என்னென்ன வகை தீப விளக்குகள் இருக்கின்றன? தீபாவளி பண்டிகைக்கு தீப விளக்கு விற்பனை தொழிலை செய்வது எப்படி?
தீபாவளி பண்டிகை என்றால் என்ன
தீபாவளி என்பது இந்துக்களின் பண்டிகையாக இருந்தாலும் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் மொழி, மத, இன பாகுபாடின்றிகொண்டாடக் கூடிய ஒரு முக்கிய பண்டிகையாக இருக்கின்றது. தீபாவளியில் மக்கள் புதிதான ஆடைகளை அணிந்து, வீட்டில் சமைக்கப்பட்ட விதவிதமான பலகாரம் மற்றும் இனிப்புகளை சுவைத்து, வீட்டில் உள்ள குழந்தைகள் பல்வேறு விதமான பட்டாசுகளை வெடித்து, இரவு நேரத்தில் பல வகையான ஒளி விளக்குகளை வீட்டைச் சுற்றி வரிசையாக அமைத்து மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். தீபாவளி உருவானதற்கு பல்வேறுவிதமான புராணக் காரிய காரணங்கள் இருந்தாலும் தீபாவளி என்ற பெயர் காரணத்திற்கு அர்த்தத்தை நாம் உற்று நோக்கினால், தீபம் என்ற சொல்லுக்கான அர்த்தம் ஒளி விளக்கு, அவளி என்ற சொல்லுக்கு அர்த்தம் வரிசையாக அமைப்பது என்ற உட்பொருள் இருப்பது நமக்கு தெரிய வருகிறது. இந்த பெயர் காரணத்தின் மூலம் தீப ஒளி விளக்குகளுக்கும் தீபாவளி பண்டிகைக்கும் உள்ள ஒற்றுமை நமக்கு புரிந்து கொள்ள முடிகிறது.
தீபாவளி பண்டிகை மூலமாக நடக்கக்கூடிய வர்த்தகங்கள்
தீபாவளி பண்டிகையின் போது இந்தியாவில் உள்ள பெரும்பாலான அலுவலகங்களில் மற்றும் தொழில் நிறுவனங்களில் ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் வழக்கம் இருக்கிறது. இந்த ஊக்கத்தொகை மூலமாக அந்தந்த நிறுவன ஊழியர்கள் தங்களது தீபாவளி பண்டிகையை தங்களது குடும்பத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்கள். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தியாவில் உள்ள அனைத்து விதமான பொருள்களுக்கும் சிறப்பு சலுகைகளை அளித்து விற்பனை செய்வதில் முனைப்பு காட்டுவதற்கு மக்களிடம் ஊக்கத் தொகையாக பெறப்பட்ட பணத்தை குறி வைத்துதான். சூப்பர் மார்க்கெட்டில் விற்கப்படும் மளிகை பொருட்கள் முதல், தொலைபேசி தொலைக்காட்சி போன்ற அனைத்து எலக்ட்ரானிக் பொருள்கள் உட்பட, பெரிய ஷோரூம்களில் விற்கப்படும் கார் வரையிலான அனைத்து பொருள்களுக்கும் தீபாவளி சிறப்பு சலுகைகள் வழங்குவதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்.
தங்களது பொருளாதார நிலவரத்தின்படி மக்கள் மற்ற பொருட்களை வாங்காவிட்டாலும் தீபாவளி பண்டிகைக்கு நான்கு பொருளை அனைத்து மக்களும் வாங்குவார்கள். அனைத்து தரப்பு மக்களும் வாங்கக்கூடிய அந்த நான்கு பொருள்கள் என்னவென்றால் புத்தாடை, பட்டாசு, இனிப்புகள், மற்றும் தீப ஒளி விளக்குகள். இந்த நான்கு பொருள்கள் விற்பனை செய்யக்கூடிய தொழில் நிறுவனங்களின் விற்பனை விகிதம் மற்ற நாட்களை விட தீபாவளி பண்டிகை நாட்களில் பல அதிகமாக இருக்கும். மற்ற நேரங்களில் இல்லாமல் தீபாவளி பண்டிகைக்கான நேரங்களில் மட்டும் இந்த நான்கு பொருள்களின் விற்பனை தொழிலை செய்யக் கூடியவர்களும் இருக்கிறார்கள். இந்த வருடத்திற்கான தீபாவளி பண்டிகை ஏற்பாடுகள் தொடங்கி விட்டது என்பதற்கான அடையாளமாக ஆங்காங்கே புதிதாக உருவாகி வரும் பட்டாசு கடைகளும், தொலைக்காட்சியில் வெளிவரக்கூடிய புதிய தீபாவளி விற்பனை விளம்பரங்களும், வீட்டில் உள்ள பெண்களின் தீபாவளி பலகார பட்டியலும் நமக்கு நினைவூட்டுகின்றன.
இந்தக் கட்டுரையில் நாம் தீபாவளி ஒளி விளக்குகளின் முக்கியத்துவம், தீப ஒளி விளக்குகளின் வகைகள் மற்றும் அதன் விற்பனை முறைகள் பற்றிய விவரங்களையும் தெளிவாக காண்போம்.
தீபம் என்றால் என்ன?
வீட்டில் உள்ள பூஜை அறைகளில் பயன்படுத்துவதாகவும் தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் வீட்டை அலங்கரிக்க பயன்படுத்துவதற்காக மண்ணால் செய்யப்பட்ட ஒரு சிறிய விளக்கை நாம் தீபம் என்று குறிப்பிடுகிறோம். இதில் எண்ணெய் அல்லது நெய்யை எரிபொருளாக பயன்படுத்தி பஞ்சினால் செய்யப்பட்ட திரியிட்டு விளக்கேற்றி வழிபடுவது நம் பாரம்பரிய வழக்கம். வண்ணம், வடிவம், விலை, பயன்பாடு, மூலப்பொருள், தயாரிப்பு முறை போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு வகையான தீபம் இருக்கின்றன.
தீபாவளி பண்டிகையில் தீப ஒளி விளக்குகளின் முக்கியத்துவம்
ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதத்தின் கணக்கின்படி உள்ள ஐப்பசி மாதத்தில் அமாவாசை நாளன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும். ஒரு சில குறிப்பிட்ட வருடங்களில் புரட்டாசி மாதத்தில் உள்ள அமாவாசை அன்று தீபாவளி பண்டிகை வரும் என்பது நாம் அனைவரும் அறிந்தது. இன்றைய காலகட்டத்தில் மின்சார வசதி பெரும்பாலான மக்களை சேர்ந்து அடைந்து விட்டாலும், பாரம்பரிய முறையையும் அன்றைய காலகட்டத்தின் நடைமுறை சூழ்நிலையும் தெரிந்தவர்களுக்கு அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் முழு இயற்கையை உணர்ந்தவர்களாக இருப்பார்கள். அமாவாசை நாளன்று எவ்வளவு இருள் சூழ்ந்து இருந்தாலும் நமது ஒளி விளக்கை கொண்டு இருளை விரட்டி அடித்து பிரகாசிக்க செய்யும் வகையில் பல்வேறு விதமான ஒளி விளக்குகளை வீட்டின் அனைத்து இடங்களிலும் பயன்படுத்தி வண்ணமயமாக தீபாவளியை கொண்டாடுவார்கள்.
தீபாவளி நாளன்று பல்வேறு விளக்குகளை பயன்படுத்தி அலங்காரமாக செய்து முழு வீட்டையும் பிரகாசிக்க செய்து மகிழ்ச்சியான மனநிலையை உருவாக்கி உற்சாகமாக கொண்டாட கூடியவர்கள் இன்றும் அதிகமாக இருக்கிறார்கள். இன்றைய மின்சார காலகட்டத்தில் நம் வீட்டை பிரகாசிக்க பல வண்ணமயமான மின்சார விளக்குகளை பயன்படுத்தினாலும் பாரம்பரிய முறைப்படி உள்ள தீப ஒளி விளக்குகளை பயன்படுத்தி வீட்டை பிரகாசிக்க செய்யும் போது மட்டுமே அந்த பண்டிகைக்கான முழு மனநிறைவை பெறமுடியும். தீபாவளி பண்டிகையின் பெயர் காரணத்தின் மூலமாகவும் பழங்கால மக்களின் வாழ்க்கை முறையை நாம் புரிந்து கொள்வதன் மூலமாகவும் தீப ஒளி விளக்குகளுக்கு உள்ள சிறப்பு என்ன என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியும்.
தீபங்களின் வகைகள்
தீபாவளியில் மற்றும் இதர பூஜை நேரங்களில் பயன்படுத்தக்கூடிய தீப ஒளி விளக்குகளின் சில வகைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
- யானை விளக்கு
- பஞ்சமுக விளக்கு
- பாவை விளக்கு
- தேங்காய் விளக்கு
- பீங்கான் விளக்கு
- மண் சட்டி விளக்கு
- குத்து விளக்கு
- பிரபை குத்து விளக்கு
- மலபார் விளக்கு
- பஞ்சலிங்க தீபம்
- தண்ணீரில் மிதக்கும் விளக்கு
- ஸ்டோன் விளக்கு
- பாலாடை விளக்கு
- விநாயகர், லட்சுமி, பாலாஜி விளக்குகள்
- தொங்கு விளக்குகள்
- தூண்டாமணி விளக்கு
- வாசமாலை விளக்கு
- பித்தளை அகல் விளக்கு
- வண்ணம் பூசப்பட்ட டெரக்கோட்டா அகல் விளக்கு
- செல்வம் தரும் குபேர விளக்கு
- நந்தா தீபம்
- கல்வி தரும் வித்யா தீபம்
- காமாட்சி விளக்கு, அஷ்டலட்சுமி விளக்கு
- 108 அஷ்டோத்ர தீபம், ஐந்தடுக்கு, ஏழடுக்கு விளக்குகள்
தீப ஒளி விளக்குகள் விற்பனை செய்யும் வழிமுறைகள்
தீப விளக்குகள் பற்றிய சரியான பயிற்சி மற்றும் அனுபவம் பெற வேண்டும்
நீங்கள் எந்த ஒரு தொழிலை செய்ய விரும்பினாலும் நீங்கள் சந்தையில் விற்கக்கூடிய பொருளை பற்றிய முழுப் புரிதலும் இருத்தல் அவசியம். உங்களுக்கு விளக்குகள் தயாரிப்பு முறை, என்ன மூலப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது போன்றவற்றின் முழு தகவலும் தெரிந்தால் மட்டுமே உங்களது வாடிக்கையாளருக்கு சரியான தகவலை சொல்லி அதற்கேற்ற விலையை நிர்ணயிக்க முடியும். ஆகவே நீங்கள் இந்த விலைக்கு விற்பனை செய்யும் தொழிலை புதிதாக தொடங்க விரும்புவோர் ஆக இருப்பின், விளக்குகள் தயாரிப்பைப் பற்றிய பயிற்சி பெறுவதற்கு நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ முயற்சி செய்ய வேண்டும்.
விளக்கு உற்பத்தியாளர்களை கண்டறிய வேண்டும்
தீபங்கள் தயாரிப்பதில் திறமையான மற்றும் அத்தகைய வணிகத்தில் சில அனுபவங்களைக் கொண்ட மிகச்சிறந்த உற்பத்தியாளர்களின் உதவியைப் பெற்று அவர்களது தயாரிப்பை நீங்கள் சந்தையில் விற்க முயற்சிக்க வேண்டும். உங்களுக்கு தேவையான வடிவமைப்புகளை கொண்ட தீபங்களை அவர்களது அனுபவத்தின் மூலம் தயார் செய்து கொடுக்கும் பொழுது உங்களுக்கு நல்ல தரமான தீபங்கள் கிடைக்கப்பெறும். தீபங்கள் தயாரித்து விற்கும் தொழிலை நல்ல அனுபவமுள்ள நபர்களுடன் கூட்டுச்சேர்ந்து செய்வதன் மூலம் முக்கியமான முடிவுகளை எடுக்க ஏதுவாக இருக்கும்.
வணிக திட்டத்தை வடிவமைக்க வேண்டும்
மற்ற தொழிலைப் போலவே உங்களது தீபங்கள் விற்பனை செய்யும் தொழிலை வெற்றிகரமாக நடத்துவதற்கு முறையான வணிகத் திட்டத்தை உருவாக்குவது முக்கியம். சந்தையில் எந்த மாதிரியான விளக்குகளுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் உங்களது வணிக திட்டத்தை உருவாக்கி விற்பனை செய்வதன் மூலம் அதிக வருவாய் எட்ட முடியும். தொழிலில் ஏற்படக்கூடிய ஏற்றத்தாழ்வுகளை சமாளித்து பணப்புழக்கம் குறையாத படி உங்களது பட்ஜெட்டை வடிவமைத்தல் வேண்டும்.
தொழில் கடன் வசதி பற்றி அறிந்து கொள்ளவும்
அரசாங்கம் மிகவும் வசதியான கடன் வசதியை சிறு தொழில் தொடங்க உள்ள இளைஞர்களுக்கு வழங்கி வருகின்றன. இப்போதெல்லாம் பல தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து நீங்கள் எளிதாக உங்கள் தொழில் தொடங்குவதற்கு கடன் பெறுவதற்கான பல திட்டங்கள் உள்ளன. பிரதான வங்கிகளில் நேரடி தொழில் கடன் சலுகை கிடைக்கப் பெறாவிட்டாலும் பிரதம மந்திரியின் முத்ரா திட்டத்தில் கடன்தொகை பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
பாரம்பரிய தீபாவளி கொண்டாட்ட முறை மற்றும் தீபங்களின் நன்மையை மக்களுக்கு புரிய செய்யவேண்டும்
தீபாவளி பண்டிகை காலத்தில் தீப ஒளி விளக்குகளை முக்கியத்துவமாக பயன்படுத்துவதற்கு காரணம் என்னவென்றால் தீப ஒளி விளக்குகளினால் இயற்கை சுற்றுப்புற சூழலுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. மின்சார விளக்கு அதற்குப் பயன்படுத்தப்படும் மின்சாரம் தயாரிப்பதற்கு நம் அணுஉலை கழிவுகளால் ஏற்படும் பேராபத்துகளை மக்களிடம் உணர்த்தி, இதை தவிர்க்க கூடிய ஒரு சிறிய முயற்சியாக தீப ஒளி விளக்குகளை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். அதுமட்டுமல்லாது தீபாவளிப் பண்டிகையை இத்தகைய சிறு தீப ஒளி விளக்குகளை பயன்படுத்தி கொண்டாடுவதன் மூலம் இத்தகைய விளக்குகளை தயாரித்து விற்பனை செய்யும் உங்களை போன்று இருக்கும் பல்வேறு குடும்பங்களின் நிலையை மக்களுக்கு புரிய செய்ய வேண்டும்.
சிறந்த விற்பனைக்கான விளம்பர உத்திகளை மேற்கொள்ள வேண்டும்
நீங்கள் செய்யும் தொழிலின் வெற்றி, உங்கள் பொருள் சந்தையில் எந்த அளவுக்கு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறது என்பதையும் உங்களது பொருளை வாங்குவதற்கு மக்களிடம் எத்தகைய ஆர்வத்தை காட்டுகிறார்கள் என்பதையும் பொறுத்து அமைகிறது. இத்தகைய விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் தூண்டுவதற்கு மிகவும் எளிதான வழியாக இன்றைய ஆன்லைன் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் திட்டங்கள் உருவாகியுள்ளன. அமேசான் ஃப்ளிப்கார்ட் போன்ற வலைதளங்கள் மூலமாகவும், சொந்தமான இ-காமர்ஸ் வலை தளம் மூலமாகவும், பேஸ்புக் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாகவும் உங்களது தீப ஒளி விளக்குகளை விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது. இது மட்டுமல்லாது நகரத்தில் உள்ள மிக முக்கியமான வணிக வளாகங்களில் உங்களது விளக்குகளை மொத்தமாக விற்பனை செய்வதன் மூலமாகவும் உங்களது தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும்.