ஒரு கோழி பண்ணை வணிகத்தைத் தொடங்கவும்
வேளாண்மை துறையின் உப தொழிலாக கருதப்படும் கோழிப்பண்ணை தொழில் என்பது ஆண்டு முழுவதும் வருமானம் தரக்கூடிய ஒன்றாகும். முட்டை கோழிகள் வளர்ப்பது இறைச்சி கோழிகள் வளர்ப்பது மற்றும் நாட்டு கோழிகள் வளர்ப்பது என்ற மூன்று விதங்களில் சிக்கன் ஃபார்ம் பிசினஸ் என்ற கோழிப்பண்ணை தொழில் இருப்பதாக குறிப்பிடலாம். இந்த தொழிலை நகர்புறங்களில் செய்வது இயலாது. புறநகர் பகுதிகளில் இருந்து குறிப்பிட்ட தொலைவு தள்ளி அமைந்த விவசாய நிலங்கள் அல்லது கிராமப் பகுதிகள் ஆகியவற்றில்தான் இந்த தொழிலை செய்வதற்கான சூழல் இருக்கும்.
உலக அளவில் முட்டை மற்றும் கறிக்கோழி உற்பத்தியில், இந்தியாவின் பங்கு முக்கியமானதாக உள்ளது. தேசிய அளவில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள், உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்வதுடன் வெளிநாட்டு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. உற்பத்தி செலவு மற்றும் நுகர்வை அடிப்படையாக கொண்டு, தேசிய முட்டை ஒருங்கிணைப்பு கமிட்டி மூலம், முட்டைகளுக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு, சந்தை விற்பனைக்கு வருகிறது.
கோழிப்பண்ணையில் கொட்டகை என்ற ஷெட் அமைப்பதற்கு திறந்த வெளி பண்ணை, பகுதி நேர வளர்ப்பு பண்ணை, சுற்றிலும் அடைக்கப்பட்ட பண்ணை மற்றும் கூண்டு முறை வளர்ப்பு ஆகிய முறைகள் பின்பற்றப்படுகின்றன
திறந்த வெளி பண்ணை
இந்த வகை பண்ணையில் கோழிகளை நெரிசல் இல்லாமல் வளர்ப்பதற்கு அதிக இடம் தேவைப்படும். ஒரு ஹெக்டேர் நிலத்தில் 250 கோழிகளை வளர்க்கலாம். மேலும் இந்நிலத்திலுள்ள பசுந்தீவனம் கோழிகளுக்கு ஏற்ற தீவன ஆதாரமாக அமைகிறது. கோழிகளை மழை, வெயிலில் இருந்து பாதுகாக்க ஒரு கொட்டகையினை தற்காலிகமான கூரைகளைக் கொண்டு அமைக்கவேண்டும். நிலத்திலுள்ள வயல்களில் பயிர்களை அறுவடை செய்த பின்பு பயிறுக்கேற்றவாறு சுழற்சி முறையில் கோழிகளை வளர்க்க உபயோகப்படுத்தலாம். எல்லா விதமான கோழியினங்களையும் இந்த முறையில் வளர்க்க முடியும். இம்முறை ஆர்கானிக் முட்டை மற்றும் இறைச்சி உற்பத்திக்கு உபயோகப்படுத்தப்படுகிறது.
பகுதி நேர வளர்ப்பு பண்ணை
இந்த முறையில் கோழிகள் பாதி நேரம் கொட்டகைகளிலும், பாதி நேரம் மேய்ச்சல் தரைகளிலும் வளர்க்கப்படுகின்றன. அதாவது இரவு நேரங்களும், தேவைக்கேற்பவும், கொட்டகைகளில் அடைத்து விட்டு மீதி நேரம் முழுவதும் திறந்த வெளிகளில் கோழிகள் மேய அனுமதிக்கப்படுகின்றன. கொட்டகைகளின் தரை கடினமான தரையாகவும், மேய்ச்சல் நிலங்கள் திறந்த வெளிகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. இம்முறையின் மூலம் வெற்றிகரமாக கோழி வளர்ப்பது திறந்த வெளிகளை நோய்க்கிருமிகளால் அசுத்தமடையாமல் பராமரிப்பதைப் பொறுத்தது. ஒரு ஹெக்டேர் நிலத்தில் இம்முறையில் 750 கோழிகளை வளர்க்கலாம். கோழிகளுக்குத் தீவனமும், தண்ணீரும் கொட்டகைகளில் அளிக்கப்படுகிறது.
சுற்றிலும் அடைக்கப்பட்ட பண்ணை
இம்முறையில் கோழிகள் கொட்டகைகளில் முழுவதும் அடைத்து வளர்க்கப்படுகின்றன. கொட்டகைகளில் தரையிலோ அல்லது கம்பி வலைகளின் மீதோ அல்லது கூண்டுகளிலோ கோழிகளை வளர்க்கலாம். இது செலவு குறைந்த, அதிக எண்ணிக்கையில் கோழிகளை வளர்க்கும் நவீன முறையாகும். பண்ணை அமைக்க குறைந்த இடமே தேவைப்படும்.. தினந்தோறும் பண்ணை மேலாண்மை செய்வது எளிது. இதனால், கோழிகளின் உற்பத்தித் திறன் அதிகரிக்கிறது. இனப்பெருக்கம், தீவனமளித்தல், மருந்துகளை கொடுப்பது ஆகியவற்றை சுலபமாக செய்யலாம். நோயுற்ற கோழிகளை எளிதில் கண்டறிந்து தனியாகப் பிரித்து சிகிச்சை அளிக்கலாம்.
கூண்டு முறை வளர்ப்பு
இந்த முறையில் கோழிகள் கம்பிகளால் அமைக்கப்பட்ட சிறிய கூண்டுகளில் வளர்க்கப்படுகின்றன. தரையிலிருந்து கம்பிகள் போன்ற தாங்கிகள் அமைக்கப்பட்டு அவற்றின் மீதோ அல்லது கூரையிலிருந்து நேரடியாக தொங்குமாறோ அமைக்கப்படுகின்றன. உலகிலுள்ள வணிக ரீதியாக வளர்க்கப்படும் 75% முட்டைக்கோழிகள் இம்முறை மூலமே வளர்க்கப்படுகின்றன. தானியங்கி தீவனத்தொட்டிகளும், முட்டை சேகரிக்கும் உபகரணங்களும் கூட கூண்டுகளுடன் இணைக்கப்பட்டு சில நேரங்களில் அமைக்கப்படுகின்றன. கோழிகளுக்கு குறைவான இடவசதியே தேவைப்படும்.
முட்டை கோழிப்பண்ணை
கூண்டுகள் அமைத்து வளர்க்கப்படும் இந்த சிக்கன் ஃபார்ம் பிசினஸ் செய்ய வங்கிக் கடன் உதவி கிடைக்கிறது. கோழிக்குஞ்சு முதல் வளர்பருவம் வரை உற்பத்தி செலவுக்கு முதலீடு இருந்தால் போதும். முட்டைப்பருவ காலத்தில் கிடைக்கும் முட்டைகளை விற்று, அடுத்தடுத்த உற்பத்தி செலவுகளை சமாளிக்க முடியும். ஒரு கோழி வாரத்தில் 6 நாள் முட்டை இடுவதால், தினசரி வருமானம் கிடைக்கும்.
முட்டைக்கோழிகள் குஞ்சு பொரித்தது முதல் 8 வாரம் வரை குஞ்சு பருவம். அதற்கடுத்த 8 வாரங்கள் வளர் பருவம், பின்னர் 56 வாரங்கள் முட்டை உற்பத்தி பருவம். 3 பருவ கோழிகளையும் தனித்தனி கூண்டுகளில் வளர்க்க வேண்டும். கூண்டுகளில் கோழிகளின் பருவத்துக்கு ஏற்ப வெப்பம், காற்றோட்டம், ஈரப்பதம் இருக்குமாறு வசதி ஏற்படுத்த வேண்டும். குஞ்சு பருவத்தில் தீவனம் வீணாவதை தடுக்கவும், ஒன்றையொன்று கொத்திக் கொள்ளாமல் இருக்கவும் அதன் அலகுகளை 7 முதல் 10 நாட்களுக்குள் வெட்ட வேண்டும். குஞ்சு பருவத்தில் சுமார் 600 கிராம் எடை உள்ள நிலையில் வளர் பருவத்தில் 1100 கிராம் எடையை கோழிகள் அடைகின்றன. அவற்றை முறையாக பராமரித்தால் 60 கிராம் எடையுள்ள முட்டைகளை கோழி இடும். ஒரு கோழி வாரத்துக்கு 6 முட்டை இடும். அதை விற்பனைக்கு அன்றன்றே அனுப்பிவிட வேண்டும். ஒவ்வொரு கோழியும் வளர்ந்த 17-வது வாரத்தில் இருந்து 72-வது வாரம் வரை முட்டை இடும். முட்டையிடும் பருவமான 55 வாரங்களில் (385 நாட்களில்) 320 முட்டைகள் இடும். கோழிகள் மூலம் முட்டை விற்பனை, 72 வார முடிவில் வயதான முட்டை கோழிகள் விற்பனை, முட்டை, எரு ஆகிய பல நிலைகளில் வருமானம் கிடைக்கும்.
சிக்கன் ஃபார்ம் பிசினஸ் தொடங்க விரும்பும் தொழில் முனைவோர் கால்நடை பராமரிப்பு துறையின் மாவட்ட கால்நடை வளர்ப்பு மற்றும் ஆராய்ச்சி மையங்களில் முட்டைகோழி வளர்ப்பு தொடர்பான அறிவுரைகள், வங்கி கடனுக்கான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் பெற்று செயல்பட வேண்டும். முட்டை கோழிக் குஞ்சுகள் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்களின் தலைமை இடங்கள் பல்வேறு மாவட்டங்களில் உள்ளன. அங்கு கோழிக் குஞ்சுகளை வாங்குவதுடன், கோழித் தீவன உற்பத்தியாளர்கள், கூண்டு தயாரிப்பவர்கள் ஆகியோர்களிடமிருந்து கோழி வளர்ப்பு பற்றிய அனைத்து விபரங்களையும் பெற்று கொள்ளலாம்.
இறைச்சி கோழிப்பண்ணை அமைப்பு
இறைச்சிக் கோழிப்பண்ணை தொழில் என்பது ஓரு குடும்பத்தின் முதன்மை வருமான மூலதனமாகவோ அல்லது கூடுதல் வருமானம் அளிக்கும் தொழிலாக இருந்து வருகிறது. இந்த சிக்கன் ஃபார்ம் பிசினஸ் என்பது ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தக்கூடியதாகும். கோழிகளின் எரு என்பது நல்ல உரமாக இருப்பதால் பயிர்களின் விளைச்சலை அதிகரிக்க பயன்படுத்தப்படுகிறது.
பிராய்லர் கோழி பண்ணையை கோழிக் குஞ்சுகள் இடுவதற்கு முன்னதாக கிருமி நாசினியை உபயோகித்து சுத்திகரிக்கப்பட வேண்டும். பண்ணையில் குறிப்பிட்ட வெப்பநிலையை சரியாக பராமரித்து வர வேண்டும். கொட்டகையின் அறை வெப்பநிலை 27 டிகிரி அல்லது 28 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்படி பராமரிக்க, தெளிப்பு நீர்பாசனத்தை கொட்டகை மீது அமைக்க வேண்டும். கோழிக்குஞ்சுகளை கொட்டகையில் இறக்கிய பின் குஞ்சுகள் தண்ணீர் அருந்தும் பிளாஸ்டிக் டப்பாவில் கோழிக்கு 50 கிராம் குளுக்கோஸ் என கணக்கிட்டு மொத்த கோழி குஞ்சுகளுக்கும் கொடுக்க வேண்டும். தீவனங்களை வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஒருங்கிணைந்த பிராய்லர் கோழி வளர்ப்பு தனியார் நிறுவனத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
இறைச்சிக் கோழி வளர்ப்புக் காலம் 6 முதல் 7 வாரங்கள் ஆகும். ஒன்றிற்கு மேற்பட்ட கோழிகளை ஒரே கொட்டகையில் வளர்க்கலாம். கால்நடைகளைக் காட்டிலும், குறைந்த தீவனத்திலிருந்து அதிக இறைச்சி உற்பத்தி செய்யலாம் என்பதால் முதலீடு செய்த குறைந்த நாளிலேயே வருமானம் ஈட்டலாம். மட்டன் இறைச்சியைக் காட்டிலும், சிக்கன் ஐட்டங்களுக்கு நல்ல வரவேற்பு மற்றும் தேவை இருப்பதாக தெரிய வந்துள்ளது.
கோழிகளை 6-7 வாரங்களுக்கு மேல் பண்ணயைில் வைத்திருக்கக்கூடாது, கோழி இறைச்சியை விற்கும்போது நன்றாக சுத்தப்படுத்திய பாத்திரங்களையும் கருவிகளையும் பயன்படுத்தவேண்டும். கோழி இறைச்சியை பாதுகாப்பாக வைப்பதற்காக குளிர்சாதன வசதியை பயன்படுத்த வேண்டும். சிக்கன் ஃபார்ம் பிசினஸ் முறையில் கோழி இறைச்சிப் பண்ணை அமைக்க தேசிய மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி மூலம் கடன் பெறக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. வங்கிக் கடன் பெற விவசாயிகள் அருகிலுள்ள வணிக வங்கி, கூட்டுறவு மற்றும் மண்டல வங்கிகளின் தொழில்நுட்ப அதிகாரிகள் அல்லது வங்கி மேலாளர்களின் உதவியுடன் கடன் பெறுவதைப் பற்றிய விவரங்களைப் பெற்று பண்ணை அமைக்கும் திட்டம் குறித்த ஆலோசனையும் பெறலாம்.
நாட்டுக்கோழி பண்ணை அமைப்பு
இன்றைய நிலையில் ஆர்கானிக் உணவு என்ற வகையில் மக்களின் இறைச்சி உண்ணும் விருப்பமானது நாட்டுக் கோழிகளின் மீது ஏற்பட்டுள்ளது. தொழில்முனைவோர்கள் மக்களுடைய இந்த மாற்றத்தை கவனித்து ஆங்காங்கே சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணைகள் ஆரம்பித்திருப்பதாக தெரியவந்துள்ளது. பொதுவாகவே நாட்டுக்கோழிகள் வளர்ப்பதற்கு எளிதாக இருப்பதுடன், அதிகம் பாதிக்கப்படாத வகையாகவும் இருந்துவருகின்றன. இனிவரும் காலங்களில் வர்த்தக ரீதியாகவும் இந்த நாட்டுக்கோழி சிக்கன் பிசினஸ் ஃபார்ம் நல்ல லாபம் அளிப்பதாக இருக்கும்.
நாட்டு கோழிகள் இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை என்பதால் திறந்த வெளியில் கம்பி வேலி அமைத்து எளிதாக வளர்க்கலாம். இதற்கு டயமன்ட் கிரில் என்ற பாதுகாப்பு வேலிகள் அமைத்து, கோழி குஞ்சுகள் வெளியே செல்லாமல் தடுக்க முடியும். ஒரு ஏக்கருக்கு 2000 கோழிகள் வரை எளிதாக வளர்க்கலாம். இதற்கு, மழை, வெயில் போன்றவற்றில் இருந்து ஒதுங்க சிறிய கொட்டகை போதுமானது.
கோழிகளுக்கு உணவாக பச்சை கீரை வகைகள், அசோலா, கினியா புல், கோ-4, குதிரை மசால், காய்கள் மற்றும் அரிசி போன்றவற்றை கொடுக்கலாம். நாட்டுக்கோழி வளர்ப்பில் தினமும் அனைத்து கோழிகளையும் நன்றாக கவனிக்க வேண்டும். ஏதாவது ஒரு கோழிக்கு நோய் வந்தாலும் அது வேகமாக அனைத்து கோழிகளுக்கும் பரவி விடும். எனவே ஒரு கோழிக்கு நோய் வந்தாலும் உடனடியாக கண்டு பிடித்து, தடுப்பு நடவடிக்கையாக மருந்து கொடுத்து விடுவது அவசியம். குஞ்சுகள் வளர்ந்த 3 மற்றும் 4 மாதங்களில் இருந்து விற்க ஆரம்பிக்கலாம். இயற்கையாக வளர்க்கப்படும் கோழிகள் என்பதால் அந்த பகுதில் உள்ள பொதுமக்களே நல்ல ஆர்வத்துடன் வாங்கி செல்வார்கள். மேலும், நகர்புறங்களில் உள்ள ஆர்கானிக் உணவு பிரியர்கள் மற்றும் அசைவ உணவு விடுதிகளுக்கு கோழிகளை சப்ளை செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம் .
பல்வேறு மாநில அரசுகள், சிக்கன் ஃபார்ம் பிசினஸ் மூலம் நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் பண்ணை அமைக்க ஆகும் செலவில் குறிப்பிட்ட சதவிகிதத் தொகையை மானியமாக வழங்குகின்றன. மேலும், நபார்டு வங்கியின் சார்பில் 25 சதவிகித மானியம் அளிக்கப்படுகிறது. அரசின் கால்நடை பராமரிப்புத் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தில் நிதி ஆண்டுக்கு ஆண்டு மாறுபடலாம்.
பண்ணைகள் அமைக்கப் போதிய நிலம் கொண்ட தனிநபர்கள், தொழில் முனைவோர், சுய உதவிக்குழுக்கள் மானியத்தை பெறத் தகுதியானவர்கள் ஆவார்கள். கோழி வளர்ப்பில் முன் அனுபவம் மற்றும் ஆர்வம் உள்ளவர்களும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். பண்ணை அமைக்க விண்ணப்பதாரர் பெயரிலோ அவரது குடும்ப உறுப்பினர் பெயரிலோ போதிய நிலம் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு மாவட்டந்தோறும் செயல்படும் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மையங்கள் மூலம் 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும்.