சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) இந்திய பொருளாதாரத்தின் வரி அமைப்பையே முற்றிலுமாக மாற்றிவிட்டது. இந்த வரியினுள் விற்பனை வரி,வாட், பல வகையான கலால் வரிகள் மற்றும் உட்கோட்ட வரிகளும் அடங்கியுள்ளன. ஜி.எஸ்.டி வரி ஒரு மிக முக்கிய மாற்றமாகும். வரி வசூலிக்கப்படுவது முதல் அது எவ்வாறு கணக்கிடப்பட்டு தாக்கல் செய்யப்படுகிறது என்பது வரை அனைத்தையுமே ஜி.எஸ்.டி மாற்றியமைத்துள்ளது.
இந்தியாவில் ஜி.எஸ்.டி இன்னும் ஆரம்ப கால நிலையில் இருப்பதாலும், அதில் இன்னும் பல திருத்தங்கள் செய்யப்படும் என்பதாலும், ஒரு பிஸ்னஸ் உரிமையாளர் சட்ட வரம்புக்குள் சுமுகமாக இயங்க ஜிஎஸ்டி பற்றிய சமீபத்திய செய்திகளை அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஜி.எஸ்.டி அமலாக்கத்தின்போது, வரிச்சலுகைகள் மற்றும் எந்த வணிகங்கள் எதன் கீழ் வருகின்றன என்பன போன்ற பல சிக்கல்கள் இருந்தன. அவை காலப்போக்கில் மாற்றப்பட்டு தீர்க்கப்பட்டன. வரும் காலத்தில் ஜி.எஸ்.டி-யில் மாற்றம் அடையக்கூடிய பகுதிகள் பல உள்ளது என்பதால், இன்றைய தேதி வரையிலான அனைத்து சமீபத்திய ஜி.எஸ்.டி செய்திகளையும் அறிந்து வைத்திருப்பது கட்டாயமாகும்.
கடந்த சில மாதங்களாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) உலகளாவிய மற்றும் உள்ளூர் சிக்கல்களால் பெரிய சரிவை சந்தித்து வருகிறது. ஜிடிபி கடந்த காலாண்டில் கிட்டத்தட்ட 5% ஆக குறைந்துள்ளது. அதனால் ஜி.எஸ்.டி-யை மீண்டும் மாற்ற அரசாங்கம் முடிவு எடுத்துள்ளது.
2019 செப்டம்பரில் நடந்த 37-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்க பல்வேறு வகையான மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முக்கிய குறைப்புகள்
- இந்தியாவில் அதிக வேலைவாய்ப்பை வழங்குவது ஹோட்டல் தொழில்துறை ஆகும். அத்துறையில் உள்ள பொருளாதார பிரச்சினைகளால், அரசாங்கம் அத்துறைக்கான வரி குறைப்பை அறிவித்துள்ளது. ஒரு நாளைக்கு ஹோட்டலில் தங்குவதற்கு ரூ1000-க்கும் குறைவாக ஆகும் செலவிற்கும், ரூ.1000 முதல் – ரூ.7500-குள் ஆகும் செலவிற்கும் 12% ஜி.எஸ்.டி வசூலிக்கப்படும். அதே நேரத்தில் ஒரு நாளைக்கு ரூ.7500 முதல் அதற்கு மேலாக ஆகும் செலவிற்கு 18% ஜி.எஸ்.டி வசூலிக்கப்படும்.
- ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக இனிமேல் நகை ஏற்றுமதியின் மீதான ஜி.எஸ்.டி இருக்காது.
- வெட்டப்பட்டு, மெருகூட்டப்பட்ட செமி பிரேசியஸ் கற்களின் மீதான வரி விகிதம் 3%-திலிருந்து 0.25%-மாக குறைக்கப்பட்டுள்ளது.
- வைரங்கள் மீது செய்யப்படும் வேலைப்பாடுகள் மற்றும் சேவைகள் மீதான முந்தைய வரி சதவீதமானது 5%-திலிருந்து குறைக்கப்பட்டு 1.5% ஜி.எஸ்.டி-யாக இனி வசூலிக்கப்படும். இது வைர தொழில்துறைக்கு நல்ல முன்னேற்றத்தை அளிக்கும்.
- பொறியியல் துறையிலுள்ள இயந்திர வேலைகள் மற்றும் சேவைகள் மீதான வரி 12%-மாக மாற்றப்பட்டுள்ளது. இது இச்சேவைகள் மீதான முந்தைய வரியான 18%-தை விட 6% குறைவாகும்.
இதர அதிகரிப்புகள்
வரி உயர்வு பெற்ற சில தயாரிப்புகளில் காஃபினேட்டட் பானங்கள் அடங்கும். இனி அவை மீதான வரி முந்தைய 12%-திலிருந்து 28%-மாக வசூலிக்கப்படும், இதில் 12% இழப்பீட்டு செஸ்ஸும் அடங்கும்.
மின்சார வாகனங்கள்
காலநிலை மாற்றத்தைத் தணிக்க வழிவகுக்கும் பசுமை வாகனங்களான மின்சார வாகனங்களை நாட்டில் அறிமுகப்படுத்த ஏற்ற ஒரு பொருளாதார மாதிரியை உருவாக்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது. எனவே, வாகனத் தொழில் துறையிலுள்ள நுகர்வுப் பழக்கத்தை மாற்றி, மக்கள் அதிக மின்சார வாகனங்களை வாங்க அதன் மீதான வரியை குறைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. இதன் காரணமாக, மின்சார வாகனங்கள் மீதான வரி 12%-திலிருந்து 5%-மாக குறைக்கப்பட்டுள்ளது. இக்குறைப்பு உள் எரிப்பு இயந்திரங்களை கொண்ட வாகனங்களுக்கு நிகரான போட்டியில் மின்சார வாகனங்களை முன் நிறுத்துகிறது. மேலும், ஜி.எஸ்.டி கவுன்சில் மின்சார வாகன சார்ஜின் மீதான வரி வசூலிப்பை 18%-திலிருந்து 5%-மாக குறைத்து மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க வழி வகுத்துள்ளது.
28% ஜி.எஸ்.டி ஸ்லாப்
சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே 28% ஜிஎஸ்டி ஸ்லாப் ஒரு சர்ச்சைக்குரியதாக இருந்து வந்துள்ளது. பெரும்பாலான மக்கள் இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு 28% வரி விகிதம் மிக அதிகம் என்றும் அது நிலையானதல்ல என்றும் எண்ணுகிறார்கள். எனவே, அரசாங்கம் இதை கவனத்தில் கொண்டு 6 பொருட்களின் ஜி.எஸ்.டி விகிதங்களை 28% அடைப்புக்குறியிலிருந்து நீக்கியதாக தெரிகிறது. 28% வரி விகிதத்தில் இன்னும் உள்ள சில பொருட்களில் சிமென்ட், சொகுசு ஆட்டோமொபைல்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் யாச்ட்கள் அடங்கும். இப்போது ரூ.100-க்கு அதிமாக உள்ள திரைப்பட டிக்கெட்டுகளின் மீதான வரியும் 28% ஸ்லாப்பிலிருந்து 18% ஸ்லாப்பிற்கு கொண்டுவரப்பட்டு மலிவாக்கப்பட்டுள்ளது. வீடியோ கேம்ஸ் மற்றும் லித்தியம்-அயன் பவர் பேங்க் போன்றவை மீது இனி 28%-திற்கு பதிலாக 18% ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும். மானிட்டர்கள் மற்றும் தொலைக்காட்சித் திரை மீதான வரிகளும் முந்தைய 28%-திலிருந்து 18%-மாக குறைக்கப்பட்டுள்ளன.
பிற குறிப்பிடத்தக்க மாற்றங்கள்
- விமானம் மார்கமாக அல்லது கடல் வழியாக செய்யப்படும் ஏற்றுமதிகளுக்கான நிபந்தனை ஜி.எஸ்.டி விலக்கு செப்டம்பர் 30,2020 வரை செல்லுபடியாகும் என்று நீட்டிக்கப்பட்டுள்ளது.
- இப்போது செயல்படுத்தப்படவிருந்த புதிய ஜி.எஸ்.டி ரிட்டர்ன்ஸ் அமைப்பு ஏப்ரல் 2020 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இம்முடிவு சிறந்ததாகும்.மேலும், பல பிஸ்னஸ்களின் பாராட்டை பெற்றுள்ளது. ஏனெனில் வரி தாக்கல் செய்யும் புதிய முறைக்கு மாறுவது சிக்கலானது. அதுமட்டுமல்லாது அது பல இடையூறுகளையும் ஏற்படுத்தும். எனவே இத்தாமதத்தால், பிஸ்னஸ்கள் அடுத்த ஆண்டு முதல் தங்களை முழுவதுமாக தயார் செய்து கொண்டு புதிதாக தொடங்கலாம்.
- சிறு வணிகங்களுக்கு ஜி.எஸ்.டி.ஆர்-9 விருப்பத் தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. 2017-18 நிதியாண்டு மற்றும் 2018-2019 நிதியாண்டிற்க்கான வருவாய் 2 கோடிக்குக் குறைவாக உள்ள வரி செலுத்துவோர், மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) அறிவித்த தேதிக்குப் பின்னர் ஜி.எஸ்.டி.ஆர் -9-ஐ தாக்கல் செய்யாமல் இருப்பதை தேர்ந்தெடுக்கலாம்.
- ஜி.எஸ்.டி.ஆர்-3பி மீதான ஐ.டி.சி உரிமைகோரலுக்கான கட்டுப்பாடுகள். சப்ளையர்கள் வெளிப்புற சப்ளைகளின் விவரங்களை வழங்காவிட்டால், பெறுநர்களுக்கான உள்ளீடு வரி கடன் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது.
- கலவை வரி செலுத்துவோருக்கு 2017-2018 மற்றும் 2018-2019 நிதியாண்டுகளுக்கான ஜி.எஸ்.டி.ஆர்-9ஏ தள்ளுபடி செய்யப்பட்டது. ஜி.எஸ்.டி.ஆர்-9ஏ அறிவிக்கப்படும் விவரங்கள் அனைத்தும் இனி ஜி.எஸ்.டி.ஆர்-4 படிவத்தில் உள்ளடக்கப்படும் என்பதால் ஜி.எஸ்.டி.ஆர்-9ஏ நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டு வருவாய் அறிவிப்பு மற்றும் வரி விவரங்களைக ஜி.எஸ்.டி.ஆர்-4 படிவம் கொண்டிருக்கும்.
- இந்தியாவில் உணவு மற்றும் மூலப்பொருட்களை சேகரிக்க சரியான பதுக்குக் கிடங்குகள் மற்றும் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தி சேகரிக்கும் வசதிகள் இல்லாதது ஒரு பிரச்சினையாக உள்ளது. எனவே, உணவை சேமிக்கும் எந்தவொரு சேமிப்பு கிடங்குகள் மீதும் அதிக வரி விதிப்பது சிக்கலானது. அதனால்தான் ஜி.எஸ்.டி அமைப்பு தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள், நட்ஸ், காய்கறிகள் மற்றும் மசாலா பொருட்கள், கரும்பு, வெல்லம், பச்சை காய்கறி இழைகளான பருத்தி, ஆளி,சணல் போன்றவவை மீதான சேமிப்பு மற்றும் கிடங்கு சேவைகளுக்கு வரி விலக்கு அளித்துள்ளது. அத்துடன் அரிசி, காபி மற்றும் தேநீர் ஆகியவற்றிற்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- ஜே&கே யூனியன் பிரதேசங்களாக நியமிக்கப்படுவதால் அதற்கான ஒரு புதிய சட்டம் நிறுவப்படும்.
வரி செலுத்துவோர் ஜிஎஸ்டியின் கீழ் தங்களை பதிவு செய்து கொள்ள ஆதார் கட்டாயமாக்கப்படுகிறது என்பது தான் இறுதியாக அறிவிக்கப்பட்ட முக்கியமான விஷயம். மேலும், பணத்தை திரும்பப்பெறுவதற்கும் அதை கட்டாயமாக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
முடிவுரை
நீங்கள் அறிந்து கொண்டது போல, ஜி.எஸ்.டி மேலும் மாறும். ஏனெனில் நமது பொருளாதாரத்தின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைக்கு ஏற்ப ஜி.எஸ்.டி-யில் பல மாறுதல்கள் ஏற்படும். இது சிறந்ததாக மாறுவதை நோக்கி முன்னேறுகிறது. அத்துடன் ஜி.எஸ்.டி-யை வலுவான அமைப்பாக உருவாக்க இன்னும் பல நுட்பமான சிறந்த மாற்றங்கள் தேவைப்படும்.