How to Start a Footwear Business
இன்றைய சூழலில் அதிகப்படியான வர்த்தகம் மற்றும் வேலை வாய்ப்புகளை கொண்ட தொழில்களில் ஒன்றாக புட்வேர் பிசினஸ் விளங்குகிறது. இந்திய அளவில் சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் காலணி தயாரிப்பு மற்றும் விற்பனை துறையில் பணிபுரிகிறார்கள். காலணிகள் உற்பத்தியில் உலக அளவில், சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. ஆண்டுதோறும் சுமார் 22 பில்லியன் ஜோடி காலணிகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது உலக உற்பத்தியில் சுமார் 9 சதவீதமாகும். நாடெங்கும் சுமார் 30 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை இந்த தொழில் வழங்கி வருகிறது. மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக இந்த எண்ணிக்கை மேலும் 50 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய காலணிச் சந்தையில் சுமார் 75 சதவீதம் பங்களிப்பு அமைப்புசாரா உற்பத்தியாளர்களிடம் இருந்து தான் வருகிறது என ஒரு ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாட்டின் முதல் 10 தொழிற்சாலைகளில் காலணி உற்பத்தித்துறை எப்போதும் இடம் பிடித்து வருகிறது. மத்திய அரசு காலணி உற்பத்தி துறையில் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு நிதி ஒதுக்கி பயிற்சிகளை அளித்து வருகிறது. மேலும், சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், மத்திய காலணி பயிற்சி நிறுவனம் வேலை வாய்ப்புகளை அளிக்கும் பல்வேறு பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறது. மத்திய காலணி பயிற்சி நிறுவனம், காலணி உற்பத்தி தொழிற்சாலைகளில் பணிபுரியத் தேவையான மனித வளங்களை உருவாக்கும் பயிற்சிகளை அளித்து வருகிறது.
தேசிய அளவில் கான்பூர், ஆக்ரா, ராணிப்பேட்டை, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய நகரங்கள்தான் காலணி உற்பத்தி தொழிலில் முன்னணியில் இருக்கும் ஊர்கள் ஆகும். பொதுவாக, புட்வேர் பிசினஸில் அமைப்பு சார்ந்த பெரு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்தத் துறையில் முறைசாரா உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தனிநபர்களும் ஓரளவுக்கு சந்தையின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்கள்.
பொதுவாக, புட்வேர் பிசினஸ் என்ற காலணி தொழில் கீழ்க்கண்ட இரண்டு வகையாக இருக்கிறது.
1) காலணிகளை விற்பனை செய்யும் நிறுவனம்.
2) காலணி வகைகளை தயாரிக்கும் தொழிற்சாலை
காலணிகளை விற்பனை செய்யும் நிறுவனம் என்றால் அவை பெரிய நிறுவனங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட காலணிகளை குறிப்பிட்ட லாபத்திற்கு வாடிக்கையாளர்களுக்கு சில்லரை விலையில் விற்பனை செய்வதாகும். இன்றைய சூழ்நிலையில் பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக மொத்தக் கொள்முதல் வியாபாரிகளுக்கு பொருட்களை அனுப்புகின்றன அவற்றின் மூலம் சர்வதேச புட்வேர் வகைகளை உள்ளூர் சந்தையிலும் விற்பனைக்கு வைக்க முடியும்.
காலணி தயாரிப்பு நிறுவனம் என்றால் அடிப்படை விஷயங்கள் நிச்சயம் மாறுபடும். அதாவது, ஒரு பொருளை தயாரிக்கும் தொழிற்சாலை என்பது பல்வேறு நிலைகளில் செயல் திட்டங்களை வரையறுத்து, திட்டமிட்டு செயல்பட வேண்டிய அமைப்பாக இருக்கும்.
1) எந்திரங்களை அமைத்தல்,
2) மூலப் பொருள்கள் கொள்முதல்,
3) அவற்றை பயன்படுத்தி பொருட்களை தயாரித்தல்,
4) தகுதியுள்ள பணியாளர்களை நியமனம் செய்வது,
5) தயார் செய்த பொருட்களை சரியாக டீலர்களுக்கு வியாபாரம் செய்வது அல்லது சந்தையில் மார்க்கெட்டிங் செய்வது,
என்ற வெவ்வேறு நிலைகளில் துல்லியமான திட்டமிடலும், தகுதியுள்ள நிர்வாகமும் புட்வேர் பிசினஸ் புரடக்ஷன் யூனிட்டுக்கு நிச்சயம் தேவைப்படும்.
தொழிலை தொடங்குவதற்கு தேவையான அடிப்படை தகவல்களை இங்கே பார்க்கலாம்.
1) புட்வேர் பிசினஸ் ஆரம்பிப்பதற்கு ஒரு நல்ல பெயரை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதற்கு நிறுவனங்கள் பதிவு சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்து பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
2) அதன் பின்னர் முறைப்படி ஜிஎஸ்டி வரி விதிப்புக்கான பதிவு எண்ணை பெற்றுக் கொள்ள வேண்டும்
3) பின்னர் சம்பந்தப்பட்ட ஏரியாவில் அமைந்துள்ள முனிசிபாலிட்டி அல்லது நகராட்சி அலுவலகத்தில் டிரேடு லைசன்ஸ் பெற்றுக்கொள்ள வேண்டும்.
4) நிறைவாக, எஸ்.எஸ்.ஐ சர்டிபிகேட் என்று சொல்லப்படும் ஸ்மால் ஸ்கேல் இண்டஸ்ட்ரி சான்றிதழ் பெறுவது அவசியமானது. இந்த சான்றிதழை பெறுவதன் மூலமாக அரசு தரப்பில் அளிக்கக்கூடிய பல்வேறு நிதி உதவிகள் மற்றும் சலுகைகளை எளிதாக பெறமுடியும்.
மேற்கண்ட அடிப்படை விஷயங்களை பூர்த்தி செய்த பிறகு புட்வேர் பிசினஸில் எந்த வகையான மாடல்களை தயார் செய்வது அல்லது மார்க்கெட்டிங் செய்வது என்ற தீர்மானத்தை முடிவு செய்ய வேண்டும். காலணி அதாவது செருப்பு வகைகளில் அடிப்படையான மாடல்களிலிருந்து பேன்ஸி ஐட்டம் வரையில் விதவிதமான வகைகள் இருக்கின்றன. அவை அனைத்திற்குமே சந்தையில் எப்போதும் விற்பனைக்கான வாய்ப்புகள் நிச்சயம் இருந்து வரும்.
குறைந்த முதலீட்டில் ஆரம்பித்து செய்யக்கூடிய ஸ்லிப்பர் தயாரிப்பு பற்றிய அடிப்படை தகவல்களை இங்கே பார்க்கலாம்.
மூலப்பொருட்கள்
ஸ்லிப்பர் செருப்பு தயார் செய்வதற்கு ரப்பர் ஷீட் மற்றும் ஸ்லிப்பர் ஸ்ட்ராப் ஆகிய மூலப்பொருள்கள் அவசியமானவை. அதன் பின்னர் தயார் செய்த காலணியை கச்சிதமாக பேக்கிங் செய்வதற்கு சரியான அளவு கொண்ட பெட்டிகள் தேவை. அவற்றை எல்லாம் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்தும் எளிதாக தருவித்துக் கொள்ளலாம்.
கட்டிட அமைப்பு
சிறிய முதலீட்டில் தொழிலை தொடங்குபவர்கள், தாங்கள் குடியிருக்கும் வீட்டிலேயே ஒரு பகுதியில் தகுந்த எந்திரங்களை அமைத்து காலணிகளை தயார் செய்து விற்பனை செய்யலாம். பெரிய முதலீட்டில் இந்த தொழிலை தொடங்க திட்டமிட்டால் நூறு அல்லது நூற்றைம்பது சதுர அடி அளவுள்ள இடம் போதுமானது.
தேவைப்படும் முதலீடு மற்றும் எந்திரங்கள்
குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு ரூ.60 ஆயிரம் கூட போதுமானது. அதிக முதலீட்டில் தொழில் தொடங்க திட்டமிடுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 3 லட்சம் தேவைப்படக்கூடும். காலணி தயாரிக்க செமி ஆட்டோமேட்டிக் ஸ்லிப்பர் மேக்கிங் மிஷின் மற்றும் ஆட்டோமேட்டிக் ஸ்லிப்பர் மேக்கிங் மிஷின் என்று இரண்டு வகைகள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றின் விலை குறைந்த பட்சம் ரூ.15 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ. ஒன்றரை லட்சம் வரை இருக்கலாம்.
தயாரிப்பு முறை
செமி ஆட்டோமேட்டிக் எந்திரத்தில் ரப்பர் சீட்டை வைத்து அழுத்தி எடுக்க வேண்டியதாக இருக்கும். ஆனால் ஆட்டோமேட்டிக் இயந்திரத்தில் ஸ்விட்ச் ஆன் செய்யப்பட்டான் தேவையான வடிவத்தில் காலணிகள் கட்டிங் செய்யப்பட்டு வெளியே வந்துவிடும். அவற்றில் தகுந்த அளவு முறைகளுக்கு ஏற்ப துளைகள் செய்து அவற்றில் ஸ்டிராப்ஸ் பொருத்தி விட்டால் செருப்புகள் தயாராகிவிடும். மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் காலணியின் அளவுகள் வேறுபாடும் என்பதால். அளவிற்கு தகுந்ததுபோல் ரப்பர் சீட்டை கட் செய்து, காலணிகளை தயார் செய்ய வேண்டும்.
விற்பனைக்கான வாய்ப்பு
மேற்கண்ட முறைகளில் தயாரிக்கப்பட்ட காலணிகளை, சொந்தமாக கடை வைத்தும் விற்பனை செய்யலாம். இல்லையெனில் வீட்டில் இருந்தபடியேகூட விற்பனை செய்யலாம். இனிமையாக பேசும் திறமை உள்ளவர்கள் புட்வேர் பிசினஸ் மார்க்கெட்டிங்கில் நல்ல லாபத்தை பெறுகிறார்கள். பொதுவாக, வழக்கமான டிசைன்களில் தயார் செய்யப்பட்ட காலணிகளுக்கு ஒரு குறிப்பிட்ட விலை நிர்ணயமும், நவீன டிசைன்களில் தயாரிக்கப்பட்ட காரணிகளுக்கு குறிப்பிட்ட விலை நிர்ணயமும் செய்து விற்பனைக்கு வைக்க வேண்டும்.
புட்வேர் பிசினஸில் பல்வேறு மூலப்பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆண்கள், பெண்கள், இளவயதினர் மற்றும் குழந்தைகள் ஆகியோர்களுக்கான காலணிகள் வெவ்வேறு வகைகளில் இருக்கின்றன. தோல், கம்பளி, நைலான், பாலியஸ்டர், பாலிபுரோபைலீன், ரயான், சிந்தடிக் லெதர், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் ஆகிய பல்வேறு மூலப்பொருள்களை கொண்டு காலணிகள் தயார் செய்யப்படுகின்றன.
காலணிகளுக்கான தரப்பரிசோதனைகள்
தயாரிக்கப்பட்ட காலணிகளுக்கு துல்லியமான சோதனை, ஆய்வு, ஆலோசனை, பயிற்சி மற்றும் தர உத்தரவாத சேவைகளை மத்திய அரசு அமைப்பான புட்வேர் டிசைன் அண்டு டெவலப்மெண்டு இன்ஸ்டிட்யூட் (எப்.டி.டி.ஐ) அளித்து வருகிறது. மேலும், சில தனியார் அமைப்புகளும் தரத்திற்கான உத்தரவாத சான்றுகளை வழங்கி வருகின்றன. மேலும், சில்லறை விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் ஆகியோருக்கு இடையில் வர்த்தகரீதியான விநியோகச் சங்கிலியில் இடம்பெறுவதற்கான தர நிலைகளையும் மதிப்பீடு செய்து அளிக்கின்றன. அந்த சோதனைகளில் குழந்தைகளுக்கான காலணிகள், விளையாட்டு வீரர்களுக்கான காலணிகள், குறிப்பிட்ட வயதினருக்கான காலணிகள், முதியோர்களுக்கான காலணிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான காலனி வடிவமைப்பு மற்றும் அதன் நீடித்த உழைப்பு ஆகியவற்றுக்கான ரசாயன சோதனைகளை செய்து சான்றுகளை வழங்கி வருகின்றன.
பாண்டிங் டெஸ்ட் கலர் நீடிப்பு தன்மை, சாயங்களால் ஏற்படும் பாதிப்பு சோதனை, சரியான அளவு, பாகங்களை சரியாக ஒட்டப்பட்டுள்ள விதம், வாசனை சோதனை, வழவழப்புத் தன்மை, ஒரு அங்குலத்தில் அமைந்துள்ள தையல்கள், இடது, வலது காலணிகளில் உள்ள ஒற்றுமை, சரியான குதிகால் அளவு உள்ளிட்ட பல்வேறு தர கட்டுப்பாட்டு சோதனைகள் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்படும்.
சர்வதேச அளவிலான இந்த சான்றுகளை சீனா, பங்களாதேஷ், கம்போடியா, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் உள்ள பெருநிறுவனங்கள் இந்த சோதனைகளின் அடிப்படையில் சான்றுகளை பெறுகின்றன. நவநாகரீக வடிவமான ஷூ தயாரிப்புகளில் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெறுவதற்கு ஏற்ற வகையில் கடும் தரச்சோதனைகளை மேற்கொண்டு அதற்கு ஏற்ப சான்றிதழ் அளிக்க அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் புட்வேர் பிசினஸில் சிறந்த சேவைகளை தொழில் முனைவோர்களுக்கு அளித்து வருகின்றன.
பிரத்யேக காலணிகள்
இன்றைய காலகட்ட புட்வேர் பிசினஸ் சந்தையில் உடல்நலம் பேணும் பிரத்யேக காலணிகளுக்கு விசேஷ தேவைகள் இருப்பதால் அவற்றையும் கூடுதலாக தயாரிப்பதில் கவனம் செலுத்தலாம். சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி பலரும் உடல் நலம் பேணும் பிரத்யேக காலணிகளை பயன்படுத்துகிறார்கள். அவற்றை தயாரித்து விற்பனை செய்வது நல்ல லாபகரமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சர்க்கரை நோயளிகள் காலில் காயம் ஏற்படாமல் இருக்க பீடிங் பொருத்திய காலணிகள் உதவியாக இருக்கின்றன. எதன் மீதாவது மோதினால் காலில் அடிபடாமல் இவை காக்கின்றன.
பிஸியோதெரபி, அக்குபஞ்சர் சிகிச்சை பெறக்கூடியவர்கள் பாதங்களுக்கு அழுத்தம் கொடுக்கவும், ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ரத்த ஓட்டத்தை சீராக்கவும் பாலிமர் கவர் ஷீட் பொருந்திய காலணிகள் பொருத்தமாக இருக்கும் என்பதால் அதை அணிய டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். இவற்றை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது. இது போன்ற விஷேச காலணிகளை தயார் செய்யும் உற்பத்தியாளர்கள் அதிகமாக இல்லை என்பதால் கூலியாட்கள் மூலம் உற்பத்தியை அதிகமாக்கி வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள இயலும்.
நோயாளிகள் பயன்படுத்துவதற்கு ஏற்ற விசேஷ காலனி தயாரிப்பு பற்றி பல்வேறு மருத்துவமனைகளுக்கு தகவல் மற்றும் முகவரியை தருவது அவசியம். அதன் காரணமாக அவர்கள் தங்களது தேவைகளுக்கு சம்பந்தப்பட்ட புட்வேர் பிசினஸ் நிறுவனத்தை நிச்சயம் தொடர்பு கொள்வார்கள். அதற்கேற்ப சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் காலணிகளை டிஸ்ப்ளே செய்து காட்டலாம். சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்தின் அனுமதி பெற்று நோயாளிகளுக்கும் நேரடியாக விற்பனை செய்யலாம். கூடுதலாக மருந்து கடைகளிலும் விசேஷ காரணி பற்றிய தகவலை அல்லது அந்த காலணிகளை டிஸ்பிளே செய்து வியாபாரத்தை பெருக்கிக் கொள்ளலாம்.