம் சுற்றுச்சூழல் மாசு என்ற ஒரே விஷயம் அடிப்படையாக அமைந்துள்ளது. ஏனென்றால் குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில் பிரின்ட் செய்த பின்னர் சம்பந்தப்பட்ட கார்ட்ரிட்ஜ் அதனுடைய பயன்பாட்டு தன்மையை இழந்துவிடுகிறது. அதனை அப்புறப்படுத்திவிட்டு வேறொன்றை பொருத்துவது என்பது கூடுதலான செலவு பிடிக்கும் விஷயமாகும். அதுமட்டுமல்லாமல், பிளாஸ்டிக் மற்றும் பல்வேறு ரசாயனங்கள் அடங்கிய கார்ட்ரிட்ஜ் என்பது சுற்றுச்சூழலை பாதிக்கும் அம்சங்கள் கொண்டதாக வல்லுநர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதை தடுக்கும் வகையில் கார்ட்ரிட்ஜ் ரீஃபில்லிங் என்ற மாற்று சாத்தியக்கூறு ஏற்படுத்தப்பட்டது. அதனால் செலவு பாதிக்குப் பாதியாக குறையும் என்பதுடன், சுற்றுச்சூழலுக்கான பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது. அதனால்தான், பிரிண்டிங் இயந்திரத்தை பயன்படுத்தக்கூடிய சுமார் 60 சதவீதம் தனி மனிதர்கள் முதல் பெரு நிறுவனங்கள் வரை, செலவு சிக்கனம் என்ற வகையில் கார்ட்ரிட்ஜ் ரீஃபில்லிங் முறையை கடைபிடிப்பதாக தெரியவந்துள்ளது.
தற்போதைய தொழில்நுட்ப உலகில் பிரின்டிங் தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு கார்ட்ரிட்ஜ் வகைகள் சந்தையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவை பல்வேறு அளவுகள் மற்றும் அவற்றிற்கான ரீஃபில் செய்வதற்கான தொழில்நுட்ப வழிமுறைகள், அவை செயல்படும் முறைகள் ஆகியவற்றில் பல நுட்பமான வித்தியாசங்கள் இருப்பதால், ஒரு ஆரம்பகட்ட தொழில் முனைவோர் முதலில் கார்ட்ரிட்ஜ் வகைகள் பற்றியும் அவற்றின் செயல்திறம் பற்றியும் தெளிவான அனுபவ அறிவை பெற்றிருப்பது அவசியம். அதற்கு ஏற்கனவே கார்ட்ரிட்ஜ் ரீஃபில்லிங் தொழிலில் உள்ள ஒருவரிடம் குறிப்பிட்ட காலம் பணிபுரிந்து நடைமுறை தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வது அவசியம். அதுமட்டுமல்லாமல், கால மாற்றத்திற்கு ஏற்ப அவ்வப்பொழுது பிரிண்டிங் துறையில் அறிமுகம் செய்யப்படும் நவீன தொழில்நுட்பங்கள் பற்றியும் கண்டிப்பாக அறிந்து கொள்வது முக்கியம். அவ்வாறு தொழில்நுட்ப அறிவை பெறுவதற்கான வாய்ப்பு இல்லாத தனிநபர்கள் பல்வேறு ஆன்லைன் பாடங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் மூலமாக ஓரளவுக்கு அதன் தொழில்நுட்ப விவரங்களை அறிந்து கொள்ள முடியும். இருப்பினும் நேரடி அனுபவம் என்பது வெற்றிக்கு அழைத்துச் செல்லக் கூடியதாகும்.
தொடக்க நிலைக்கான திட்டங்கள்
கார்ட்ரிட்ஜ் ரீஃபில்லிங் தொழில் பிரிவில் வாடிக்கையாளர்களுக்கு வர்த்தக சேவைகளை அளிக்க விரும்பும் தொழில் முனைவோர்கள் முதலில் எந்த பகுதியில் தொழிலை ஆரம்பிப்பது என்பதை சரியாக முடிவெடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது, சம்பந்தப்பட்ட பகுதியானது தொழில் மற்றும் வர்த்தக ரீதியாக செயல்படும் நிறுவனங்கள் கொண்டதாகவும், தொழில் ரீதியாக கம்ப்யூட்டரை அதிகமாக பயன்படுத்தும் தனிநபர்கள் வசிக்கும் பகுதியாகும் இருக்க வேண்டும். இன்னும் சரியாக குறிப்பிடுவது என்றால் பிரிண்டர்கள் பயன்பாடு அதிகமாக இருக்கக்கூடிய பகுதியில் இந்த தொழிலை எளிதாக தொடங்கி செய்ய முடியும். அவ்வாறு இல்லாவிட்டாலும் கூட, தொழில் முனைவோர் தங்களுடைய சேவை விவரங்களை குறிப்பிட்டு அளிக்கப்படும் விளம்பரங்கள் மூலமாக அணுகக்கூடிய வாடிக்கையாளர்களுடைய இடத்திற்கே சென்றும் சேவைகளை அளிக்கலாம்.
சிறிய அளவில் தொழிலைத் தொடங்கும் தனி நபர்கள் ஆரம்ப கட்டத்தில் குறைவான டர்ன் ஓவர் செய்வார்கள் என்ற நிலையில் தொழில் பதிவு என்பது அவசியமாக இருக்காது. ஆனால், ஒரு நிறுவனமாக அலுவலகம் மற்றும் பணியாளர்கள் மூலம் செயல்படும் நிலையில் நிறுவனத்திற்கான பதிவு உள்ளிட்ட ஜி.எஸ்.டி வரி விதிப்பு எண் மற்றும் உள்ளாட்சி அனுமதி ஆகியவற்றை பெற்றுக்கொள்வது அவசியமானது.
தொழிலுக்கான உபகரணங்கள்
இந்த தொழிலுக்கான ஆரம்ப கட்ட முதலீடு என்பது அதிக செலவு ஏற்படுத்துவதாக இருக்காது. கார்ட்ரிட்ஜ் ரீஃபில்லிங் செய்வதற்கான இஞ்ஜெக்டிங் சிரிஞ்ச், 1/16 அளவுள்ள ஒரு ஹேண்ட் டிரில், க்ளூ கன், அரை அங்குல அளவுள்ள சிறிய ஸ்குரூக்கள், ஒரு அடி நீளமுள்ள ரெஞ்ச் மற்றும் எலெக்ட்ரிகல் டேப் என்ற ஆரம்ப கட்ட முதலீடு மூலமாகவே தொழிலை தொடங்க முடியும். கூடுதலாக, வெவ்வேறு கார்ட்ரிட்ஜ் வகைகளை ஸ்பேர் பார்ட்ஸ் என்ற முறையில் ஸ்டாக் வைத்திருக்க வேண்டும். ஏனென்றால், வாடிக்கையாளர்கள் தேவையை உடனடியாக பூர்த்தி செய்ய முடியும்.
கவனிக்க வேண்டிய மூன்று பிரிவுகள்
தொழில்நுட்ப வளர்ச்சி பெற்ற இன்றைய சூழ்நிலையில் கார்ட்ரிட்ஜ் ரீஃபில்லிங் என்பது மூன்று விதங்களில் உள்ளன. முதலாவது, ஓ.இ.எம் என்று சொல்லப்படக் கூடிய ஒரிஜினல் எக்விப்மெண்ட் மேனுஃபேக்சரர் கார்ட்ரிட்ஜ் வகைகளை வாடிக்கையாளர்களே பில்லிங் செய்துகொள்ளும் முறையாகும். அதற்கு தகுந்தார் போல, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தகுந்த கிட் என்ற உபகரணங்களை அளித்து படிப்படியாக இங்க் ரீஃபில் எவ்வாறு செய்வது என்பதற்கான அச்சிடப்பட்ட தகவல் குறிப்புகளையும் அளித்து விடுகிறார்கள். அவற்றின் அடிப்படையில் வாடிக்கையாளர்களே கவனமாக ரீஃபில்லிங் முறையை கையாள வேண்டும். இந்த முறையானது அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களுக்கும் நிச்சயம் பொருத்தமானதாக இருப்பதில்லை.
கார்ட்ரிட்ஜ் ரீஃபில்லிங் முறையில் இரண்டாவது முறை என்பது குறிப்பிட்ட தயாரிப்பாளரின் கார்ட்ரிட்ஜ் காலியான நிலையில் அதை வாடிக்கையாளரிடம் இருந்து திரும்பப் பெற்று அவற்றை முறையாக சுத்தம் செய்து வெற்றிடமாக ஆக்கிய பின்னர் அதற்குள் தகுந்த இங்க் பில்லிங் செய்யப்பட்டு மறு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்த வகையிலான ரீ-மேனுஃபேக்சர்டு கார்ட்ரிட்ஜ் என்பது மிகுந்த தரக்கட்டுப்பாட்டு விதிகளை அனுசரித்து செய்யப்பட வேண்டும். காரணம் சர்வதேச நிறுவனங்களில் பிரிண்டிங் எந்திரங்கள் சம்பந்தப்பட்ட விஷயமாக இருப்பதால் நல்ல அனுபவம் பெற்றவர்களே இந்த முறையை தொழில் ரீதியாக மேற்கொள்ள இயலும். செலவு சிக்கனம் என்பதால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இந்த முறையை பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.
இந்த தொழில் பிரிவில் உள்ள மூன்றாவது முறையானது சர்வதேச நிறுவனங்களின் பிரிண்டிங் எந்திரங்களுக்கான இங்க் கார்ட்ரிட்ஜ் வகைகளை லோக்கல் மார்க்கெட்டில் சில மாற்றங்களுடன் தயார் செய்வதாகும். இந்த முறையை கடைபிடிப்பது மிகுந்த அனுபவம் தேவையாக இருக்கிறது. ஏனென்றால் சர்வதேச நிறுவனங்கள் உடைய தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தி ரீஃபில்லிங் முறைகளை செய்ய வேண்டியதாக இருக்கும். அதாவது, தெர்மல் அல்லது எலக்ட்ரோ பல்ஸ் போன்ற அட்வான்ஸ் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி ரீபில் செய்ய வேண்டும். பல்வேறு விதமாக உள்ள பிரிண்டிங் இயந்திரங்களுக்கான சரியான அளவு மற்றும் தொழில்நுட்பம் கொண்ட கார்ட்ரிட்ஜ் வகைகளை ஜெனெரிக் முறையில் தயார் செய்வது என்பது பல ஆண்டுகள் அனுபவம் மிக்க தொழில் முனைவோர்கள் மட்டுமே செய்ய முடிந்த விஷயமாகும்.
கார்ட்ரிட்ஜ் ரீஃபில்லிங் என்ற நிலையில் மட்டும் செயல்படாமல் தொழில்நுட்பங்களை நன்றாக அறிந்த தொழில் முனைவோர், தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு பிரிண்டிங் மிஷின் சர்வீஸ் என்ற வகையிலும் சேவைகளை அளிக்க வேண்டும். அதன்மூலம் தங்களுக்கான வர்த்தக வாய்ப்புகளை சுலபமாக விரிவுபடுத்திக் கொள்ள முடியும். மேலும், பிரிண்டிங் மற்றும் அதற்கான இயந்திரங்கள் பற்றிய தொழில்நுட்ப தகவல்கள் அல்லது புதியவற்றை வாங்குவதற்கான ஆலோசனை ஆகிய நிலைகளிலும் வாடிக்கையாளருக்கு சேவைகளை அளித்து வருவது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
பிரான்சைஸி வாய்ப்புகள்
இந்த தொழிலில் முன் அனுபவம் இல்லாத தனி நபர்களும் பிரான்சைஸி முறையில் தொழிலில் இறங்கி வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை அளித்து வரலாம். அதற்காக சந்தையில் முன்னணியில் உள்ள கார்ட்ரிட்ஜ் ரீஃபில்லிங் நிறுவனங்கள் வாய்ப்புகளை அளித்து வருகின்றன. இந்த முறையில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பங்குதாரர்களாகவோ, சோல் டிரேடர்ஸ் ஆகவோ அல்லது காலை முதல் மாலை வரை பணியாற்றக் கூடியவர்களாகவோ நபர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
அவ்வாறு தேர்வு பெற்றவர்களுக்கு, கார்ட்ரிட்ஜ் ரீஃபில்லிங், சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங், அக்கவுண்ட்ஸ், பாயிண்ட் ஆப் சேல்ஸ் அண்ட் ப்ராடக்ட் ட்ரெய்னிங் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்த வகையில் பயிற்சிகளை பெற்ற தனி நபர்கள் தொழில் முனைவோராக தங்களுடைய சேவையை அளிக்கும் வகையில் அவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்கிறார்கள். அந்த ஒப்பந்தத்தில் பிரான்சைஸி ஸ்டோர் செலக்சன், அதற்கான லே-அவுட் டிசைன், தேவையான விளம்பரங்கள், உள் கட்டமைப்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்பு அளிக்கப்படுகிறது. அத்துடன் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கார்ட்ரிட்ஜ் வகைகளை பயன்படுத்துவதற்கான உரிமம், சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தொழில்நுட்ப பயிற்சி, தகுந்த விளம்பரங்கள், அலுவலக நடைமுறை மற்றும் வரவு செலவு உள்ளிட்டவற்றில் பயிற்சி ஆகிய ஒத்துழைப்புகள் அளிக்கப்படும். ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கு இது நல்ல வாய்ப்பு என்பது நிதர்சனம்.