டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜென்ஸி தொடங்கி நடத்துவதற்கான வழிகாட்டு நெறிகள்
அன்றாட வாழ்க்கையில் கிட்டத்தட்ட அனைவருமே பல்வேறு விஷயங்களுக்காக இணையதளத்தை பயன்படுத்தி வருகிறோம். இந்திய அளவில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு தனிநபரும் சராசரியாக ஒரு நாளைக்கு மூன்றில் இருந்து நான்கு மணிநேரம் வரை இணையதளங்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிடுவதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக, நேஷனல் அசோசியேசன் ஆப் சாப்ட்வேர் அண்ட் சர்வீஸ் கம்பெனிஸ் (நாஸ்காம்) என்ற அமைப்பின் மூலம் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், இளம் தலைமுறையினரால் தொடங்கப்படும் ஸ்டார்ட் அப் என்ற தொழில் முனைவு என்ற விஷயத்தில் இந்தியா உலக அளவில் மூன்றாவது இடத்தில் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
மேலும், இந்திய அளவில் இணைய தளத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அதேசமயம் தொழில் அல்லது வர்த்தக வாய்ப்புகளுக்கான இணைய அளவில் மார்க்கெட்டிங் செய்யும் முயற்சிகளும் வளர்ந்து வருகின்றன. அவ்வாறு இணை தளம் மூலம் ஒரு தயாரிப்பு அல்லது பொருளை சந்தைப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் வர்த்தகம் அல்லது வியாபார உத்திகள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்று குறிப்பிடப்படுகிறது.
ஒரு தொழில் சிறியதாக இருந்தாலும், அல்லது பெரியதாக இருந்தாலும் மின்னணு ஊடகங்கள் மூலமாக அதன் வளர்ச்சிக்கு ஏற்ப சந்தைப்படுத்தும் முறைகளை எளிதாக செய்து கொள்ள முடியும். இதை கச்சிதமாக செய்வதற்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜென்சி என்ற அமைப்பு உதவிகரமாக செயல்படுகிறது. இந்த முறையில் குறைந்த பட்ஜெட்டில் விளம்பரங்களை செய்ய முடியும். மேலும், டார்கெட் ஆடியன்ஸ் என்று சொல்லப்படக்கூடிய கச்சிதமான வாடிக்கையாளர்களை விளம்பரங்கள் சென்று சேரும்படியும் செய்ய முடியும். அதற்கேற்ப விளம்பரங்களுக்கான செலவினங்களையும் தேவைக்கு ஏற்ப கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். குறிப்பாக ஒரு தயாரிப்பின் விற்பனை அளவு மற்றும் வாடிக்கையாளர் விருப்பம் ஆகியவற்றை மிகவும் எளிதாக கண்டறியவும் இயலும்.
இன்றைய நிலையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் படித்தவர்கள் அல்லது அறிந்தவர்கள் இதில் தொழில் முயற்சி மேற்கொள்ள விரும்புகிறார்கள். அவ்வாறு டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜென்சி தொடங்கி, தங்கள் சேவைகளை அளிக்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட அடிப்படையான விஷயங்களை அவசியம் பூர்த்தி செய்தாக வேண்டும்.
- வாடிக்கையாளர்களின் கவனத்தை கவரும் வகையில் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜென்சி பெயரில் டொமைன் ரெஜிஸ்ட்ரேஷன் செய்யப்பட வேண்டும். அதன் மூலம் ஏஜென்ஸி சம்பந்தப்பட்ட வெப்சைட்டை அணுகுபவர்களின் கருத்தை அறிந்து கொள்ள இ.மெயில் ஐ.டி-யும் அவசியம். அத்துடன் ஹோஸ்டிங் சர்வர் எவ்வளவு விசிட்டர்களுக்கு தாக்குப்பிடிக்கும் என்ற தொழில்நுட்ப கணக்கின் அடிப்படையிலும் செயல்பட வேண்டும். மிக முக்கியமாக கட்டணங்களை பெறுவதற்கான பேமென்ட் கேட்வே அத்தியாவசியமானது.
- எஸ்.இ.ஓ என்ற சர்ச் என்ஜின் ஆப்டிமைசேஷன் மற்றும் எஸ்.இ.எம் என்ற சர்ச் இன்ஜின் மார்க்கெட்டிங் ஆகிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுடைய சகல விருப்பங்கள் மற்றும் எண்ண ஓட்டங்களை துல்லியமாக கண்டறியும் வகையில் செயல்பட இயலும். இந்தத் துறையில் எளிதாக பலரும் ஈடுபடுவார்கள் என்பதால் தனித்துவமான தொழில் முயற்சி என்பது மிகவும் அவசியமானது.
- சமூக வலை தளங்களான ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட ஏஜென்சியின் ப்ரொபைல் அட்டகாசமாக பிரசன்ட் செய்யப்படவேண்டும். அதன் மூலம் பல்வேறு லைக்குகள் பெறுவதும் அவசியம். மேலும், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆகியவற்றில் அதன் பயனாளர்கள் மனதை கவரும் வகையில் சுவாரஸ்யமான செய்திகளை டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜென்சி அவ்வப்பொழுது பதிவிடுவதும் அவசியம். உதாரணமாக, யூ–டியூபில் ஒரு வீடியோ பதிவு போடும்பொழுது அதில் உள்ள குறிப்பிட்ட பகுதியை மட்டும் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவாக போடலாம். அதையே ஃபேஸ்புக் பதிவாகவும் போட்டு பயனாளர்களின் மனதை கவரலாம்.
- கூகுள் போன்ற நிறுவனங்களில் அதன் பார்ட்னர்ஷிப் சர்டிபிகேஷன் பெறுவது ஒரு நல்ல வழியாகும். அதன் மூலமாக டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜென்சி சம்பந்தப்பட்ட வர்த்தக முயற்சிகள் மிகப்பெரும்பாலான மக்களை சென்றடையும் என்பது நிச்சயம்.
- நிறுவன ரீதியான பதிவு என்பது மிக அவசியம். தொடக்கத்தில் சோல் புரொப்ரைட்டர்ஷிப் நிறுவனம் என்ற வகையில் ஆரம்பித்து செயல்பட்டு வரவேண்டும். படிப்படியாக தொழிலை விரிவுபடுத்தி அதன் பின்னர் பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக மாற்றம் செய்துகொள்ளலாம்.
- வேர்ட்பிரஸ் அல்லது பிளாக்கர் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் ஏஜென்சி சம்பந்தமான சிறந்த பதிவுகளை வெளியிடுவது மிகவும் அவசியமானது. அந்தப் பதிவுகள் எழுத்து வடிவிலோ அல்லது கிராபிக்ஸ் வடிவிலோ நல்ல தரமான செய்திகளை கொண்டிருக்க வேண்டும். இந்த தொழிலில் தொடர்ந்த செய்திகள் அதாவது கன்சிஸ்டன்ஸி நிச்சயம் இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜென்சி வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க முடியும். குறிப்பாக, கன்டன்ட் வகைகள் அனைத்தும் விதமான தொழில்கள் பற்றிய தகவல்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஏனென்றால் வாய்ப்புகள் என்பது இன்றைய டிஜிட்டல் உலகத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கிடைக்கலாம்.
மேலே சொல்லப்பட்ட வழிமுறைகளின்படி, தொழில் ரீதியாக செயல்பட தொடங்கிய பின்னர் கீழ்க்கண்ட தொழில்நுட்ப அணுகுமுறைகளை பயன்படுத்தி தொழிலை வெற்றிகரமாக நடத்திச்செல்லலாம்.
சோசியல் மீடியா மார்க்கெட்டிங்
இன்றைய நிலையில் பெரும்பாலோனோர் சமூக வலைத்தளங்களை (Social media) பயன்படுத்துகின்றனர். ஒரு தயாரிப்பு மற்றும் சேவை அவர்களை சென்றடைய சமூக வலைத்தள மார்கெட்டிங்கை பின்பற்றுவது அவசியமாகும். ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் ப்ளஸ் லின்க்டு-இன், பின்ட்ரஸ்ட், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்களில் நிறுவனத்தின் பெயரில் தனி பக்கங்களை தொடங்குவது, நிறுவனத்தைப் பற்றியும், தனித்தன்மைகள் பற்றியும், என்னென்ன தயாரிப்புகள் மற்றும் சேவைகள் அளிக்கப்படுகின்றன, அவை மற்ற நிறுவனங்களிடமிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன, ஏன் வாடிக்கையாளர்கள் உங்களிடம் வாங்க வேண்டும், எந்த மாதிரியான சேவைகள் கிடைக்கும், வாடிக்கையாளர்கள் உங்களிடமிருந்து வாங்குவதால் என்னென்ன பலன்களை அடைய போகிறார்கள் போன்ற தகவல்களை அடிக்கடி சமூக வலைத்தளத்தின் பக்கங்களில் பதிவிடவேண்டும். தொழிலைப் பற்றிய தகவல்களை படங்கள், வீடியோக்கள், இன்போ கிராபிக்ஸ், கிராபிக்ஸ் மற்றும் டிசைன்களை பயன்படுத்துவது அவசியமானது.
வீடியோ மார்க்கெட்டிங்
தொழில் மற்றும் சேவையை பற்றி வீடியோ மூலம் மிக எளிமையாக விளக்க முடியும் மற்றும் விளம்பரப்படுத்த முடியும். அதாவது, ஒயிட்போர்டு அண்ட் எக்ஸ்பிளைனர் வீடியோ, அனிமேஷன் வீடியோ, இன்ட்ரோ வீடியோ, ஆட்ஸ் வீடியோ, புரமோஷனல் அண்ட் பிராண்ட் வீடியோ, புரபஷனல் ஸ்போக்ஸ்பெர்சன் வீடியோ ஆகிய பல்வேறு முறைகளில் தொழிலை மார்க்கெட்டிங் செய்யலாம். அத்தகைய வீடியோ வகைகளை யூ-டியூப், ஃபேஸ்புக் மற்றும் டெய்லிமோஷன், ஸ்னாப்ஷாட் உள்ளிட்ட பல்வேறு தலங்களில் பதிவுகளாக போடலாம்.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜென்சி எப்போதுமே தனது தொழிலின் இணைய தளத்தை தேடுபொறியின் முன்னணி பக்கங்களில் இடம்பெறச் செய்வது முக்கியம். இதற்காக எஸ்.இ.ஓ உத்திகள் மூலம் இணையதளத்தை தேடு பொறியின் முன்னணி பக்கத்தில் கொண்டு வரலாம். ஒருவருக்கு எவ்வகையிலான தகவல்கள் வேண்டுமென்றாலும் பெரும்பாலும் குரோம், பயர்ஃபாக்ஸ், மைக்ரோசாஃப்ட் எட்ஜ், ஓபரா உள்ளிட்ட இணையதள சர்ச் என்ஜின்கள் மூலமே தேடுவது வழக்கம். ஒரு தொழில் அதிகமான வாடிக்கையாளர்களை பெறவேண்டுமென்றால், அதன் இணையதளங்கள் தேடு பொறியின் முன்னணி பக்கங்களில் இடம் பெறவேண்டும். இணைய தள பயனாளர்கள் பெரும்பாலும் முதல் 4 பக்கங்களுக்குள் தரப்படும் தகவல்களை மட்டுமே பார்ப்பதாக அறியப்பட்டுள்ளது.
சர்ச் இன்ஜின் மார்க்கெட்டிங்
பொதுவாக எஸ்.இ.எம் என்று குறிப்பிடப்படும் இந்த வகையிலான அணுகுமுறை மூலமாக பே பெர் கிளிக் விளம்பரங்கள், காஸ்ட் பெர் கிளிக் விளம்பரங்கள், காஸ்ட் பெர் இம்ப்ரஷன்ஸ் உதாரணமாக கூகுள் இணைய தளத்தின் ஆட்வொர்ட்ஸ், சர்ச் அனலிட்டிக்ஸ், வெப் அனலிட்டிக்ஸ், டிஸ்ப்ளே அட்வர்டைசிங், ஆட் பிளாக்கிங், கான்டெக்சுவல் அட்வர்டைசிங், பிஹேவியரல் டார்கெட்டிங், அஃப்ளியேட் மார்க்கெட்டிங், மொபைல் அட்வர்டைசிங் ஆகிய முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த விஷயங்களுக்கு ஏற்ப இணையதள சேவைகளை அளிக்கும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கட்டணத்தை பெற்றுக் கொள்கின்றன.
கன்டென்ட் மார்க்கெட்டிங்
குறிப்பிட்ட ஒரு தயாரிப்பு அல்லது பொருளைப்பற்றிய தயார் செய்து அவற்றை இணையதளங்களில் சந்தைப்படுத்தும் முறை இதுவாகும். இந்த முறையில் குறிப்பிட்ட நிறுவனத்தின் தயாரிப்பு மற்றும் நிறுவனம் அளிக்கக்கூடிய சேவை ஆகியவை பற்றிய சுவையான தகவல்களை பிளாக் மூலம் பதிவிடுவது, எளிதாக அனைவருக்கும் புரியும் வகையில் படங்களை பயன்படுத்துவது, பல்வேறு விதமான எடுத்துக்காட்டுகள், சான்றுகள் மற்றும் இன்போ கிராபிக்ஸ் முறையிலான தகவல்களை பயன்படுத்தி விளம்பரங்கள் செய்யப்படும். மேலும் இந்த முறையில் சமூக வலைதளங்களில் பதிவிடுவது, பிரிண்ட் மீடியா என்ற பத்திரிக்கைகளில் வெளியிடுவது, வாராந்திர மற்றும் மாதாந்திர இதழ்களில் பதிவிடுவது, விஷுவல் மீடியா என்று சொல்லப்படும் டிவி விளம்பரங்கள் மூலமாகவும் கன்டென்ட் மார்க்கெட்டிங் செய்யப்படுகிறது.
இ-மெயில் மார்க்கெட்டிங்
குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் தயாரிப்பு அல்லது சேவை பற்றிய தகவல்களை வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவது இந்த முறையில் கையாளப்படுகிறது. ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான இ-மெயில்களை பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு எளிதாக அனுப்ப முடியும். இன்றைய சூழலில் பல்வேறு முன்னணி இணையதளங்கள் இ-மெயில் சேவையை இலவசமாக அளிக்கும் காரணத்தால் இந்த முறையில் மிக குறைவான செலவில் விளம்பரங்களை செய்து கொள்ள முடியும்.
ஸ்டோரி ஷேரிங்
உலக அளவில் உள்ள பல்வேறு இணையதள ஊடகங்கள் தொழில் முனைவோர்கள் உடைய ஸ்டார்ட் அப் மற்றும் தொழில் தொடங்கிய கதைகளை சுவையான பதிவுகளாக வெளியிடுகின்றன. அதில் அந்த நிறுவனம் பற்றிய பின்னணி, தயாரிப்பில் உள்ள சிக்கல்கள், அதன் உரிமையாளர் ஆரம்ப காலத்தில் பட்ட சிரமங்கள், அதன் பின்னர் கிடைத்த வெற்றிகள் உள்ளிட்ட பல்வேறு சுவாரசியமான தகவல்களை இந்த முறையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் எளிதாக பகிர்ந்து கொள்ள முடியும். அதற்கேற்ப இந்திய அளவிலும் உலக அளவிலும் பல்வேறு இணையதள ஊடகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இன்ஃப்ளுயன்ஸர் மார்க்கெட்டிங்
டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜென்சி தொழில் முனைவோர்களுக்கு இந்த முறை சற்று காஸ்ட்லியாக இருக்கக்கூடும். ஏனென்றால் சமூகத்தில் பிரபலமாக இருக்கக்கூடிய நடிகர்கள், நடிகைகள், பிரபல விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரசித்தி பெற்ற சமூக ஆளுமை மிக்க மனிதர்கள் ஆகியோர்களை தொடர்புகொண்டு அவர்களுடைய பிரத்தியேக வலைத்தளங்கள், பிளாக், நெட்வொர்க்கிங் தொடர்புகள், இதழ்கள் மற்றும் புத்தகங்களில் பதிவுகளை வெளியிட செய்யலாம்.
மொபைல் மார்க்கெட்டிங்
அனைவருடைய கைகளிலும் நிச்சயம் மொபைல் போன் இருக்கும். பெரும்பாலானோர் அதன்மூலமே சமூக ஊடகங்களை அணுகுகிறார்கள். மேலும் சிலர் தேசிய அளவிலான மாநில அளவிலான மற்றும் லோக்கல் அளவிலான செய்திகளை அறிவதற்காக மொபைலை பயன்படுத்துகிறார்கள். பேசுவதற்கு மட்டுமல்லாமல் இன்றைய ஸ்மார்ட்போன்கள் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்படுவதால் புஷ் நோடிஃபிகேஷன்ஸ் மூலமாக மொபைல் மார்க்கெட்டிங் செய்ய முடியும். அதன்மூலம் குறிப்பிட்ட வாடிக்கையாளர் அது மொபைல் போனுக்கு நேரடியாகவே தகவல் மற்றும் செய்திகளை அனுப்ப முடியும்.
இந்த விஷயத்தில் சில சர்வதேச நிறுவனங்கள் இந்த சேவையை இலவசமாகவோ அல்லது குறிப்பிட்ட கட்டணத்திற்கு அளிக்கின்றன. மேலும், ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் பேஸ்டு மார்க்கெட்டிங், மொபைல் சர்ச் ஆட்ஸ். மொபைல் இமேஜ் ஆட்ஸ், லொகேஷன் பேஸ்டு மார்க்கெட்டிங், எஸ்.எம்.எஸ், க்யூ ஆர் கோடுகள் உள்ளிட்ட வெவ்வேறு வகைகளில் மொபைல் மார்க்கெட்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும்.