ஆன்லைன் டிராப்ஷிப்பிங் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி
இணையவழி தொழில் முனைவோரின் முக்கிய மற்றும் எளிதான வணிகமாக உலகமெங்கும் திகழ்வது டிராப்ஷிப்பிங் தொழிலாகும். நம் பாரம்பரிய வணிகத்தில் இடைத்தரகர்கள் ஒரு இடத்தில் உள்ள பொருட்கள் விவரங்களை அறிந்து கொண்டு, அந்தப் பொருள் தேவைப்படுபவர்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று கண்டறிந்து அவர்களுக்கு ஏற்ற வகையில் விற்பனை செய்து அதன் விலையில் சிறிது ஏற்ற இறக்கங்கள் செய்து தங்களது லாபத்தை நிர்ணயித்து கொள்வார்கள். இதேபோன்றதொரு இடைத்தரகர்கள் வணிகத்தை நீங்கள் ஆன்லைன் மூலமாக உற்பத்தியாளர்களுக்கும் இறுதி பயனாளிகளுக்கும் இடையே இருந்து வணிகம் செய்யும் முறையே டிராப்ஷிப்பிங் என்று அழைக்கப்படுகிறது. மற்ற இணைய வழி வணிகங்களை ஒப்பிடுகையில் டிராப்ஷிப்பிங் வணிகம் மிகவும் எளிமையானதாகவும் குறைந்த முதலீடு உள்ளதாகவும் குறைந்த ஆபத்து உள்ளதாகவும் திகழ்கிறது.
ஆன்லைன் டிராப்ஷிப்பிங் வணிகத்தின் நடைமுறைகள்
சாதாரணமாக வணிகத்தில், பொருளை விற்க வேண்டும் என்றால் அந்த பொருளை அதிகப்படியான அளவில் பணம் செலுத்தி வாங்குவதோடு மட்டும் அல்லாமல் அதை வைத்துக்கொள்ள ஒரு நல்ல தரமான கிடங்கு ஒன்றை தயார் செய்து வைக்க வேண்டும். இவ்வாறு பொருள் வாங்குவது மற்றும் கிடங்கு தயார் செய்வது தொகையை நீங்கள் கணக்கிட்டால் மிகப் பெரிய அளவு பணம் முதலீடாக எடுத்துவைக்க வேண்டியது இருக்கும். ஆனால் டிராப்ஷிப்பிங் முறையில் ஆன்லைனில் வேறொருவரின் தயாரிப்புகளை அனுப்புவதன் அனுப்புவதன் மூலம் பல்வேறு வகையான நன்மைகள் கிடைக்கின்றன. டிராப்ஷிப்பிங் முறை என்பது மொத்த விற்பனையாளர்கள் அல்லது மிகப்பெரிய விநியோகஸ்தர்களிடம் இருந்து பொருட்களை பெற்று அது தேவைப்படுபவர்களுக்கு உங்கள் மூலமாக விற்பனை செய்வீர்கள். உங்களிடம் பொருட்கள் வாங்குபவர்கள் நீங்கள்தான் அந்த பொருளை விற்கிறீர்கள் என்றும் உங்களிடம் இருந்துதான் அந்தப் பொருள் வருகிறது என்று நினைப்பார்கள். இவ்வாறு பெரிய விநியோகஸ்தர்கள் சிலர் தங்களது பெயரை முன்னிறுத்தாமல் விற்பனை செய்ய சம்மதிப்பது இல்லை என்றாலும் பெரும்பாலனவர்கள் இத்தகைய தொழிலுக்கு ஆதரவு தந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
பொருட்களை உற்பத்தி மற்றும் கையிருப்பு வைத்துக்கொள்ள வேண்டியது பற்றியான மிகப்பெரிய கவலை உங்களுக்கு இல்லை என்றாலும் அதற்கு ஈடான பொறுப்பு உங்களுக்கு உள்ளது என்னவென்றால், அந்த பொருளை சிறந்த முறையில் சந்தைப்படுத்தி அதிகப்படியான வாடிக்கையாளர்களை பெறுவது ஆகும். உங்களது வாடிக்கையாளர்களை தனி இணையதளம் உருவாக்குவதன் மூலமாகவோ, அமேசான், அலிஎக்ஸ்பிரஸ் போன்ற வலைதளங்களில் ஸ்டோர் உருவாக்குவதன் மூலமாகவோ, வாடிக்கையாளர்கள் குறிவைத்த இமெயில்கள் அல்லது எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலமாகவோ, சமூக வலைத்தளங்கள் மூலமாகவோ பெற வேண்டும். நீங்கள் விற்பனை செய்யப் போகும் பொருளின் அனைத்து விதமான தகவல்களையும் அதன் சிறப்பம்சங்களையும் தெரிவித்து வாடிக்கையாளர்களை கவர்ந்து உங்களிடம் அந்தப் பொருளை வாங்கும் வகையில் சந்தைப்படுத்தும் முழுப்பொறுப்பும் உங்களிடம் இருக்கும்.
வாடிக்கையாளர்களின் சந்தேகங்கள் மற்றும் கோரிக்கைகளை நீங்கள் முன்னிலையில் நின்று தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு வாடிக்கையாளர்களை கையாளுவது அனைத்துவிதமான வணிகர்களும் செய்யக்கூடியது என்பதால் மிகப்பெரிய வித்தியாசம் இது இல்லை. டிராப்ஷிப்பிங் தொழிலில் உள்ள வித்தியாசம் என்னவென்றால் வாடிக்கையாளர்களை நீங்கள் கவர்ந்து ஆர்டரை பெற்ற பின்பு நீங்கள் சார்ந்துள்ள பெரிய விநியோகஸ்தர்களிடம் இந்த ஆர்டர் பற்றிய தகவல்களை அனுப்பி வைக்க வேண்டும். இந்த வகையான தகவல் பரிமாற்றத்திற்கு ஈமெயில் அல்லது இதர முறைகளில் பரிமாறிக்கொள்ளலாம். உங்களது விநியோகஸ்தர்கள் உங்களிடம் இருந்து வந்த பல்வேறு வகையான ஆர்டர்களுக்கு அவர்களாகவே பேக்கிங் செய்து வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக அனுப்பி விடுவார்கள். வாடிக்கையாளர்கள் பொருத்தவரை அந்த பொருள் தங்களிடம் இருந்துதான் வந்தது என்று கருதி உங்களது தொழில் பற்றி நன்மதிப்பைப் பெற்று பலருக்கும் சிபாரிசு செய்வார்கள்
நன்மைகள்
- குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய தொழில்
- சேமிப்புக் கிடங்கு தேவையில்லாததால் தேர்ந்தெடுக்கும் எந்த ஊரில் வேண்டுமானாலும் செய்ய முடியும்
- பல்வேறுவிதமான விற்பனைப் பொருட்கள் பொருளை காலத்திற்கு ஏற்ற வகையில் விற்பனை செய்ய முடியும்
- விற்பனை செய்யும் பொருளை உங்களிடம் இருப்பு வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை
- பொதுவான வணிகம் அல்லது கடை நேரத்தை கடைப்பிடிக்கத் தேவையில்லை
- அதிகப்படியான பணியாளர்களை வேலைக்கு அமர்த்த தேவையில்லை
- விற்பனை பொருளை நீங்களே பார்சல் செய்து அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை
தீமைகள்
- அனைத்து நிறுவனங்களும் டிராப்ஷிப் முறையில் விற்பனை செய்ய அனுமதிப்பதில்லை
- அதிகப்படியான டிராப்ஷிப் சிறப்பு கட்டணத்தால் உங்களுக்கு வரவேண்டிய லாபத்தின் அளவு குறைவு
- பொருட்கள் கையிருப்பில் குளறுபடி ஏற்பட நேரிடும்
- விற்பனை பொருளை சரியான நேரத்தில் அனுப்புவதில் சிரமம் ஏற்பட நேரிடும்
டிராப் ஷிப்பிங் வணிகத்தை செய்வதற்கான வழிமுறைகள்
உலகத்தில் உள்ள மொத்த ஆன்லைன் விற்பனையாளர்களில் தோராயமாக 20 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் விற்பனையாளர்கள் டிராப்ஷிப்பிங் முறையையே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலான வணிக நிறுவனங்கள் டிராப்ஷிப் முறையை பயன்படுத்தி மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளதால் நீங்கள் இந்த தொழிலை எந்தவித தயக்கமும் இன்றி ஆரம்பிக்கலாம். அமேசான் போன்ற பெரிய நிறுவனங்களும் இந்த டிராப்ஷிப்பிங் முறையை கையாண்டு மிகப் பெரிய லாபம் ஈட்டி வருவதே இந்த தொழிலுக்கான மிகச்சிறந்த வெற்றி அடையாளமாக நாம் கருதிக் கொள்ள வேண்டும். எந்த வகையான பொருட்களை ஆன்லைனில் டிராப்ஷிப்பிங் முறையில் விற்பனை செய்யலாம் என்று நீங்கள் மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல், அமேசானில் விற்கப்படும் அனைத்து விதமான துறைசார்ந்த பொருட்களையும் நீங்களும் விற்க முடியும்.
உங்களது விநியோகஸ்தர்கள் இவ்வாறாக அவர்களது பெயரை முன்னிலைப்படுத்தாமல் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை அனுப்புவதற்கு என்ற தனி கட்டணம் மற்றும் பொருளுக்கான கட்டணம் உங்களிடம் இருந்து வசூலித்து கொள்வார்கள். இது நீங்கள் விற்பனை செய்யும் பொருட்கள் மற்றும் உங்களது விநியோகஸ்தர்கள் இருக்கும் நாடு மற்றும் வரி விதிப்பு போன்ற பல்வேறு தகவல்களை பொறுத்து மாறுபடும். பொருட்களுக்கான விற்பனை தொகை மற்றும் ட்ராப் ஷிப்பிங் கட்டணம் இவை அனைத்தையும் சேர்த்து வைத்தே நீங்கள் விற்கும் பொருட்களின் விலையை நிர்ணயிக்கும் சூழ்நிலை உள்ளதால் அதிகப்படியான லாபத்தை அந்தப் பொருளின் மீது திணிக்க முடியாது. அதிகப்படியான லாபம் ஒவ்வொரு விற்பனையிலும் இல்லாமல் இருந்தாலும் சந்தைப்படுத்துதல் மட்டுமே உங்களது மிகப்பெரிய நோக்கமாக இருப்பதால் அதிகப்படியான பொருட்களை விற்பனை செய்து அதிகப்படியான லாபத்தை அடைவதற்கான வழி உண்டு.
பொருட்களை பார்சல் செய்வது அதை தகுந்த வாடிக்கையாளருக்கு கொடுப்பது போன்ற வேலைகள் உங்களை சார்ந்து இல்லாமல் இருப்பதால் சந்தைப்படுத்துதல் நுணுக்கங்களை அறிந்து செயலாற்ற அதிகப்படியான நேரத்தை செலவழிக்க முடியும். உங்களது வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தி அதிகப்படியான பொருட்களை விற்க நேரிடும் போது உங்களது டிராப்ஷிப்ரை அணுகி கட்டணத்தை சிறிது குறைத்துக் கொள்ளும்படி அல்லது இதர சலுகைகள் ஏதாவது பெற்று லாபம் ஈட்டுவதற்கு வழிவகை செய்யலாம். உங்களது விநியோகஸ்தர்களை கலந்து ஆலோசித்து நீங்கள் பெரும் ஆர்டர்களுக்கு உங்களது பெயரையோ அல்லது உங்களது நிறுவனத்தின் பெயரிலோ அனுப்பும் வகையிலும் அல்லது எந்தவித குறியீடு இல்லாமலும் அனுப்ப முடியும். உங்களுக்கு வாடிக்கையாளர்களிடம் ஆர்டர் மற்றும் அதற்குத் தகுந்த பணத்தை பெற்ற பிறகு நீங்கள் பொருட்களை வாங்குவதால் எந்தவித முதலீடும் உங்களுக்கு இல்லை.
என்ன பொருட்களை டிராப்ஷிப்பிங் செய்ய முடியும்?
பாரம்பரிய வணிக முறையாக இருந்தாலும் ஆன்லைன் விற்பனை வணிகமாக இருந்தாலும் மக்களின் அப்போதைய தேவையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையான பொருட்களை விற்பனை செய்யும் வணிகர்களே சிறந்த வெற்றியை அடைவார்கள் என்பதை நாம் கண்கூடாக கண்டிருக்கிறோம். உலக மக்கள் அன்றாட தேவைக்காக வசதியான வாழ்க்கைக்காக பல்வேறு வகையான பொருட்களை வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். குறிப்பிட்ட துறை சார்ந்த பொருட்களை விற்பனை செய்வதில் அல்லது அந்த பொருட்களை சந்தைப்படுத்துவதில் உங்களுக்கு ஆர்வமும் அனுபவமும் இருந்தால் பல்வேறு தரப்பட்ட உத்திகளை கையாண்டு உங்களது வணிக லாபத்தை அதிகரிக்க உதவும். இன்றளவில் அனைத்து விதமான பொருட்கள் டிராப்ஷிப்பிங் முறையில் விற்பனை செய்ய உற்பத்தியாளர்களும் விநியோகஸ்தர்களும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். மின்னணு சாதனங்கள், குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், உடற்பயிற்சி சாதனங்கள், அழகு சாதனங்கள், கலைப்பொருட்கள், புத்தகங்கள் என பல்வேறு தரப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது.
அமேசான், ஃப்ளிப்கார்ட், இ பே போன்ற பெரிய ஆன்லைன் இ-காமர்ஸ் தளங்களில் எந்த வகையான பொருட்கள் அதிகப்படியான விற்பனை அடைகிறது என்பதை தெரிவிக்கக் கூடிய வகையில் இருக்கின்றன. இடங்களைச் சரிபார்க்க ஒரு சிறந்த இடம். பெரும்பாலான மக்கள் தங்களது வணிகத்தைத் ஆரம்பிக்கும் முன் செய்யக்கூடிய தவறு என்னவென்றால், அதிகப்படியான போட்டியாளர்கள் இருக்கும் வணிகத்தைத் தேர்வு செய்த தாங்களும் போட்டி சூழ்நிலை காரணமாக வெற்றியை அடைவது கடினம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் அதிகப்படியான போட்டியாளர்களை இருப்பதற்கு அதிகப்படியான விற்பனைக்கான சாதகங்கள் இருப்பதனால் மட்டுமே என்பதை அவர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். அத்தகைய போட்டி இருப்பதற்கான காரணம் என்னவென்றால் அனைத்து காலகட்டங்களிலும் அந்த பொருட்களுக்கான தேவை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும் என்பதனால் மட்டுமே பெரும்பாலான வணிகர்கள் அந்த தொழிலை தேர்வு செய்கிறார்கள். விடுமுறை காலங்கள் அல்லது பண்டிகைக் காலங்களில் அதற்கு ஏற்ற வகையான பொருட்களை தேர்வு செய்து அந்த பொருட்களை விற்பனை செய்வதன் மூலமும் மிகப்பெரிய வெற்றியை அடைய முடியும்.
டிராப் ஷிப்பரைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
டிராப் ஷிப்பரைத் தேர்ந்தெடுத்து அவர்களுடன் நீங்கள் பணியாற்றத் தொடங்குவதற்கு முன், வாடிக்கையாளரின் பார்வையில் இருந்து சிந்தித்து உங்களது வாடிக்கையாளர்களின் தேவை சரியான அளவில் பூர்த்தி செய்ய முடியுமா என்ற ஆலோசனைக்கு பிறகே அடுத்த கட்டத்திற்குப் போக வேண்டும். நீங்கள் அவர்களுக்கு எந்த வகையான முறையில் ஆர்டர்களை அனுப்புவது, அவர்கள் ஆர்டர் பெற்றுக்கொண்ட பிறகு எத்தனை நாட்களில் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு சேர்க்க முடியும், அவர்களது கட்டணம் எவ்வளவு போன்ற தகவல்களை சேகரித்து சிறந்த டிராப்ஷிப்பரை தேர்ந்தெடுத்து தொழில் தொடங்க வேண்டும். உங்களது வாடிக்கையாளர்களிடம் நீங்கள் ஆர்டர் பெற்று பணத்தை வாங்கிய பிறகு உங்களுக்கு ட்ராப் ஷிப்பிங் செய்பவரிடம் அந்தப் பொருள் இல்லை என்றால் வாடிக்கையாளர்களிடம் உங்களுக்கு மன கஷ்டம் ஏற்பட்டு தொழில் விருத்தி அடைவதில் தடுமாற்றம் ஏற்படலாம். இத்தகைய இன்னல்களை தவிர்க்க உங்களுக்கு டிராப்ஷிப்பிங் செய்பவரை தகுந்த நேரத்தில் பொருட்களின் கையிருப்பு பற்றிய தகவல்களை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ள வேண்டும். உங்களது வாடிக்கையாளர்களுக்கு சென்றடையும் பொருட்களை நீங்கள் பார்க்காத காரணத்தினால் பொருட்களின் தரத்தில் எந்த வித குறைபாடும் இல்லாதவாறு முன்னேற்பாடு செய்து கொள்ள வேண்டும். டிராப்ஷிப்பிங் நிறுவனங்களைக் கண்டுபிடிக்க உங்களது விற்பனை பொருளின் பெயருடன் “டிராப் ஷிப்பர்” என்றகுறியீட்டை இணைத்து கூகுளில் தேடுவதன் மூலம் பல்வேறுவிதமான நிறுவனங்களின் தகவல்களைப் பெற முடியும்.
டிராப் ஷிப்பிங் கூட்டாளரிடம் கேட்க வேண்டிய முக்கிய கேள்விகள்
- உங்களது வாடிக்கையாளர்களிடம் நீங்கள் ஆர்டரை பெற்று அவர்களுக்கு தகவல்களை அனுப்பிய பின் உங்களது வாடிக்கையாளர்களிடம் சென்று சேர்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?
- வெளிநாடு மற்றும் சர்வதேச அளவில் நீங்கள் பொருட்களை அனுப்ப வேண்டுமென்றால் அவரிடம் அந்த பொருட்களை அனுப்ப முடியுமா?
- அவர்கள் அனுப்பும் பொருட்களின் தரத்திற்கு எவ்வித உத்திர வாதங்களை அளிக்கிறார்கள்?
- வாடிக்கையாளர்களின் திருப்தி அளிக்காத பொருட்கள் மீது ஏற்படும் இழப்பிற்கான பொறுப்பு யார் ஏற்பது?
- ஒருவேளை அவர்களிடம் பொருள்கள் கையிருப்பு இல்லையென்றால் என்ன மாதிரியான உதவிகள் உங்களுக்கு செய்வார்கள்?
இத்தகைய கேள்விகளை உங்களது டிராப்ஷிப்பர் இடம் கேட்டு உங்களுக்கு சாதகமான பதில்கள் வருகிறதா என்பதை தெரிந்து அதற்கேற்ற வகையில் அவர்கள் நடப்பார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு இறங்கினால் வெற்றி நிச்சயம்.