சரக்கு மற்றும் சேவை வரி இந்தியாவின் வரி அமைப்பில் மிகவும் சர்ச்சைக்குரிய மற்றும் அதிகம் பேசப்பட்ட மாற்றங்களில் ஒன்றாகும். இந்தியாவில் ஜிஎஸ்டி நடைமுறைக்கு வருவதற்கு முன்பிருந்த வரியமைப்பு பல்வேறு வகையான வரிகளின் தாறுமாறான ஒரு கலவையாக இருந்தது, இவற்றில் நகர மட்டத்தில் விதிக்கப்பட்டிருந்த சில வரிகள் பல சிக்கல்களை உருவாக்கியதோடு ஊழலுக்கு ஆதாரமாகவும் இருந்தது.
முந்தைய வரி அமைப்பு ஒரு அடுக்கு வரி விளைவை உருவாக்கியது, இது வரி மீதான வரிவிதிப்பை ஏற்படுத்தியது, இது கண்காணிப்புக்கு உகந்ததாக இல்லை. இது குழப்பத்திற்கு காரணமாக இருந்ததோடு சிக்கலான இந்த அமைப்பின் பராமரிப்பு செலவுக்கும் வழி வகுத்தது.
ஜிஎஸ்டி அதை மாற்றி, பல வரிகளை ஒன்றில் சேர்த்து, நாட்டில் மிகவும் வெளிப்படையான வரி ஆட்சிக்கு வழிவகுத்தது. எல்லா வரிகளையும் போலவே, விலைகள் மற்றும் உற்பத்தியின் சமூக-பொருளாதார மதிப்பைப் பொறுத்து வெவ்வேறு தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு வெவ்வேறு அடுக்குகள் உள்ளன. இந்தியாவில் ஜிஎஸ்டி பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப மாற்றப்படும் ஒரு வலுவான வீதமாக உள்ளது.
இந்தியாவில் தற்போதைய ஜிஎஸ்டி விகிதம் 37 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் திருத்தப்பட்டது. ஜிஎஸ்டி அமைப்பின் கட்டமைப்பு ஒப்பீட்டளவில் எளிமையானது மற்றும் நேரடியானது. ஜிஎஸ்டி அமைப்பில் வரி விலக்கு அடுக்கு, 5% அடுக்கு, 12% அடுக்கு, 18% அடுக்கு மற்றும் 28% அடுக்கு என ஐந்து அடுக்குகள் உள்ளது.
இந்த அடுக்குகள் கீழே விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
வரி விலக்கு பொருட்கள்
சராசரி வரி செலுத்துவோரின் சுமையை குறைக்க பழங்கள், காய்கறிகள், ரொட்டி, உப்பு, மாவு, முட்டை, செய்தித்தாள்கள் போன்ற அன்றாட பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
சேவைத் துறையை பொறுத்தவரை ஒரு இரவுக்கு அறை வாடகையாக ரூ 1000க்கு குறைவாக வசூலிக்கும் ஓட்டல்கள், அத்துடன் சேமிப்பு கணக்குகள் மற்றும் ஜன் தன் யோஜனா மீதான வங்கிக்கட்டணங்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
5% வரி ஸ்லாப்
ஜிஎஸ்டி வரி உண்மையில் தொடங்கும் இடத்தில் 5% வரி அடுக்கு உள்ளது. கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர், காபி, மீன் ஃபில்லெட்டுகள், நிலக்கரி, உரங்கள், ஆயுர்வேத மருந்துகள், இன்சுலின், முந்திரி கொட்டைகள், ஊதுபத்தி, எத்தனால் – திட உயிரி எரிபொருள்கள் போன்றவை 5% ஜிஎஸ்டி வரியை ஈர்க்கும் பொருட்களில் சிலவாகும்
இந்தியாவில் 5% வரி அடுக்கில் உள்ள சேவைகளுக்கான ஜிஎஸ்டி விகிதத்தில் ரயில் மற்றும் விமான போக்குவரத்தோடு சிறிய உணவகங்கள், தனித்தியங்கும் ஏசி உணவகங்கள், ஏசி வசதியில்லாத உணவகங்கள் மற்றும் மதுவை வழங்கும் உணவகங்கள் போன்றவை அடங்கும்.
ஒரு இரவுக்கு அறை வாடகையாக ரூ. 7,500க்கு குறைவாக வசூலிக்கும் ஓட்டல்களுடன் பார்சல் உணவுகளும் இந்த வட்டத்திற்குள் வருகிறது. இந்தப் பிரிவில் உணவகங்களுக்கான உள்ளீட்டு வரிச்சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது சிலரின் அதிருப்திக்கு வழிவகுத்துள்ளது.
12% ஜிஎஸ்டி அடுக்கு
12% அடுக்கு உறைந்த இறைச்சி பொருட்கள், வெண்ணெய், தொத்திறைச்சி, நெய், ஊறுகாய், பழச்சாறுகள், நம்கீன், பல் தூள், உடனடி உணவு கலவை, குடை, மருந்து, செல்போன்கள், மனிதனால் உருவாக்கப்பட்ட நூல், ஓவியத்திற்கான மரச்சட்டங்கள், புகைப்படங்கள் , பித்தளை மண்ணெண்ணெய் பிரஷர் அடுப்பு, இரும்பு, கண்ணாடியினால் செய்த கலைப்பொருட்கள் மற்றும் அவற்றைப் போன்ற பல பொருட்களை உள்ளடக்கியுள்ளது.
சேவைகள் பிரிவில், பிஸ்னஸ் கிளாஸ் விமான டிக்கெட்களுக்கும் ரூ.100க்கு குறைவான திரைப்பட டிக்கெட்களுக்கும் இந்த வரி பொருந்தும்.
18% ஜிஎஸ்டி அடுக்கு
பெரும்பாலான பொருட்கள் இந்த வகையின் கீழ் வரும் வகையில் இந்தியாவில் ஜிஎஸ்டி வீதம் கட்டமைக்கப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, கார்ன்ஃப்ளேக்ஸ், பாஸ்தா, பேஸ்ட்ரிகள் மற்றும் கேக்குகள், சவர்க்காரம், சலவை மற்றும் சுத்தம் செய்யப் பயன்படும் தயாரிப்புகள், கண்ணாடி, கண்ணாடி பொருட்கள், பாதுகாப்பு கண்ணாடி, விரிப்புகள், பம்புகள், லைட் ஃபிட்டிங், கம்ப்ரசர்கள், ஃபேன்கள், சாக்லேட், டிராக்டர்கள், பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், ஐஸ்கிரீம், தொலைக்காட்சிப் பெட்டி (68 செ.மீ வரை) போன்றவை இந்தப் பட்டியலில் அடங்கும் முக்கியப் பொருட்களில் சிலதாகும்.
பளிங்கு மற்றும் கிரானைட், பெயிண்ட்டுகள், வாசனை ஸ்ப்ரேக்கள், ஹேர் ஷேவர்ஸ், லித்தியம் அயன் பேட்டரிகள், செயற்கை பழங்கள், ஹேர் கர்லர்ஸ், ஹேர்டிரையர்கள், தரையில் பதிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள், வேக்குவம் கிளீனர்கள், சானிட்டரிவேர், லெதர் ஆடை, கைக்கடிகாரங்கள், குக்கர்கள், அடுப்புகள், கட்லரி, தொலைநோக்கி , கண் கண்ணாடிகள், பைனாகுலர்கள், எண்ணெய் பவுடர், கொக்கோ வெண்ணெய், மிருகக் கொழுப்பு, சவர்க்காரம் மற்றும் செயற்கை மலர்கள் போன்றவை இந்தப் பட்டியலில் அடங்கும் வேறு சில பொருட்களாகும்.
இந்தப் 18% வரி அடுக்கு சேவைத் துறையில் உள்ள சில குழுக்களுக்கு பொருந்தும். அவற்றில் ரூ. 7500க்கு மேல் கட்டணம் வசூலிக்கும் ஓட்டல்களுக்கு உள்ளேயே அமைந்துள்ள உணவகங்கள், ரூ.100க்கு அதிகமான திரைப்பட டிக்கெட்டுகள், ஐடி மற்றும் தொலைத் தொடர்பு சேவைகளுடன் பிராண்டட் ஆடைகளும் அடங்கும்.
28% ஜிஎஸ்டி அடுக்கு
28% ஜிஎஸ்டி அடுக்கு இந்தியாவில் மிகவுயர்ந்த ஜிஎஸ்டி விகிதமாகும். இது முக்கியமாக உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மற்றும் ஆடம்பர பொருட்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. பான் மசாலா, டிஷ்வாஷர், எடைபோடும் இயந்திரம், பெயிண்ட், சிமென்ட், சன்ஸ்கிரீன் ஆகியன இந்த அடுக்கில் இடம்பெறும் பொருட்களில் சிலதாகும்.
ஆட்டோமொபைல் தொழில் சரிந்து வரும் இந்த சமயத்தில் ஹேர் கிளிப்பர்களுடன் ஆட்டோமொபைல்களும் மோட்டார் சைக்கிள்களும் இந்த அடுக்கின் ஒரு பகுதியாக உள்ளது அதிருப்திக்கு வழிவகுத்துள்ளது.
அறை வாடகையாக ஒரு இரவுக்கு ரூ.7500க்கு அதிகமாக கட்டணம் விதிக்கும் 5 நட்சத்திர ஓட்டல்கள், திரைப்பட டிக்கெட்டுகள், சூதாட்ட விடுதிகள் மற்றும் பந்தயங்களுக்கும் இந்த 28% ஜிஎஸ்டி விகிதம் பொருந்தும்.
37 வது ஜிஎஸ்டி கவுன்சில் ஜிஎஸ்டி வரி விகிதத்தில் சில திருத்தங்களை வெளியிட்டது, அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
37வது ஜிஎஸ்டி கவுன்சிலின் முக்கிய தீர்மானங்கள்
- ரூ. 1000க்கு குறைவாக கட்டணம் வசூலிக்கும் ஓட்டல்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படாது.
- துணை ராணுவப் படைகளுக்கான குழு காப்பீட்டுத் திட்டங்களுக்கு ஜிஎஸ்டி இல்லை.
- ஏற்றுமதி துறையை ஊக்குவிக்கும் பொருட்டு நகை ஏற்றுமதிக்கு ஜீரோ ஜிஎஸ்டி.
- வெட்டப்பட்டு பாலிஷ் செய்யப்படும் செமி பிரேசியஸ் கற்களுக்கான வரி விகிதம் 3% லிருந்து 0.25% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
- வைரங்களோடு தொடர்புடைய பணிச் சேவைகளுக்கான ஜிஎஸ்டி விகிதம் முன்பிருந்த 5% லிருந்து 1.5% ஆக ஆக்கப்பட்டுள்ளது.
- பொறியியல் துறையில் மெஷினிங் ஜாப் ஒர்க்குகளுக்கான ஜிஎஸ்டி விகிதம் முன்பிருந்த 18% லிருந்து 12% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
- நாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை ஊக்குவிப்பதற்காக மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி விகிதம் முன்பிருந்த 12% லிருந்து அதிரடியாக 5% க்கு குறைக்கப்பட்டுள்ளது.
காபின் சேர்க்கப்பட்ட பானங்கள் மீதான வரி முன்பிருந்த 12% லிருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதோடு அதன் மீது 12% இழப்பீட்டு செஸ் வரியும் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஜிஎஸ்டி விகிதங்கள் நடைமுறைக்கு வந்து சில ஆண்டுகளே ஆவதால் அது இப்போதும் புத்தம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நிலையிலேயே உள்ளது. வரி அமைப்பையும், எந்தெந்த பொருட்களை எந்த அடுக்கின் கீழ் கொண்டுவருவது என்பதையும் தீர்மானிப்பதில் பல்வேறு விஷயங்கள் பரிசீலிக்கப்படுகிறது.
ஜிஎஸ்டியின் அதிகபட்ச வரம்பான 28% வரி அடுக்கு பரவலாக அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு அதிகமான வரி விகிதம் இந்தியா போன்ற ஒரு வளர்ந்து வரும் நாட்டின் நீண்ட கால வளர்ச்சிக்கு உகந்ததல்ல என்று சிலர் கூறுகின்றனர். இந்த அமைப்பு என்பது இப்போதைய நடைமுறைதான், வருங்கால ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டங்களில் இது மாற்றியமைக்கப்படக்கூடும்.