கம்ப்யூட்டர் பிசினஸ் தொடங்க விரும்பும் தொழில் முனைவோர்களுக்கான முக்கிய தகவல்கள்
இந்திய அளவில் ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தாலும், கம்ப்யூட்டர்களுக்கான தேவையும், பயன்பாடும் சம அளவில் அதிகமாகி வருவதாக தெரிய வந்துள்ளது. லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் ஆகிய இரு கம்ப்யூட்டர் வகைகளுமே தனிப்பட்ட பயன்பாடு மற்றும் அலுவலக பயன்பாடு ஆகிய இரு நிலைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டில், இந்திய அளவிலான கம்ப்யூட்டர் விற்பனை சுமார் 16 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் விற்பனை அளவு கூடுதலாகி கொண்டே செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விண்டோஸ் 7 வகையைச் சேர்ந்த கம்ப்யூட்டர்கள் விண்டோஸ் 10 வகைக்கு அப்டேட் செய்யப்பட வேண்டும் என்பதால் கம்ப்யூட்டர் விற்பனை கூடுதலாக ஆக இருப்பதாகவும் சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் தெரிவித்திருக்கிறது.
வர்த்தகம், வியாபாரம், தொழில், வேலை வாய்ப்பு, தனிப்பட்ட பயன்பாடு மற்றும் பொழுது போக்கு ஆகிய பல்வேறு நிலைகளில் ஒரு கம்ப்யூட்டரின் தேவை என்பது வாழ்க்கையோடு மிக நெருக்கமாக ஒன்றிணைந்து விட்டது. சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்குமே அன்றாட வாழ்க்கையில் கம்ப்யூட்டர் என்பது ஏதாவது ஒரு வகையில் தொடர்பு பெற்றதாகவே உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் மக்கள் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதன் காரணமாக, ஒர்க் ஃப்ரம் ஹோம், ஆன்லைன் கிளாஸ், வீட்டிற்குள்ளேயே பொழுதுபோக்கு விளையாட்டுகள் என்ற பழக்கம் அதிகரித்துள்ள நிலையில் கம்ப்யூட்டர், லேப்டாப், வொர்க் ஸ்டேஷன் போன்றவற்றுக்கான தேவையும், விற்பனையும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கம்ப்யூட்டர் விளையாட்டுகளுக்கான பிரிவில் அதிக விற்பனை வாய்ப்பு இருப்பதால் வரும் காலங்களில் கணினி விற்பனை மேலும் அதிகரிக்கக்கூடும். இந்த தகவல்களின் அடிப்படையில், தற்போது கம்ப்யூட்டர் பிசினஸ் என்பது தொழில் முனைவோர்களுக்கு சிறப்பான வாய்ப்பை ஏற்பட்டுத்தி தந்துள்ளதாக சொல்லலாம்.
கம்ப்யூட்டர் பிசினஸ் என்பதை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டும் அடக்கிவிட முடியாது. வர்த்தக ரீதியாக கம்ப்யூட்டர் தொழில் என்றால் அது ஹார்டுவேர் சம்பந்தப்பட்டதா அல்லது சாப்ட்வேர் சம்பந்தப்பட்டதா என்ற நிலைகளை தேர்வு செய்ய வேண்டும். மேலும், சாப்ட்வேர் டெவலப்பிங், கம்ப்யூட்டர் ரிப்பேர் மற்றும் சர்வீஸ் நிறுவனம், கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம், கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங், பிசினஸ் கம்ப்யூட்டர் கன்சல்டன்ட் ஆகிய பல்வேறு நிலைகளில் இதற்கான தொழில் வாய்ப்புகள் இருக்கின்றன.
தொழில் பிரிவுகள்
பொதுவாக, கம்ப்யூட்டர் பிசினஸ் என்றால் லேப்டாப், டெஸ்க்டாப் மற்றும் டேப்லட் ஆகியவற்றை விற்பனை செய்யக்கூடிய நிறுவனம் என்பதாக கணக்கில் கொள்ளப்படுகிறது. அவ்வாறு விற்பனை செய்வதை இரண்டு வகைகளில் செய்யலாம்.
முதலாவது, புகழ் பெற்ற நிறுவனங்களின் லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் வகைகளை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வது ஆகும். அத்துடன், சம்பந்தப்பட்ட பெரிய நிறுவனங்களின் பிரான்சைஸி ஆகவும் தொழில் முயற்சியை தொடங்கி செய்து வரலாம்.
இந்த தொழிலில் இரண்டாவது பிரிவு என்னவென்றால் ஒரு கம்ப்யூட்டருக்கு தேவையான உதிரிபாகங்களை கச்சிதமாக தேர்வு செய்து, தொடங்கப்பட்ட நிறுவனத்தின் சார்பில் அவற்றை தகுந்த தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தி ஒருங்கிணைத்து, அசெம்பிள் கம்ப்யூட்டர் என்ற முறையில் வாடிக்கையாளர்களுக்கு அவர்களுடைய பட்ஜெட்டுக்கு ஏற்ற முறையில் விற்பனை செய்வதாகும்.
வர்த்தக ரீதியாக கம்ப்யூட்டர் பிசினஸ் மேற்கொள்ள விரும்பும் தொழில் முனைவோர்கள் இந்த துறையில் சில அடிப்படையான விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே தொழில் மற்றும் வர்த்தகம் ஆகிய நிலைகளில் இந்த துறை அனுபவம் பெற்றவர்களுக்கு இங்கே குறிப்பிடப்படும் அடிப்படை தகவல்கள் பற்றிய பரிச்சயம் இருக்கலாம். இருந்தாலும் புதிதாக தொழிலில் நுழைய விரும்பும் தொழில் முனைவோர்களுக்கு இந்த தகவல்கள் அவசியம் தேவைப்படக்கூடும் என்பதால் அவற்றைப் பார்ப்போம்.
ஒரு வர்த்தக நிறுவனம் என்பதால், அதற்கான பெயரில் தொழில் செய்வதற்கான உரிமம், மற்றும் பதிவு எண் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட மாநில அரசிடமிருந்து பெற வேண்டும். அத்துடன் உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து பெற வேண்டிய மற்ற உரிமங்களையும் பெற வேண்டும். ஜி.எஸ்.டி வரி செலுத்துவதற்கான பதிவு எண்ணையும் பெறுவது அவசியம். பிரபலமான கம்ப்யூட்டர் நிறுவனத்தின் பிரான்சைஸியாக செயல்பட விரும்புபவர்கள், சம்பந்தப்பட்ட கம்பெனி அளித்த அங்கீகாரத்தை வர்த்தக ரீதியாக முன்னிலைப்படுத்துவது அவசியம்.
பொதுவாக, கன்ஸ்யூமர் பாயிண்ட் ஆப் வியூ என்ற நிலையில் வர்த்தக ரீதியாக சந்தையில் பிரபலமாக உள்ள பெரிய நிறுவனங்களின் பொருட்களை விற்பது அவர்களது மதிப்பை பெற்றதாக இருக்கும். அதனால், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு என்று பிராண்ட் நேம் நல்ல விதத்தில் உருவாக அடிப்படையாகவும் அந்த முயற்சி இருக்கும். மேலும், பிராண்டட் கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் வகைகளையும், விற்பனை செய்தும் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற முடியும்.
கம்ப்யூட்டர் பிசினஸ் என்ற அளவில் விற்பனை மையம் செயல்பட்டு வந்தாலும் கூட, அங்கு ஷோரூம் வசதி, சர்வீஸ் என்ஜினியர்கள், வாடிக்கையாளர்களின் வர்த்தகம் மற்றும் தொழில் அல்லது கல்வி சம்பந்தமான தேவைகளுக்கு ஏற்ப எந்த வகையான கம்ப்யூட்டர் வகையை வாங்கலாம் என்று ஆலோசனை தரக்கூடிய தொழில்நுட்ப ஆலோசகர்கள், ஆன்லைன் ஆர்டர்களுக்கு ஏற்ப ஹோம் டெலிவரி வசதி, வீடுகளுக்கு மற்றும் அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று சர்வீஸ் செய்து தரக்கூடிய வசதி, இன்னும் கூடுதலான ஒரு அம்சமாக, நம்பத்தகுந்த வாடிக்கையாளர்களுக்கு தவணை முறையில் கம்ப்யூட்டர் விற்பனை ஆகிய பல்வேறு வசதிகளை அளிக்க வேண்டும். படிப்படியாக இந்த தொழிலில் கிடைக்கும் அனுபவத்தின் அடிப்படையில், மேலும் பல சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கலாம். இல்லாவிட்டால் நடைமுறைக்கு பொருத்தமாக இல்லாத சேவைகளை குறைத்துக் கொள்ளலாம்.
பிராண்டடு கம்ப்யூட்டர்
பிரபலமாக உள்ள நிறுவனங்களின் கம்ப்யூட்டர் வகைகளை தேர்வு செய்து வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் நன்மைகளை கீழ்க்கண்ட விதத்தில் பட்டியலாக குறிப்பிடலாம்.
- ஒரு முழுமையான கம்ப்யூட்டருக்கு தேவையான அனைத்து விதமான பாகங்களும் ஒரே பேக்கிங்கில் கிடைத்துவிடும். மேலும், ஓ.எஸ் என்று சொல்லக்கூடிய விண்டோஸ், மாக், உபுண்டு போன்ற ஆப்பரேட்டிங்க் சிஸ்டம் வகைகள் பிராண்ட் கம்ப்யூட்டர்களில் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும். அதனுடைய செலவையும் சேர்த்து கம்ப்யூட்டரின் விலை நிர்ணயம் செய்யப்படும். எனவே, பிராண்டட் கம்ப்யூட்டருக்கு என்று தனிப்பட்ட ஓ.எஸ் இன்ஸ்டால்லேஷன் தேவை இருக்காது.
- பிராண்டட் கம்ப்யூட்டர்களிலும் இண்டெல் ஒரிஜினல் மதர் போர்டு அமைக்கப்பட்டிருக்கும் என்பதால் அதன் சிறப்பான செயல்பாட்டுக்காக சில ஸ்பெசல் செட்-அப் அமைப்புகள் சாப்ட்வேர்கள் மூலம் உருவாக்கப்பட்டு, பையாஸ் அப்டேஷன் மற்றும் டிரைவர்ஸ் அப்டேஷன் என பல வகையான அப்டேஷன் மூலம் அந்த மதர்போர்டு சிறப்பாக செயல்பட ஏற்பாடும் செய்யப்பட்டிருக்கும்.
- பிராண்டட் கம்ப்யூட்டர் ஹார்டுவேர் பாகங்கள் விரைவில் எளிதாக பாதிக்கப்படாமல் பல நிலைகளில் பாதுகாப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கும். அதாவது, சி.பி.யூ கேஸில் பொருத்தப்பட்டிருக்கும் பவர் பாக்ஸ் ஸ்விட்ச்டு மோடு பவர் சப்ளை என்பது அதில் இணைக்கப்பட்டிருக்கும் ஹார்டுவேர்களுக்கென பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்டிருக்கும். மேலும், மதர்போர்டு, பிராசசர், ஹார்டுடிஸ்க், டி.வி.டி பிளேயர் என ஒவ்வொரு பாகத்திற்கும் மிகச்சரியான முறையில் அவற்ரின் கெப்பாசிட்டிக்கு ஏற்ற வகையில் மின்சார சப்ளை செய்யப்படும் அளவை பிரித்து கொடுக்கும் வகையில் அவை சிறப்பாக செயல்படுகின்றன.
- பிராண்டட் கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்கள், அவற்றின் தயாரிப்புகள் பொருத்தும் ஹார்டுவேர்களில் சிறந்தவற்றை தேர்வு செய்து, அவற்றை திறமையான வல்லுனர்கள் மூலம் கச்சிதமாக இணைக்கப்படும் என்பதால், அவற்றின் ஹார்டுவேர் செயல்பாடு பற்றிய கவலை கொள்ள வேண்டியதில்லை. அதனால், நீண்ட காலத்துக்கு பிரச்சினைகள் இல்லாமல் கணினி பயன்பாடு என்பது சாத்தியமாகிறது.
- கம்ப்யூட்டர்களை விற்பனை செய்யும் பிரபலமான நிறுவனங்கள் அந்தந்த பிராண்ட் பெயரில் இணைய தளங்களை வைத்திருப்பதால், சம்பந்தப்பட்ட கம்ப்யூட்டர்களுக்கு அதில் இணைக்கும் ஹார்டுவேர் பாகங்கள் அனைத்துக்கும், அப்டேட் செய்யக்கூடிய டிரைவர்களை இணைய தளங்களில் அந்தந்த மாடல் நம்பருக்கு ஏற்ற வகையில் அளித்திருப்பார்கள். அதனால், ஹார்டுவேர் சம்பந்தமான டிரைவர்களை அப்டேட் செய்வதில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. மேலும், அந்த இணைய தளங்களில் இ-மெயில் சைன் அப் செய்து கொண்டால், அப்டேஷன் பற்றிய தகவல்களை அவ்வப்போது தெரிவித்து வருவார்கள்.
அசெம்பிள் கம்ப்யூட்டர்
சில தனியார் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் பட்ஜெட் அடிப்படையில் பிராண்டட் கம்ப்யூட்டர் வாங்குவதற்கு பதிலாக அசம்பிள் கம்ப்யூட்டர் வாங்கும் முடிவை எடுக்கிறார்கள். வாடிக்கையாளர் விருப்பம் என்பதை ஒரு தொழில் முனைவோர் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த முறையில் இருக்கக்கூடிய சாதகமான அம்சங்கள் மற்றும் சிக்கல்கள் ஆகியவற்றை வாடிக்கையாளர்களுக்கு முன்னதாகவே ஒரு தொழில் முனைவோர் தெளிவாக சொல்லிவிட வேண்டும். இயன்ற வரையில் கன்ஸ்யூமர் சாடிஸ்பேக்ஷன் என்ற நிலையில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதும் கம்ப்யூட்டர் பிசினஸ் சந்தையில் தாக்கு பிடிக்க உதவியாக இருக்கும்.
அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றாலும் கூட தரமான கம்ப்யூட்டர் பாகங்களை இணைத்து வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற விலையில் கம்ப்யூட்டரை விற்பனை செய்வது என்பது ஒரு கலையாகும். பொதுவாக, அசம்பிள் செட் என்று சொல்லப்பட்டாலும் கூட ஒரு திறமை வாய்ந்த கம்ப்யூட்டர் தொழில் முனைவோர் அதற்குரிய சிறந்த பாகங்களை தேர்வு செய்து பிராண்டட் கம்ப்யூட்டர் செயல்படும் அதே அளவிற்கு அதன் செயல் திறனை வெளிப்படுத்தும்படி செய்ய முடியும். அவ்வாறு வர்த்தக ரீதியாகவும், டெக்னிக்கல் அளவிலும் ஒரு தொழில் முனைவோர் செயல்பட வேண்டும்.
கம்ப்யூட்டர் அசம்பிள் செட் உருவாக்குவதற்கான பாகங்கள் பற்றிய தகவல்கள்:
- சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட்
- மதர் போர்டு
- பிராசஸர் வகைகள் ஐ-3, ஐ-5, ஐ-7 போன்ற பல்வேறு தரநிலைகளில் இவை கிடைக்கின்றன.
- ரேண்டம் ஆக்ஸ் மெமரி என்ற ராம் வகைகள். இவை ஃபோர் ஜி.பி மற்றும் 8 ஜி.பி என்ற வகைகளில் கிடைக்கின்றன
- ஹார்ட் டிஸ்க்
- டிவிடி ரோம்
- ஐ.டி.இ மற்றும் எஸ்.ஏ.டி.ஏ கேபிள்கள்
- ஒரு மானிட்டர்
- வி.ஜி.ஏ.கேபிள்கள்
- பவர் கேபிள்கள்
- கீபோர்டு மற்றும் மவுஸ்
- கம்ப்யூட்டர் ஸ்பீக்கர்
தொழில் அனுபவம் பெற்ற கம்ப்யூட்டர் தொழில் முனைவோர் மேற்கண்ட பாகங்களை சிறப்பாக ஒன்றிணைத்து ஒரு அருமையான அசெம்பிள் கம்ப்யூட்டரை உருவாக்கி விடுவார். அதன் பின்னர் வர்த்தக ரீதியாக வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய வழக்கமான சேவைகள் மற்றும் தொழில்நுட்ப அப்டேட் ஆகியவற்றை செய்து தர வேண்டும். மேலும், வாடிக்கையாளரது வர்த்தகம் அல்லது தொழிலுக்கு தேவையான பல்வேறு வகையான மென்பொருள் பற்றிய தகவல்களையும் அளிக்க வேண்டும். அவற்றை தரவிறக்கம் செய்வது குறித்த அனைத்து டெக்னிக்கல் விஷயங்களையும் வாடிக்கையாளருக்கு எடுத்துச் சொல்லுவது கம்ப்யூட்டர் பிசினஸ் தொழில் முனைவோருக்கு அவசியமானது.