கார் வாஷ் பிசினஸை திட்டமிட்டு செயல்படுத்துவதற்கான வழிவகைகள்
சமீப காலங்களில் குடும்ப ரீதியான வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக கணவன், மனைவி ஆகிய இருவரும் தனித்தனியாகவோ அல்லது இணைந்து தொழில் அல்லது வேலை வாய்ப்புகளில் ஈடுபடும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதன் காரணமாக தனிப்பட்ட குடும்ப வருமானம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குடும்பத்திற்கான ஒர்க் ஃபோர்ஸ் கூடுதலாக இருக்கும் காரணத்தால் அதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக வாகன வசதி மற்றும் சொந்த வீடு ஆகிய நிலைகளில் சம்பந்தப்பட்ட குடும்பம் வளர்ச்சியை எட்டுகிறது. அதனால் வீடுகளில் இரு சக்கர வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் பகுதிகளில் வங்கி கடன் மூலம் பெறப்பட்ட நான்கு சக்கர வாகனங்களான கார்கள் இடம் பிடித்து விட்டன. சமூக ரீதியாக ஏற்பட்ட இந்த மாற்றத்தின் விளைவால் கார் பராமரிப்பு என்ற விதத்திலும், இன்றைய சூழல் மாசுபாடு காரணமாகவும் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை காரை வாஷ் செய்ய வேண்டியது அவசியம். காரின் மீது எவ்வளவுதான் அக்கறை கொண்ட ஓனராக இருந்தாலும் காரை குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்வதற்காக கார் வாஷ் செய்யக்கூடிய ஒர்க் ஷாப்புக்கு கொண்டு செல்ல வேண்டியதாக இருக்கும். அந்த வகையில் கார் வாஷ் பிசினஸ் செய்யும் தொழில் முனைவோர்களுக்கு டிமாண்ட் ஏற்பட்டிருப்பதால், தொடர்ந்து பணி வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.
சில அடிப்படையான நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்த தொழிலில் இறங்கி வர்த்தக ரீதியாக நிச்சயம் வெற்றி காண முடியும் என்பதை ரோடுகளில் காணப்படும் கார்களின் எண்ணிக்கையை வைத்தே எளிதாக முடிவு செய்ய இயலும். சரி… கார் வாஷ் பிசினஸ் செய்ய முடிவு செய்தாகிவிட்டது. அடுத்து எந்த விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான செயல் திட்டத்தை இங்கே காணலாம். இங்கே காணப்போகும் திட்ட நடவடிக்கைகள் அனைத்தும் எளிமையான முதலீட்டில் தொழிலை தொடங்கி நடத்துவதற்கான வழிகளாகும். சிறுகக்கட்டி பெருக வாழ் என்று சொல்வதற்கேற்ப சிறியதாக தொடங்கி காலப்போக்கில் பெரியதாக தொழில் வளருவதே நல்ல வளர்ச்சியாக குறிப்பிடப்படும்.
வழக்கம்போல முதலீடு என்ற அஸ்திவாரத்தை மிகச் சரியாக நிர்ணயம் செய்ய வேண்டும். இந்த தொழிலில் முதலீடு என்பது கார் வாஷ் செய்வதற்கான மெஷினரி வகைகளை வாங்குவதற்காக தேவைப்படும். மேலும், வாடகை கட்டிடத்தில் இயங்க வேண்டியதாக இருந்தாலும் கூட தேவையான மின்சார வசதிகள் மற்றும் தண்ணீர் வசதிகள் ஆகியவை தடையில்லாமல் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். இந்த தொழிலுக்கு தண்ணீர் என்பது மிகவும் அத்தியாவசியமான துணை பொருளாக இருக்கிறது. குறிப்பாக, தண்ணீரின் தரம் குறித்த அடிப்படை பரிசீலனைகள் செய்ய வேண்டும். ஏனென்றால் தண்ணீரில் கலந்துள்ள உப்புக்களின் அளவு கூடுதலாக இருந்தால் அது நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது.
தொழில் தொடங்க வழக்கமாக தேவைப்படும் லைசன்ஸ் போன்ற நடைமுறைகள் இந்த தொழிலுக்கு அவ்வளவாக தேவைப்படுவதில்லை. நிறுவனப்பதிவு மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்திடமிருந்து பெறவேண்டிய பொதுவான அனுமதி ஆகியவையே இதற்கு போதுமானதாகும். ஒரு நல்ல பெயரை தேர்வு செய்து அதை அழகான ஒரு போர்டில் பல வண்ணங்கள் பிரதிபலிக்கும்படி எழுதி மாட்டி வைக்கலாம்.
கார் வாஷ் பிசினஸ் தொடங்குவதற்கு அடிப்படையான மெஷினரிகள் வாங்குவதற்கு சுமார் ரூ. 75 ஆயிரத்தில் இருந்து ரூ.1.25 லட்சம் ஆகலாம். இந்த மெஷினரிகளை ஆன்லைன் மூலமாகவும் ஆர்டர் அளித்தும் அல்லது உள்ளூரிலேயே வாங்குவதும் இயலும். அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
பிரஷர் வாஷர் மெஷின்
காரை சுத்தப்படுத்துவதற்கான பிரதான எந்திரம் இது. பெயருக்குத் தகுந்தாற் போல காற்றைப் பயன்படுத்தி தண்ணீரை அதிவிரைவாக காரின் மீது பீச்சி அடிக்கும் தொழில்நுட்பம் கொண்டது. இந்த இயந்திரத்தை ஒரு வாட்டர் டேங்க் உடன் இணைப்பு கொடுத்து அதில் இருந்து நேரடியாக நீரை உறிஞ்சி எடுத்து கார் மீது பீச்சி அடிக்கும் வகையில் இதன் செயல்பாடு அமைந்திருக்கும். இந்த எந்திரத்தை பொறுத்தவரையில் பிரபலமான சர்வதேச நிறுவனங்களின் தயாரிப்புகள் சந்தையில் கிடைக்கின்றன. அதனால் சரியான ஆலோசனை பெற்ற பின்னர் நிறுவனத்தின் தேவைகளுக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட மாடல் இயந்திரத்தை வாங்கிக் கொள்ளலாம்.
கிளீனிங் மெட்டீரியல்ஸ்
கார் வாஷ் செய்வதற்கென்றே தனிப்பட்ட முறையில் சுத்தப்படுத்தும் ரசாயனங்கள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றில் தரமான தயாரிப்புகளை தேர்வுசெய்து பயன்படுத்த வேண்டும். கிளீனிங் மெட்டீரியல்ஸ் என்ற வகையில் டிடர்ஜென்ட்கள் மற்றும் ஃபோம் வகைகள் உள்ளிட்ட சில மிக்ஸிங் ரசாயனங்களை தேவைப்படக்கூடிய அளவில், வாங்கி இருப்பில் வைத்துக்கொள்வது அவசியம்.
கார் பாலிசிங் மெஷின்
கார் வைத்திருப்பவர்கள் அடிக்கடி கேள்வி படக் கூடிய ஒரு விஷயம் டீடெய்லிங் என்பதாகும். அதாவது காருக்கு தேவையான மெழுகு கோட்டிங் அல்லது டெப்லான் கோட்டிங் ஆகிய மேல் பூச்சுகளை அளிப்பதற்கான ஒரு வட்ட வடிவமான உபகரணம் இதுவாகும். பளபளப்பான புத்தம் புதிய தோற்றத்தை அளிக்கக்கூடிய இந்த டீடெய்லிங் முறை என்ற இந்த சேவையை கார் உரிமையாளர்கள் விருப்பப்படும் நிலையில் இந்த அளிக்கலாம்.
கார் வேக்குவம் கிளீனர்
இந்த உபகரணத்தை பயன்படுத்தி காரின் உட்புறங்களில் படிந்துள்ள தூசி துரும்புகளை எளிதாக உறிஞ்சி எடுத்து விட முடியும். இன்டீரியர் கிளீனிங் என்ற இந்த பணியை மேனுவல் முறையில் ஆட்கள் செய்தால் நிச்சயம் காரின் உட்புறம் சுத்தம் செய்யப்பட்ட உணர்வை அளிப்பதில்லை. நல்ல திறன்வாய்ந்த வேக்வம் கிளீனர் மூலம் டேஷ்போர்டு, கால் வைக்கும் பகுதி, முன்புற சீட், பின்புற சீட், அவற்றின் கீழ் பகுதிகள் ஆகியவற்றிலுள்ள தூசிகளை சுத்தமாக அகற்றுவதற்கு இதுதான் சிறந்த வழிமுறையாகும்.
வாட்டர் டேங்க்
நீரை சேமித்து வைப்பதற்கு சிமெண்ட் மூலம் அல்லது பிளாஸ்டிக் தொட்டிகள் பயன்படுத்தப்படலாம். பொதுவாக சொந்த கட்டிடங்களில் செயல்படும் கார் கிளீனிங் நிறுவனங்கள் கான்கிரீட் தொட்டிகளை 10,000 முதல் 15,000 லிட்டர் வரையில் கொள்ளளவு கொண்டதுபோல் அமைத்திருப்பார்கள். வாடகை கட்டிடம் என்ற நிலையில் சுலபமாக வாங்கி வேண்டிய இடத்தில் அமைத்துக் கொள்வதற்கு வசதியாக உள்ள பிளாஸ்டிக் வாட்டர் டேங்க் அமைப்புகளை தேவையான கொள்ளளவில் வாங்கிப் பயன்படுத்தலாம். அதன் உபயோகத்திற்கு ஏற்ப கூடுதலான வாட்டர் டேங்க் அமைப்புகளையும் ஏற்பாடு செய்து கொள்ளலாம்.
கார் வாஷ் பிசினஸ் என்ற நிலையில் வாடிக்கையாளர்களுக்கு எந்த வகையிலான சேவையை அளிப்பது என்பதை திட்டமிட்டு, அதற்கான அனைத்து தகவல்களையும் ஒரு பேனர் வடிவில் தயார் செய்து அனைவரது கண்களில் படும்படியாக மாட்டி வைக்க வேண்டும். குறிப்பிட்ட ஒரே சர்வீஸ் என்றால் அதற்கான ஒரு தொகையும், ஒரே முறையில் ஒன்றுக்கும் மேற்பட்ட வெவ்வேறு சர்வீஸ் வகைகள் செய்யப்பட வேண்டும் என்றால் அதற்கான ஒரு தொகையும் கணக்கிட்டு அதை வாடிக்கையாளர்கள் உடைய கண்களில் படுவது போன்று தெளிவாக மாட்டி வைக்க வேண்டும். அதாவது வெறும் கார் வாஷிங் மட்டும் என்றால் அதற்கு ஒரு கட்டணம். கார் வாஷிங் மற்றும் வேக்குவம் கிளீனர் என்றால் அதற்கு ஒருவகையான கட்டணம். கார் வாஷிங், கார் பாலிசி மற்றும் கார் வேக்குவம் கிளீனிங் என்றால் அதற்கு ஒருவகையான கட்டணமும் பெற வேண்டும். மேலும், வாஷிங், வேக்குவம் கிளீனிங், பாலிசிங் மற்றும் வாக்ஸ் அல்லது டெப்லான் கோட்டிங் என்றால் அதற்கு வேறொரு வகையான கட்டணமும் கணக்கிட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். மேற்கண்ட சர்வீஸ் வகைகளுக்கு பெறப்படும் கட்டணம் என்பது குறிப்பிட்ட நிறுவனத்தைப் பொறுத்து மாறுபடக்கூடும். அல்லது சம்பந்தப்பட்ட ஏரியாவுக்கு ஏற்றார்போல, தொழில்முறை போட்டிகள் காரணமாக கட்டணங்களில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடும்.
பிரான்சைஸி முறை
கார் வாஷ் பிசினஸ் முறையிலும் பிரபலமான நிறுவனங்களின் பிரான்சைஸி பெற்று தொழிலை செய்து வர முடியும். இந்த முறையில் உள்ள ஒரு சவுகரியம் என்னவென்றால் சம்பந்தப்பட்ட நிறுவனம் தேவையான மிஷினரி ஐட்டங்களை தந்துவிடுவார்கள். மின்சாரம், தண்ணீர் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட வசதிகளின் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு தகுந்த சேவையை அளிக்க வேண்டும். அதற்கு சம்பந்தப்பட்ட பெரிய நிறுவனத்திற்கு குறிப்பிட்ட அளவு கமிஷன் அளிக்க வேண்டியது இருக்கும். பெரும்பாலான தொழில்முனைவோர்கள் இந்த முறையை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. இதற்கான காரணம் என்பது வெளிப்படையானது. அதாவது அதிகமான பொருளாதார முதலீடுகளை செய்யாமல், உழைப்பை மட்டுமே முதலீடாக கொண்டு முன்னேற விரும்புபவர்களுக்கு இந்த முறை ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்திருக்கிறது.
மொபைல் வாட்டர் சர்வீஸ்
உழைப்பையே மூலதனமாகக் கொண்டு முன்னேற வேண்டும் என்று முனைப்போடு செயல்படும் தொழில் முனைவோர்களுக்கு அருமையான வாய்ப்பாக அமைந்துள்ள தொழில் மொபைல் வாட்டர் சர்வீஸ் என்பதாகும். இந்த முறையில் ஒரு சிறிய நான்கு சக்கர வாகனம் இருந்தால் போதுமானது. அதில் இரண்டு குதிரை திறன் அளவு சக்தி கொண்ட ஹை பிரஷர் வாட்டர் கன் மெஷின், அந்த மெஷின் உடன் வாட்டர் இன்லெட் மற்றும் வாட்டர் அவுட்லெட் ஆகிய இரண்டு குழாய்கள் பொருத்தப்பட்டு சுத்தப்படுத்தும் பணியை எளிதாக செய்ய முடியும். வாடிக்கையாளர் காரை சுத்தம் செய்வதற்காக எங்கும் செல்ல வேண்டியதில்லை. வீட்டிலிருந்து ஒரே ஒரு போன் செய்தால் ஒரு சிறிய வாகனத்தில் செயல்படக்கூடிய மொபைல் கார் வாஷ் சர்வீஸ் வசதி வாடிக்கையாளர் வீட்டு வாசலுக்கு வந்து விடும். இந்த முறையில் மூன்று அல்லது நான்கு பக்கெட் தண்ணீர் இருந்தால் போதுமானது. ஹை பிரஷர் வாட்டர் கன் மூலமாக நீரை கச்சிதமாக உறிஞ்சி எடுத்து, உயர் அழுத்தத்தில் வெளியேறும் தண்ணீரை கார் மீது செலுத்தி எளிதாக சுத்தம் செய்ய இயலும். அந்த வாட்டர் கண் என்பது நீரை குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் பீச்சி அடிப்பது போன்றும் செய்யலாம் அல்லது பரவலான முறையில் காரின் மீது கழுவும் விதமாக பீச்சி அடிக்கும்படியும் செய்யலாம். அதற்கேற்ற அட்ஜஸ்ட்மெண்ட் முறைகள் அதில் தரப்பட்டுள்ளன. மேலும் வாடிக்கையாளர் விருப்பப்பட்டால் வாக்குவம் கிளீனர் மற்றும் டீடெய்லிங் முறையிலான சேவைகளையும் அளிக்க முடியும்.
தொழிலில் அனுபவம் பெற்று பின்னர் அதை நிறுவனமாக தொடங்கி நடத்த வேண்டுமென்று ஆர்வமுடைய இளைஞர்களுக்கு இந்த கார் வாஷ் பிசினஸ் செயல்திட்டம் ஆனது சிறந்த வாய்ப்பாக இருக்கிறது. எப்படி என்றால் மேலே நாம் கண்ட ஹை பிரஷர் வாட்டர் மிஷின் ஒன்றை மட்டும் மிகவும் குறைந்த பட்ஜெட்டில் வாங்கி, அதை ஒரு இருசக்கர வாகனத்தில் மட்டும் வைத்து எடுத்துச் சென்று, வாடிக்கையாளருடைய வீட்டு வாசலில் வைத்து கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களை சிறப்பான முறையில் வாட்டர் வாஷ் செய்து தர முடியும். அதன் எடை கிட்டத்தட்ட 10 முதல் 14 கிலோகிராம் என்ற அளவில்தான் இருக்கும். உழைக்கும் மனதுடன் களத்தில் இறங்கும் இளைஞர்களுக்கு இந்த மொபைல் வாட்டர் வாஷ் என்பது சிறந்த தொழில் வாய்ப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.